தமிழ்ப் பிரதிநிதிகள் முன்னெத்துவரும் அரசியல் யாருக்கானது ?

Published By: Digital Desk 5

22 May, 2022 | 01:24 PM
image

சி.அ.யோதிலிங்கம்

பாராளுமன்றத்தில் சுமந்திரன் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கு நிலையியற்கட்டளைகளை நிறுத்திவைக்கும் பிரேரணை 51மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 68வாக்குகளும் எதிராக 119வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 

சிங்களக் கட்சிகளும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் பலர் இருக்கத்தக்கதாக சுமந்திரனே பாராளுமன்றத்தில் இந்தப் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த லக்ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்திருந்தார்.  சுமந்திரனை தமிழ் மக்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்து அனுப்பியமை தமிழ் மக்களின் விவகாரங்களை பாராளுமன்றத்தில் முன்னெடுப்பதற்கா? அல்லது சிங்களக் கட்சிகளின் போட்டி அரசியலுக்குள் தமிழ் மக்களையும் மாட்டி விடவா? என்ற கேள்வியையும் மேற்படி விவகாரம் எழுப்பியுள்ளது. 

நிச்சயமாக தோல்வியடையும் எனத்தெரிந்திருந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் சுமந்திரன் தானும் மூக்குடைபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் வழியே தமிழ் மக்களையும் அவமானப்படுத்தியுள்ளார். 

ஏற்கனவே பிரதிசபாநாயகர் தெரிவின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பாக்கீர் மாக்காரும் பின்னர் ரோஹினி கவிரத்னவும் தோற்கடிக்கப்பட்டதால் இந்தப் பிரேரணை தோல்வியைத் தழுவும் என்பது அனைவரும் எதிர்பார்த்ததொன்றே.

இதனை நன்றாக அறிந்திருந்த பின்னரும் சுமந்திரன் பிரேரணையை சமர்ப்பித்தமை யாரை திருப்திப்படுத்துவதற்காக என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. 

இதில் மிகவும் நகைச்சுவையான விடயம் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதனால் பிரதமரைக் கண்டித்து சுமந்திரன் உணர்ச்சி பொங்கும் வகையில் ஆற்றிய உரை தான்.

தம்மைத் தெரிவு செய்த தமிழ் மக்களின் விவகாரங்களில் கூட சுமந்திரன் இவ்வாறு உணர்ச்சி பொங்கும் வகையில் உரையாற்றியது கிடையாது. 

கோட்பாட்டு ரீதியாக சிங்கள தேசத்தின் இரண்டு பிரதான அணிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் அல்லர். சுதந்திரத்திற்குப் பின்னரான நீண்ட பெரிய வரலாறு அந்த அனுபவத்தையே தமிழ் மக்களுக்கு தந்திருக்கின்றது.

மாறாக இருதரப்பும் கையாளப்பட வேண்டியவர்களாக இருப்பதனால் ஒரு தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த்தரப்பு தானாகவே சென்று மாட்டுப்படக்கூடாது.  

தவிர தற்போதைய நிலையில் தமிழ் மக்களின் அரசியல் இலக்கை தெளிவாக வரையறுத்து. அதை நோக்கி அரசியலைச் செய்ய வேண்டுமே தவிர சிங்கள அரசியலின் போக்குகளுக்கேற்ப அதன்போட்டி அரசியலுக்குள் நின்று நாம் அரசியல் செய்யக்கூடாது.

தமிழ் மக்களின் விருப்பம் விருப்பமின்மைக்கு அப்பால் அரசியல் அதிகாரம் தற்போதும் ராஜபக்ஷக்களிடமே இருக்கிறது. 

தற்போது அந்த அதிகாரத்தின் ஒருபகுதியை செயற்படுத்தும் முகவராக ரணில் எழுச்சியடைந்திருக்கின்றார். இங்கு ரணிலின் முதலாவது தெரிவு தற்காப்பு நிலையில் இருக்கும் ராஜபக்ஷக்களை காப்பாற்றுவது தான். ரணிலின் இருப்பும் ராஜபக்ஷக்களின் தயவிலேயே தங்கியுள்ளது.

