20 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டி : மருதானை புனித சூசையப்பர் கல்லூரியும் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மட பாடசாலையும் சம்பியன்கள்

Published By: Digital Desk 5

20 May, 2022 | 09:51 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் இந்த வருடம் நடத்தப்பட்ட 20 வயதுக்குட்பட்ட ஏ பிரிவுக்கான கூடைபந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மருதானை புனித சூசையப்பர் கல்லூரியும் பெண்கள் பிரிவில் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மட பாடசாலையும் சம்பியனாகின.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை(19) பிற்பகல் நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் றோயல் கல்லூரியை 68 - 52 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் புனித சூசையப்பர் வெற்றிகொண்டு சம்பியனானது.

போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியிலும் கடைசி ஆட்ட நேர பகுதியிலும் புனித சுசையப்பர் ஆதிக்கம் செலுத்தியபோதிலும் 2ஆம், 3ஆம் ஆட்ட நேர பகுதிகளில் றோயல் திறமையை வெள்படுத்தியிருந்தது.

முதலாவது ஆட்ட நேர பகுதியில் முழு ஆதிக்கம் செலத்திய புனித சூசையப்பர் முதல் 5 நிமிடங்களில் 13 - 2 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை அடைந்து  முதல் ஆட்ட நேர பகுதி முடிவில் 24 - 9 என முன்னிலையில் இருந்தது.

ஆனால், 2ஆவது ஆட்ட நேர பகுதியில் இரண்டு அணியினரும் தடுமாற்றம் அடைந்ததுடன் புள்ளிகள் பெறக்கூடிய ஏகப்பட்ட வாய்ப்புகளைத் தவறவிட்டனர். அத்துடன் ரீபவுண்ட் பந்துகளைப் பிடிப்பதில் இரு தரப்பினரும் கோட்டை விட்டனர். 2ஆவது ஆட்ட நேர பகுதியை 9 - 7 என றோயல் தனதாக்கியது.

எனினும் இடைவேளையின்போது புனித சூசையப்பர் 31 - 18 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

மூன்றாவது ஆட்ட நேர பகுதியில் இருதரப்பினரும் அற்புதமாக விளையாடியதுடன் ஆட்டம் விறுவிறுப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.

அப் பகுதியில் இரண்டு அணிகளும் சரிசமமாக விளையாடி தலா 16 புள்ளிகளைப் பெற்றன. எனினும் புனித சூசையப்பர் தொடர்ந்தும் 47 - 34 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

கடைசி ஆட்ட நேர பகுதி மீண்டும் விறுவிறுப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது. எனினும் கடைசி ஆட்ட நேர பகுதியை 21 - 18 என தனதாக்கிய புனித சூசையப்பர் ஒட்டுமொத்த நிலையில் 68 - 52 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியனானது.

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் புனித சூசையப்பர் அணித் தலைவர் ஷெஹான் பெர்னாண்டோ மிகவும் பெறுமதி வாய்ந்த வீரராகத் தெரிவானார்.

திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மட பாடசாலைக்கு இலகுவான வெற்றி

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கண்டி மகாமாயா பெண்கள் பாடசாலையை எதிர்த்தாடிய பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மட பாடசாலை 70 - 39 என்ற புள்ளிகள் அடிப்படையில் மிக இலகுவாக வெற்றிவெற்றிகொண்டு சம்பியனானது.

போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டன. எனினும் 16 - 14 என திருக்குடும்ப பாடசாலை அணி முன்னிலை அடைந்தது.

ஆனால் அடுத்த 3 ஆட்ட நேர பகுதிகளிலும் திருக்குடும்ப பாடசாலை அணியின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது.

இரண்டாவது ஆட்ட நேர பகுதியை 22 - 8 என்ற புள்ளிகள் அடிப்படையில் தனதாக்கிக்கொண்ட திருக்குடும்ப பாடசாலை இடைவேளையின்போது 38 - 2 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின் தொடர்ந்த 3ஆவது ஆட்டநேர பகுதியில் ஆதிக்கம் செலுத்திய திருக்குடும்ப பாடசாலை அப் பகுதியை 19 - 8 என தனதாக்கிக்கொண்டது.

கடைசி நேர ஆட்ட நேர பகுதியில்  மகாமாயா   வீராங்கனைகள் சிறப்பாக தடுத்தாடிய போதிலும் அப் பகுதியிலும் 13 - 9 என முன்னிலை வகித்த திருக்குடும்ப பாடசாலை ஒட்டுமொத்த நிலையில் 70 - 39 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானது.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் மிகவும் பெறுமதிவாய்ந்த வீராங்கனைக்கான விருதை திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மட பாடசாலை அணித் தலைவி ஒனேலா துனுவில வென்றெடுத்தார்.

பி பிரவில் ஓகேஐ, மகளிர் கல்லூரி சம்பியனாகின ஆண்களுக்கான பி பிரிவில் வத்தளை ஓ கே ஐ சர்வதேச பாடசாலை சம்பியன் பட்டத்தை சூடியது.

இறுதிப் போட்டியில் இஸிபத்தன அணியை எதிர்த்தாடிய ஓ கே ஐ சர்வதேச பாடசாலை 55 - 44 என்ற புள்ளிகள் அடிப்படையில் (19 - 9, 14 - 4, 10 - 15, 12 - 16) வெற்றிபெற்று சம்பியனானது.

பெண்களுக்கான பி பிரிவில் கண்டி ஹில்வூட் கல்லூரயை 49 - 30 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் (6 - 7, 14 - 9, 7 - 8, 22 - 6) கொழும்பு மகளிர் (லேடீஸ்) கல்லூரி வெற்றிகொண்டு சம்பியனானது.

சி பிரிவில் புனித ஜோசப் வாஸ்,யஷோதராதேவி சம்பியனாகின

ஆண்களுக்கான சி பிரிவு இறுதிப் போட்டியில் இஸிபத்தனவை 57 - 54 என்ற புள்ளிகள் (17 - 10, 9 - 8, 12 - 18, 19 - 18) அடிப்படையில் வெற்றிகொண்ட வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் சம்பியனானது.

பெண்களுக்கான சி பிரிவில் குருநாகல் திருக்குடும்ப அணியை 55 - 50 என்ற புள்ளிகள் (18 - 11, 8 - 11, 6 - 18, 23 - 10) அடிப்படையில் வெற்றிகொண்ட யஷோதராதேவி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

கஜ ஹோல்டிங்ஸ் அனுசரணை இந்த வருட பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு கஜ ஹோல்டிங்ஸ் (கஜ ஸ்போர்ட்ஸ) முழுமையான அனுசரணையை வழங்கியிருந்தது.

கஜ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முன்னாள் தேசிய கூடைபந்தாட்ட வீரருமான  கயாத் ஜயசிங்கவின் தயாள குணம் காரணமாகவே இந்த அனுசரணை தங்களுக்கு கிடைத்ததாவும் அதன் மூலமே இந்த சுற்றுப் போட்டியை வெற்றிகரமாக நடத்த முடிந்ததாகவும் இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளர், டி லா சால் கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ஆர். ஜே. ஜெயகாந்தன் தெரிவித்தார்.

ஏ, பி, சி ஆகிய மூன்று பிரிவுகளிலும் கால் இறுதிப் போட்டிகளிலிருந்து 48 பாடசாலை அணிகளுக்கு சீரூடைகளை கஜ ஹோல்டிங்ஸ் நிறுவனம் வழங்கயதாகவும் அருட்சகோதரர் குறிப்பிட்டார்.

(படப்பிடிப்பு|: எஸ்.எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35