இந்தியாவின் நிவாரணம் வரவேற்பும் எதிர்ப்பும்

Published By: Digital Desk 3

24 May, 2022 | 11:01 AM
image

- ம. ரூபன்-

1987 ஜூன் ஜே.ஆர்.அரசின் பொருளாதாரத்தடை, யுத்தம் காரணமாக துன்பப்பட்ட யாழ்.குடா மக்களுக்கு மூன்று கப்பல்களில் அத்தியாவசிய உணவு,மருந்துகளை இந்தியா அனுப்பியது. 2008 ஒக்டோபர் 15 இல் வன்னி மக்களுக்கும் 1,700 தொன் நிவாரண பொருட்களையும் அனுப்பியது. தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி 10 இலட்சம் ரூபாவையும் தி.மு.க.உறுப்பினர்களும் ஒரு தொகையை நிவாரண நிதியாக வழங்கினார்கள்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள  இலங்கை மக்களுக்கு  135 கோடி ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை அனுப்பும் தீர்மானித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 29 சட்டப்பேரவையில் முன்வைத்தபோது  எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தன.

தி.மு.க. 1 கோடி ரூபா.சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு நாள் சம்பளம். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 50 இலட்சம் ரூபா.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி 10 இலட்சம் ரூபா என பலரும் வழங்கினார்கள். 

பிரதமர் ராஜீவ் காந்தி 1987 இல் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் அளித்ததை அழகிரி நினைவுபடுத்தினார்.

இந்திய மதிப்பில் 40 தொன் அரிசி (80 கோடி ரூபா), 137 தொன் மருந்து (28 கோடி ரூபா), 50 தொன் பால் மா (15 கோடி ரூபா) ஆகியனவே அனுப்பப்படவுள்ளன.முதல் கட்டமாக 9000 மெ. தொன் அரிசி, 50 மெ.தொன் பால் மா, 25 மெ.தொன் அத்தியாவசிய மருந்துகள் ஏற்றிய TAN BINH -99 என்ற கப்பல் 18 ஆம் சென்னையில் இருந்து புறப்பட்டு 22 இல் கொழும்பை வந்தடைந்தது.

2021 ஜனவரி கொவிட் ஆட்கொல்லி நோய்  இந்தியாவில் இலட்சக்கணக்கானவர்களை பலிகொண்ட நிலையில் அங்கு தயாரிக்கப்பட்ட அஸ்ரா சேனேகா கொவிசீல்ட் 3 இலட்சம் தடுப்பூசிகளை இலவசமாக விமான மூலம் அனுப்பி வைத்ததுடன் இன்றைய பொருளாதார பிரச்சினைக்கும நிதி உட்பட பல்வேறு உதவிகளை இந்தியா அளித்து வருகிறது.

பௌத்த பேரினவாதிகள் இந்தியாவை சந்தேக கண்ணோடு பார்ப்பதுடன் ஆக்கிரமிக்கிறது என்று பிரசாரம். இலங்கை இந்தியாவுடன் ஒப்பந்தங்கள் செய்தால் எதிர்ப்பு ஊர்வலம். இந்தியாவின் இந்த நிவாரண உதவியை மக்கள் விடுதலை விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன் ஆக்கிரமிப்பு  நடவடிக்கை என யாழ்ப்பாணத்தில் கூறியுள்ளார்.

தமிழ் நாட்டில் இருந்து நிவாரணம் வருவதால் இதற்கும் இனவாத கருத்துக்களை சிலர் கூறலாம். 1970 களில் இலங்கைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்ட சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். தி.மு.கவை தடை செய்யுமாறு சிலர் கோரினார்கள். தமிழக தி.மு.க வுடன் தொடர்பு இல்லை என இவர்கள் கூறினார்கள்.

1987 மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இந்திய உணவுப்பொருட்கள்,உடுப்பு, பிடவைகளை வாங்கவேண்டாம் என எச்சரித்து தெற்கில் பிரசாரம் செய்து விளம்பரங்களை ஒட்டினார்கள். 1971 அவர்களின் போராட்டத்தை ஒடுக்க சிறிமாவோ அரசுக்கு இந்திய படை உதவியிருந்ததே காரணம்.