தன்னுடைய இருப்பை பாதுகாப்பதற்கும் ராஜபக்ஷக்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் ரணில் இருக்கின்றார். இவற்றையெல்லாம் மீறி ரணில் பிரேரணைக்கு ஆதரவாக இருப்பார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமானதாகும்.

எனவே உண்மையான அதிகாரம் ராஜபக்ஷக்களிடமும், முகவர் அதிகாரம் ரணிலிடமும் இருப்பதனால் இரு தரப்பையும் தமிழ் மக்களின் நிலை நின்று கையாண்டு தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதே அவசியமானதாகும்.

நெருக்கடி நிலையை கொஞ்சமாவது தணிக்கச் செய்வதற்கு ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் ஆதரவு தேவையாக உள்ளது. தமிழ் மக்களினதும் ஆட்சியாளர்களினதும் நலன்கள் சந்திக்கும் புள்ளி இது தான். 

இலங்கைத்தீவு தற்போது சந்திக்கும் பிரதான நெருக்கடிக்கு மூலகாரணம் இனப்பிரச்சினையும் அதன் பக்க விளைவுகளுமேயாகும்.

பெருந்தேசியவாதிகள் இந்த உண்மையை நிலவிரிப்புக்குள் தள்ளிவிட்டு ஏனைய விடயங்களையே காரணங்களாகக் கூற விளைகின்றனர். 

இனப்பிரச்சினையை தீர்த்து விட்டால் அரசின் செலவினம் சரி பாதியாகக் குறைந்து விடும். கொள்ளவுக்கு மேலான இராணுவத்தை வைத்திருந்து பராமரிக்க வேண்டிய தேவையுமில்லை. தமிழ் மக்களின் தாயகத்தை  ஆக்கிரமிப்பதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிட வேண்டிய தேவையுமில்லை. 

இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் புலம்பெயர் தமிழர்களும் அதிகளவில் இலங்கையில் முதலிட முன்வருவர். இன்று புலம் பெயர் நாடுகளில் சிறந்த வர்த்தகர்களாக பலர் வளர்ச்சியடைந்துள்ளனர்.

பலர் உலக ரீதியாக வர்த்தகத்திலும் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களைவிட தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் பலரும் தமிழ்ப் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தயாராக இருக்கின்றனர். 

இவர்களின் முதலீடு வருமாக இருந்தால் தமிழக சந்தை வாய்ப்புக்களுக்கான கதவுகளும் திறக்கப்படலாம். தவிர புலம்பெயர் மக்களில் துறைசார் நிபுணர்களும் பலர் உள்ளனர் அவர்களின் நிபுணத்துவ சேவைகளையும் பெற்றக்கொள்வதற்கு வாய்ப்புக்கள் உருவாகும்.

இனப்பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது. ஆயுதப்போராட்டத்தின் தோல்வியிலும் தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றி இதுதான்.

இச்சர்வதேச மயமாக்கலினால் இலங்கை எப்போதும் பல பக்கங்களிலிருந்தும் அழுத்தங்களைச் சந்திக்க வேண்டிவரும்.

கனடா பாராளுமன்றம் மே 18ஆம் திகதியை இனஅழிப்பு தினமாக பிரகடனப்படுத்தியிருக்கின்றமை இங்கு முக்கியமான விடயமாகும். சிற்றெறும்புகள் போல தமிழ் மக்கள் எல்லா இடங்களிலும் கடித்துக்கொண்டேயிருப்பர். 

இனப்பிரச்சினை சர்வதேச மயமாகிவிட்டதால் தமிழ் மக்களுக்கு ஆயுதப்போராட்டம் தற்போது அவசியமில்லை. உலகு தழுவிய அரசியல் போராட்டத்தினூடாகவே முன்னேறிச் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.

