மாற்றம் உருவாகிறதா?

Published By: Digital Desk 5

22 May, 2022 | 03:02 PM
image

கபில்

“தமிழர்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறைகளும், படுகொலைகளும், காணாமல் ஆக்கப்படுதல்களும், மனித உரிமை மீறல்களும், சிங்கள மக்களுக்கு எதிராகவும் திரும்பத் தொடங்கிய நிலையில் தான், மாற்றங்கள் தென்படத் தொடங்கியிருக்கின்றன”

போர் முடிந்து 13 வருடங்களுக்குப் பின்னர், இலங்கையில், பல புதிய மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன.

2009 இல் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தருணத்தில் இருந்து, அது தமிழருக்கு எதிரான போரின் வெற்றியாகவே கொண்டாடப்பட்டது.

தமிழ் மக்கள், அழிக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டு, அங்கங்களை இழந்து, வீடுகள், சொத்துக்களை இழந்து நிர்க்கதியாக நிறுத்தப்பட்ட அந்த தருணத்தில், சிங்கள மக்கள் அதனை பெருவெற்றியாக கொண்டாடினார்கள்.

ஒரே மொழியைப் பேசுகின்ற முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோரும் கூட, அந்த துயரிலும், தமிழ் மக்களுடன் ஒன்றித்து நிற்கவில்லை. 

போர் வெற்றி கொண்டாட்டங்களிலேயே ஈடுபட்டனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற அடையாளத்துடன், தமிழர்களுக்கு எதிரான போராகவே முன்னெடுக்கப்பட்டது,

ஈவிரக்கமின்றி அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, வாளாதிருந்தவர்கள் இப்போது, தங்களின் தவறுகளை உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழர்களின் வலி அவர்களுக்கு இப்போது கொஞ்சமேனும் புரியத் தொடங்கியிருக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னரும், அளுத்கம, போன்ற வன்முறைகளுக்குப் பின்னரும், முஸ்லிம்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது.

இப்போதைய ஆட்சியில், சிங்கள மக்களின் மத்தியிலும் அத்தகைய மாற்றங்கள் உருவாகத் தொடங்கியிருக்கின்றன.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட போது கூட, சிங்கள மக்கள் தனித்து நின்றே அவரைத் தெரிவு செய்தனர்.

இனவாத உணர்வுகளைக் கிளறி, சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை குறிவைத்து செய்யப்பட்ட பிரசாரங்களுக்கு, மயங்கியவர்கள், இன்று தமது தெரிவு தவறாகிப் போய் விட்டதை உணர்கிறார்கள்.

அதுமாத்திரமன்றி, தங்களுக்கு விழுகின்ற இந்த அடி மற்றவர்கள் மீது எவ்வாறு விழுந்திருக்கும் என்பதையும், தாங்கள் பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும் நெருக்கடிகளை போர்க்காலத்தில் தமிழர்கள் எவ்வாறு எதிர்கொண்டிருப்பார்கள் என்பதையும், அவர்களும் உணர்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

போர் வெற்றி விழாக்கள் கொண்டாடப்பட்டு, தமிழ் மக்களின் மனங்களில் ஏறி மிதித்த காலம் மாறியிருக்கிறது.

முப்படைகளின் போர்க்கலன்களும், படையினரும் அணிவகுத்துச் சென்ற காலிமுகத்திடல் வீதிகளில், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களை நினைவு கூரும் பேரணி நடந்திருக்கிறது.

கோட்டா கோ கமவுக்கு முன்பாக, பெருமளவில் என்றில்லாவிட்டாலும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

இது சிறிய மாற்றம் தான். ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராகவும், ராஜபக்ஷவினருக்கு எதிராகவும், சிறிது சிறிதாக தொடங்கிய போராட்டங்கள் தான் அவர்களின் இருப்பை அசைத்துப் பார்த்தது.

அதுபோலத் தான், இப்போதைய மாற்றங்கள் சிறிதாயினும், அது படிப்படியாக பெரிதாக கூடும்.

போர் வெற்றியை தங்களின் அரசியல் வெற்றிக்கான மூலதனமாக்கிய ராஜபக்ஷவினரின் ஆட்சியின் எச்சங்கள் இன்னும், விட்டுப்போகாத நிலையில் தான் இந்த மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன.

போர் முடிந்த பின்னர், வடக்கு, கிழக்கில் இருந்த தமிழரின் அத்தனை போர் நினைவுச் சின்னங்களும் நிர்மூலமாக்கப்பட்டு, அவற்றின் மீது படைத்தளங்கள் கட்டியெழுப்பப்பட்டன. நினைவுகூரலுக்காக கூட நெருங்க முடியாத இடங்களாக அவை மாற்றப்பட்டன.

அதனை மீறி நினைவுகூர முற்படுபவர்கள் படைபலத்தைக் கொண்டும், நீதிமன்ற உத்தரவுகளைக் கொண்டும் தடுக்கின்ற பாரம்பரியமே இதுவரை காணப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், இத்தகைய நினைவுகூரல்களுக்கு தடைகள் தளர்த்தப்பட்டிருந்த போது, அதனை பாதுகாப்புக் குறைபாடாக, பயங்கரவாதத்தின் மீள் எழுச்சியாக, விடுதலைப் புலிகளின் மீள்வருகையாக பிரசாரம் செய்து, ஆட்சிக்கு வந்தவர் தான் கோட்டாபய ராஜபக்ஷ.