1987 இல் இந்திய நிவாரணம் யாழ்.குடா மக்களுக்கு வழங்கியபோது நிலவிய அரசியல் சூழல் வேறு. அன்று யாழ். மக்கள் 5 மாதங்களாக அரச பொருளாதாரத் தடைகள் போரினால் பெரும் துன்பங்களை அனுபவித்ததால் மனிதாபிமானமாக செஞ்சிலுவைச்சங்க கப்பல்களில் நிவாரணத்தை அனுப்புவதற்கு இந்திய மத்திய அரசு தீர்மானித்தது.

இலங்கை அரசின் அனுமதியை ஜூன் 1 இல் இந்திய உயர் ஸ்தானிகர் ஜே.என்.டிக்சிற் கேட்டபோது நேரடியாக வடக்கே அனுப்ப முடியாது,இலங்கை அரசின் ஊடாகவே வழங்கப்படவேண்டும் என அவருக்கு கூறப்பட்டது.

கொழும்புக்கு நிவாரணத்தை கொண்டுவந்து  வடக்கே அனுப்ப வீண் செலவும், கால தாமதம் என இந்தியா தெரிவித்தது.

இன்று முதல்வர் ஸ்டாலினைப்போலவே அன்றும் முதல்வர் எம்.ஜி.ஆரும் யாழ் மக்களின் நிலைமைகளை பிரதமர் ராஜீவ் காந்தியின் கவனத்துக்கு  கொண்டுவந்தார். தி.மு.க.,காங்கிரஸ் ஏனைய கட்சிகளும் யாழ். மக்களுக்கு மத்திய அரசு உதவக்கோரினார்கள்.

வடமராட்சியில் புலிகளை ஒழிக்க "லிபரேசன் ஒப்பரேசன்"  இராணுவ நடவடிக்கையை ஜே.ஆர்.அரசு 1987 மே 27 ஆரம்பித்து ஜூன் 1 முடித்து குடாநாட்டில் அடுத்த போரை ஆரம்பிக்க ஏற்பாடுகளை செய்தது.

பொருளாதாரத்தடையும்,போரும்  மக்களை பெரிதும் பாதிக்கும், போரை நிறுத்துமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை  நிராகரித்தது.

1987 ஜூன் 3  இந்திய செஞ்சிலுவை சங்க 19 படகுகளில் செஞ்சிலுவை கொடியுடன் இராமேஸ்வரத்தில் இருந்து 40 தொன் அத்தியாவசிய உணவுப்பொருட்கள்,மருந்து வகைகளை எடுத்து வந்தபோது கச்சதீவு எல்லையில் 10 மைல் தொலைவில் இலங்கை கடற்படை எடித்ரா கப்பலும் 3 ரோந்துப் படகுகளும் தடுத்து நிறுத்தி அவற்றை திருப்பி அனுப்பின.இந்தியப் படகுகளில் பத்திரிகையாளர்களும் அழைத்துவரப்பட்டனர்.

தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் கூட்டுப்படை தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்கவும் வடக்கு கடற்படைத தளபதி மொஹான் சமரசிங்கவுக்கு இந்திய படகுகளை எமது கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கவேண்டாம் என விடுத்த உத்தரவையடுத்து எடித்ரா கப்பல் காப்டன் முனசிங்க இந்திய படகுகளின் பொறுப்பதிகாரியுடன் வானொலியில் தொடர்புகொண்டு அதனை கூறினார்.

இப்படகுகள் முன்னேறினால் தடுப்பதற்கு எந்த வழியையும் பயன்படுத்துமாறு தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முனசிங்க கூறினார். 3 மணி நேரமாக நங்கூரமிட்டிருந்த செஞ்சிலுவைப்படகுகள் திரும்பிச்சென்றன.

பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களின் அவசர தேவைக்கு நிவாரண பொருட்கள் சென்றடைவதை இலங்கை அரசு  தடுத்ததை இந்திய வெளியுறவு அமைச்சின் ஜி.பார்த்தசாரதி கண்டித்தார்.

இந்திய படகுகள் வரவை கண்டித்து பல பிக்குமார் ஊர்வலமாக சென்று இந்திய உயர்ஸ்தானிகர் டிக்சிற்றிடம் மகஜரை கையளித்தனர்.இந்தியாவின் மனித நேயப்பணி என அவர் கூறினார்.கடற்படை திருப்பி அனுப்பியதை சிங்கள ஆங்கில பத்திரிகைகள் பாராட்டி செய்தி. பட்டாசு வெடி கொளுத்தினார்கள்.