இனப்பிரச்சினை தொடர்ந்தால் வரும் காலத்தில் ஆயுதப் போராட்டம் உருவாகாது என்றும் கூறிவிட முடியாது. 

ஆனால் தற்போது இருக்கும் மூத்த தலைமுறை மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை விரும்பவில்லை. அரசியல் செயல்திட்டங்களினூடாக இலக்கை அடைந்துகொள்ளவே அது முயற்சிக்கின்றது.

இலக்கில் கூட தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டுவிட்டு “சுய நிர்ணயமுடைய சமஷ்டி” கட்டமைப்புக்குள் வாழ்வதற்கு விரும்புகின்றது.

இந்த உண்மைகளையெல்லாம் தமிழ் அரசியல் தலைமை சிங்கள தேசத்திற்கு அவர்கள் புரியத்தக்க வகையில் வெளிப்படுத்த வேண்டும்.

இதனூடாக வலிமையான பேரம்பேசலுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். சிங்கள தேசத்தை ஜனநாயகப்படுத்துவதற்கு சிங்கள மக்கள் பல பிரதிநிதிகளை தெரிவுசெய்து அனுப்பியுள்ளனர்.

அவர்கள் அதனைப் பார்த்துக்கொள்வர். அதற்காக சுமந்திரன் தலையால் அடித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

சிங்கள தேசத்திற்கு ஜனநாயகம் வந்தாலும் தமிழ் மக்களுக்கு அது கிடைக்காது. இது அரசாங்கம் பற்றிய பிரச்சினையல்ல. அரசு பற்றிய பிரச்சினை.

சிங்கள அரசுருவாக்கம் பெருந்தேசிய கருத்து நிலைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசுருவாக்கமாக இருப்பதனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் சிங்கள தேசத்தின் ஜனநாயகம் தமிழ் மக்களுக்கு வராது. 

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஜனாதிபதியை பதவி நீக்க முடியாது. குற்றப் பிரேரணை மூலமே பதவி நீக்க முடியும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றி அரசியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுக்க மட்டுமே உதவும். சரி பேச்சுக்கு அரசியல் அழுத்தங்களினால் ஜனாதிபதி பதவி விலகி விடுவார் என்று வைத்துக் கொள்வோம்.

புதிய ஆட்சியில் தமிழ் மக்களுக்கு பாலும் தேனும் கிடைக்கப்போகின்றதா? ரணில் - மைத்திரியுடனான தேனிலவுக்காலம் தமிழ் மக்களுக்கு தேனையும், பாலையும் அள்ளித் தந்ததா?

ஆட்சிமாற்றப் பிரச்சினை தமிழ்த் தேசத்தின் பிரச்சினையல்ல. அது சிங்கள தேசத்தின் பிரச்சினை. அதனைச் சிங்கள மக்கள் பார்த்துக் கொள்ளட்டும்.

தமிழ்ப் பிரதிநிதிகளின் கடமை தமிழ்த்;தேசத்தின் இறைமையை மீட்டெடுப்பதே. இந்தக் கடமையினை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்தனர்.

இந்தக் கடமையை பிரதிநிதிகள் சரிவர ஆற்றாவிட்டால் அல்லது ஆற்றத் தெரியாவிட்டால் அவர்கள் விலகி புதிய தலைமுறையினருக்கு வழிவிடுவதே தமிழ் அரசியலுக்கு ஆரோக்கியமாகதாக இருக்கும். 

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தமிழ் மக்களையும் கொஞ்சம் கொஞ்சமாக வாட்டத் தொடங்கியுள்ளது. வரும் சில மாதங்களில் இப்போக்கு மேலும் அதிகரிக்கலாம்.

இந்நிலையில் எமது மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உண்டு. ஆனால் துரதிஷ்டம் தமிழ்த் தலைமையிடம் இது தொடர்பாக எந்தத் திட்டங்களும் இல்லை. குறைந்த பட்சம் அதற்கான உரையாடல் கூட ஆரம்பிக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48