நல்லாட்சி என்று கூறிக்கொண்டு, இவ் அரசு நாட்டு மக்களை படுமோஷமாக ஏமாற்றி வருகின்றது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நாடு எவ்வித அபிவிருத்தியுமின்றி படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குனவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா தேசிய மக்கள் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா தேசிய தொழிற்சங்கம் ஆகியன ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் வைபவரீதியாக இணைந்து செயல்படும் நிகழ்வு இன்று பண்டாரவளை ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தினேஸ் குனவர்தன எம்.பி. கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். 

“ தற்போதைய நிலையில் ஆட்சி செய்யும் அரசு, வங்கரோத்து ஆட்சியையே நடாத்துகின்றது. எமது நாட்டு வரலாற்றில் இதுபோன்றதோர் அரசு  என்றுமே இருந்ததில்லை. 

இவ்வரசில் ஸ்தீரமானதோர் நிலையின்மையினால், சர்வதேச நாட்டினர் எவரும் இங்கு முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். 

ஆனால், ஆட்சியாளர்களோ, சர்வதேச நாடுகள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு வர ஆயத்தமாகவுள்ளனரென்று தம்பட்டம் அடிக்கின்றனர். 

இது வரை எவருமே, எமது நாட்டில் முதலீடுகள் எதுவும் செய்யவில்லை. 

எமது நாட்டின் மத்திய வங்கியில் பில்லியன் கணக்கான ரூபா நிதியில் ஊழல் , மோசடி  இடம்பெற்றிருப்பமை, பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடாத்த தயங்குகின்றது. நாடு வங்கரோத்து நிலையினை எதிர்கொண்டுள்ளது. 

வெகுவிரைவில் அரிசிக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவப்போகின்றது.