போரில் வெற்றி கிட்டும் தருணத்தில் இந்தியா தலையிடுகிறது என்றும்,சீக்கிய தீவிரவாதிகளுக்கு இலங்கை நிவாரண உதவி வழங்கினால் இந்தியா அனுமதிக்குமா என பிரதமர் பிரேமதாச கேள்வி எழுப்பி,பாராளுமன்றத்தை அவசரம் கூட்டுமாறும் தெரிவித்தார்.

செஞ்சிலுவை படகுகள் திரும்பியது இந்தியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. விமான மூலமாக அனுப்புவதற்கு  முடிவு எடுக்கப்பட்டு ஜூன் 4 டில்லியில் இலங்கை உயர் ஸ்தானிகர் பேர்னாட் திலகரட்னா வெளிவிவகார அமைச்சுக்கு மாலை 3 மணிக்கு அழைக்கப்பட்டு  வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங்கினால் அந்த முடிவு குறித்தும் எதிராக இலங்கை விமானப்படை செயற்பட்டால் பாதுகாப்புக்கு செல்லும் இந்திய போர்  விமானங்களின்  பதிலடி கிடைக்கும் என்றும்  கூறப்பட்டது.

"ஒப்பரேசன் பூமாலை" என்ற பெயரில் 3.55 பெங்களூர் விமானத்தளத்தில் இருந்து பாதுகாப்புக்கு 5 பிரான்ஸ் மிக் போர் விமானங்களும்,25 மெ.தொன் உணவுப் பொருட்களை ஏற்றிய 5 ரஷ்ய-அன்ரனோவ் An 32 ரக விமானங்களும் புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் பரசூட் மூலமாக உணவுப்பொருட்களை யாழ்.குடாநாட்டில் வீசின.வெளிநாட்டு,உள்நாட்டு பத்திரிகையாளர்களும் விமானத்தில் பயணித்தனர்.

பிரதமர் பிரேமதாச இந்தியாவின் இச்செயலை விவாதிக்க சார்க் நாடுகள் கூட்டத்தை கூட்டவேண்டும்.இந்திய படையெடுப்புக்கான ஒத்திகை.போடப்பட்ட உணவுகள் காடுகளில் விழுந்தன என்றார்.எதிர்க்கட்சித்தலைவர் அனுரா பண்டாரநாயக்கா இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான அத்துமீறல் எனக்கண்டித்தார்.

வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீட் ஐ.நா.பொதுச்செயலாளருக்கு முறையிட்டு பாதுகாப்பு சபையில் முன்வைக்க கோரினார்.இந்தியாவில்  பட்டினியால் பலர் வாடுகின்றனர்  என அமைச்சர் அத்துலத் முதலி கூறினார். அமைச்சர் எஸ்.தொண்டமான் இந்திய அரசின் இப்பணியை பாராட்டினார்.இன்றைய பிரதமர் ரணில் அன்று அமைச்சர்.

இதனைத்தொடர்ந்து இந்தியா கப்பல் மூலம் நிவாரணப்பொருட்களை அனுப்புவது குறித்து இலங்கையுடன் பேச்சுக்களை ஆரம்பித்தது. எம்.வி.ஐலண்ட் பிறைட், எம்.வி.பொறுக்கா-2, சீ.பி.சிறி வஸ்ரோ ஆகிய மூன்று கப்பல்களில் நிவாரணப்பொருட்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப இலங்கை அரசு ஒத்துழைத்தது. சில தினங்களால் இக்கப்பல்களில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள்,மருந்து வகைகள்,பால்மா காங்கேசன்துறை  துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

யாழ்.குடாநாட்டு மக்களுக்கு கூட்டுறவு சங்கங்களால் பகிர்ந்து அளிக்கப்பட்டன.இக்கப்பல்களில் இந்திய செஞ்சிலுவை அதிகாரிகளும் வந்தனர்.இலங்கை கடற்படை எல்லையில் பாதுகாப்பாக அழைத்து வந்தது.

தற்போது இந்தியா இலவசமாக வழங்கிய அத்தியாவசிய பொருட்கள் முறையாக பாரபட்சமின்றி சகலருக்கும் வழங்கப்படுமா என்று பலரும் கேட்கின்றனர்.கடந்த ஆண்டு கொவிட் நிவாரண கொடுப்பனவு பலருக்கு கிடைக்காது வீதிகளிலும்,கிராம சேவையாளர் அலுவலகத்திலும் போராடினார்கள்.அந்த நிலைமை ஏற்படாது புதிய பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22