(ரொபட் அன்டனி)

ஜெருசலேம் நகரில் அமைந்துள்ள புனிததலம் தொடர்பாக யுனெஸ்கோவில் பலஸ்தீன் கொண்டுவந்த பிரேரணை விவகாரத்தில் இலங்கை அரசாங்கமானது தனது கொள்கையின் அடிப்படையிலேயே வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தது.  என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 

இஸ்ரேல் - பலஸ்தீன் நெருக்கடியானது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட சுயாதீன பலஸ்தீன் நாட்டை உருவாக்க வேண்டும். இந்த நெருக்கடிக்கு இரண்டு நாடுகள் என்ற அடிப்படையிலேயே இலங்கையின்  ஆதரவு அமைந்திருக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

ஒருசிலர் இன்று முஸ்லிம்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால்  முஸ்லிம் மக்கள்  புத்திசாலிகள். உண்மைக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும்   இடையிலான  வித்தியாசத்தை   முஸ்லிம்கள்  புரிந்துகொள்வார்கள்  என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து  வெளியிடுகையிலேயே  அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.