அவர் ஆட்சிக்கு வந்த பின்னர், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்க, நீதிமன்றங்களின் மூலம் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை மட்டக்களப்பு கிரான் கடற்கரையில் நினைவுகூர்ந்தவர்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டு அண்மையில் தான் விலக்கிக் கொள்ளப்பட்டு, விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவு கூருவதற்குக் கூட கோட்டாவின் அரசாங்கம் அனுமதிக்கத் தயாராக இருக்கவில்லை.

ஆனால் இன்று அவர்களின் ஆட்சியிலேயே, நினைவேந்தல்கள் நடத்தப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. 

முள்ளிவாயக்காலில் மட்டுமன்றி, ஜனாதிபதி செயலக நுழைவாயிலுக்கு முன்பாகவும், இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. இது ஒரு முக்கியமான மாற்றம். 

தமிழர்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறைகளும், படுகொலைகளும், காணாமல் ஆக்கப்படுதல்களும், மனித உரிமை மீறல்களும், சிங்கள மக்களுக்கு எதிராகவும் திரும்பத் தொடங்கிய நிலையில் தான், மாற்றங்கள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.

போர் மட்டும் இனங்களைப் பிரிக்கவில்லை. ஏற்கனவே பிளவுபட்டிருந்த இனங்களை அது இன்னும் தொலைதுரத்துக்கு தள்ளிக் சென்றது.

ஆனால், பொருளாதார நெருக்குவாரங்களால், போர் வெற்றியைக் கொண்டு அரசியல் வெற்றியில் குளித்தவர்களின் சாயம் அம்பலமாகிய போதும், இனங்களை நெருக்கி வரச் செய்திருக்கிறது.

தங்களின் கடந்த கால முடிவுகளை அவர்கள் மீள் பரிசீலனைக்குட்படுத்துகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மாற்றம் ராஜபக்ஷவினரின் கண்ணுக்கு முன்பாக மட்டும் நடக்கவில்லை. அவர்கள் ஆட்சியில் உள்ள போதே நடக்கத் தொடங்கியிருக்கிறது.

இனங்களைப் பிளவுபடுத்தி அரசியல் நடத்தி, இனவாத சேற்றில் குளித்து மகிழ்ந்தவர்கள், ஆட்சியில் இருக்கின்ற போதே, இது நடக்கிறது.

இதனை அவர்களால் தடுக்க முடியாது போயிருக்கிறது. ஏனென்றால், அவர்களின் உண்மை, முகம் வெளிப்பட்டு விட்டது.

இதற்கு மேலும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டால், இருப்பதையும் இழந்து ஓட வேண்டிய நிலை வரும் என்ற அச்சம் அவர்களுக்கு தோன்றியிருக்கிறது.

பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகளை தோற்றுவித்தன. அந்த நெருக்கடிகள் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தின. 

அதுபோலவே சில சாதகமான மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவ்வாறானதொரு சாதகமான மாற்றமாக இதனைக் குறிப்பிட முடியும்.

இனவாதமும், இனக்குரோதமும், கோலோச்சிய காலம் வீழ்ச்சி காண்பதற்குரிய சாதகமானதொரு அடையாளமாக இதனைக் கொள்ள முடியும்.

அதற்காக எல்லாமே அடியோடு மாறிவிட்டதாக அர்த்தமில்லை.

இனவாத சக்திகளும், குரோதங்களையும், விரோதங்களையும் ஏற்படுத்தும் சக்திகளும் இப்போது பலவீனமடைந்து போயிருக்கின்றன. 

இத்தகைய தருணத்தில் தங்களின் கைவரிசையைக் காட்டினால், பேராபத்து விளையும் என்பதால் தான் அவை கமுக்கமாக இருக்கின்றன.

அவ்வாறான சக்திகள் மீளுயிர் பெறாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.

தமிழ் மக்களுக்கு எதிரான போரில் அநீதிகள் இழைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் நிலை உருவானால் தான் நிலையான அமைதி ஏற்படும்.

பொறுப்புக்கூறலும், உண்மையை ஒப்புக் கொள்வதும், அநீதிகளுக்கு நியாயம் பெறுவதற்கு முக்கியமான தேவைகள்.

அவற்றை அடைவதற்கு, இலங்கை எந்தளவுக்குப் பயணம் செய்யத் தயாராக இருக்கிறது என்பதை இப்போதைய மாற்றங்கள், தான் தீர்மானிக்கும்.

இந்த மாற்றங்கள் மேலும் வலுவடைந்து தமிழருக்கு நியாயமான தீர்வையும், உரிமைகளையும் பகிரக் கூடிய நிலையை ஏற்படுத்தினால் தான், அது நிலைபேறானதாக இருக்கும்.

அத்தகையதொரு நிலையை நோக்கி இந்த மாற்றங்கள் வழிப்படுத்தப்பட வேண்டும். வழி நடத்தப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49