(எம்.எப்.எம்.பஸீர்)

தலங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  ஹோகந்தர மங்கள மாவத்தையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று நண்பகல் ஒரு மணியளவில் பதிவானதாகவும், 24 வயதுடைய திஸாநாயக்க எனும் அறியப்படும் குறித்த இளைஞன் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு விமல் வீரவன்சவின் வீட்டிலிருந்து கொன்டு செல்லப்பட்டதாகவும் அப்போதும் அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையிலேயே இந்த விடயம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் இன்று மாலை விமல் வீரவன்சவின் மனைவியிடம் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக விமலின் வீட்டில் தங்கியிருந்துள்ளதாக கூறப்படும் மேற்படி இளைஞன் விமல் வீரவன்சவின் மகனான விபுர்த்தி விஸ்வஜித் வீரவன்சவின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் நேற்று  இரவு மேற்படி இளைஞன் விமலின் வீட்டில் தங்கியிருந்துள்ள நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். .

எவ்வாறாயினும் மேற்படி இளைஞனின் தந்தையும் இதே பாணியில் திடீரென உயிரிழந்ததாகவும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக பின்னர் தெரியவந்ததாகவும் உயிரிழந்த இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் நாளை ஸ்ரீ ஜயவர்தன புர வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.