13 ஆம் ஆண்டு நினைவேந்தலில் நினைத்துப் பார்ப்பார்களா ?

Published By: Digital Desk 5

18 May, 2022 | 03:35 PM
image

-ஆர்.ராம்-

முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் நிகழ்ந்து ஆண்டுகள் 13 நிறைவாகின்றன. வழமைபோன்றே முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பிக்கப்பட்டு நாள்தோறும் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று குருதிகள் உறைந்த முள்ளிவாய்க்கால் பூமியில் ஆறா ரணங்களுடன் பல்வேறு தரப்பினரும் அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர். 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், அதனை தொடர்ந்து எழுந்த அரசியல் நெருக்கடிகளால் நிகழ்ந்த அதிகாரமாற்றத்தால் பிரதமராகியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. 

இவர், தான் ஜனநாயகவாதி என்பதை உலகிற்கு காண்பிப்பதற்கான ஒரு அஸ்திரமாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தடையின்றி மேற்கொள்வதற்கான அறிவுறுத்தலை படைத்தரப்புக்கு வழங்கியதாக தகவல். 

இதனால் ஏற்பட்ட இடைவெளியின் காரணமாக, தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. நினைவேந்தல் வாரத்தில் நாள்தோறும் அஞ்சலி செலுத்தப்பட்டன. 

அதனைவிடவும், பொத்துவிலில் இருந்தும், பொலிகண்டியில் இருந்தும் பேரணிகள் முள்ளிவாய்க்கால் முற்றத்தினை அடைந்திருந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊர்த்திப்பேரணியும் முள்ளிவாய்க்காலை அடைந்தது. 

நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவுத்தூபிக்கருகில் “இனப்படுகொலை” ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பல்கலைக்கழக மாணவர்கள் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை முன்னெடுத்தனர். அதில் பெரும்பான்மை மாணவர்களும் பங்கேற்றனர். 

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’ வில் 39ஆவது நாளாக தொடர்ந்த போராட்டத்திலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது. நினைவேந்தலும் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வுகள் எல்லாமே உணர்வு பூர்வமானவை. உள்ளக்கிடைக்களின் பிரதிபலிப்புக்கள். பொறுப்புக்கூறலுக்கான, நீதிக் கோரிக்கைக்கான தொடர்ச்சியான அழுத்தங்கள். 

ஆனால், 13ஆவது ஆண்டு நினைவேந்தல் நடைபெறுகின்றபோதும் இன்னமும், ‘தேவையான, செய்ய வேண்டிய’ காரியங்களை செய்யாதிருக்கின்றமையானது இந்த உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலில் பங்கேற்கும் அரசியல், சிவில் தரப்பினர் மீது கேள்விகளை தொடுப்பதாக இருக்கின்றது. 

உடமைகளை, உறவுகளை, தமக்காக இன்னுயிரை ஈகம் செய்தவர்களை நினைவேந்துவது பொதுப்படையில் நடைபெறும் விடயமாகத் தான் இருக்கின்றது. எதிர்காலத்திலும் இருக்கப்போகின்றது. 

எத்தனை தடைகள் வந்தாலும், அவர்கள் நினைவேந்தலைச் செய்வார்கள். வலிகள் நிறைந்த முள்ளிவாய்;க்கால் முற்றத்திற்கு செல்வதற்கு தடைகள் போடப்பட்டாலும், தமது இல்லங்களிலாவது மே-18 கனத்த நாளை நினைவு கூருவார்கள். இது சந்ததி சந்தியாகத் தொடரத்தான் போகின்றன. 

ஆனால், அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், சிவில் தரப்புக்களுக்கு சில கடமைகள் இருக்கின்றன. இவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையையும், சர்வதேச நீதிப்பொறிமுறை சார்ந்த கட்டமைப்புக்களையும், சர்வதேச சமூகத்தினையும், புலம்பெயர்ந்த தமிழர் தரப்புக்களையும் அதிகளவில் நம்பியிருக்கின்றன. 

அதில் தவறில்லை. நீதியும், பொறுப்புக்கூறலும் உள்நாட்டில் மறுக்கப்படும் போது நாட்டுக்கு வெளியில் உள்ள நட்பு சக்திகள் மற்றும், பொறிமுறைகள் ஊடாக முயற்சிப்பதே சாலப்பொருத்தமானது. 

ஆனால், நீதியையும், பொறுப்புக்கூறலையும் எதிர்பார்க்கும் ஒரு இனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்புக்கள் இதுகால வரையிலும் எவ்வாறு செயற்பட்டிருக்கின்றன என்பதை பார்கின்றபோது அது தமிழினத்தின் துரதிஷ்டமாகத்தான் இருக்கின்றது. 

கடந்தகால விடயங்களை விடவும், இந்தப் 13ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் போது அரங்கேறிய விடயங்கள் முகஞ்சுழிக்க வைப்பதாக இருக்கின்றது. 

குறிப்பாக, அரசியல் கட்சிகள் இந்த உணர்வுபூர்வமான நிகழ்விற்கு உரிமைகோருவதற்கு முஸ்தீபு செய்திருந்தன. அந்த முயற்சி வெற்றி அளித்திருக்காத நிலையில் தத்தமது வாக்குவங்கிகளை பாதுகாப்பதற்காக ஏட்டிக்குப் போட்டியான வகையில் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன. 

அதிலும், முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கும் விடயத்தில் கூட ஒரே பிரதேசத்தில் ஏட்டிக்குப் போட்டியான ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. இதில் அதிகளவில் ஈடுபட்டிருந்த தரப்புக்களாக இருப்பவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தான். 

இதனைவிடவும், சிவில் அமைப்புக்களும் முள்ளிவாய்க்கால் விடயத்தில் பிரிந்து நின்றே செயற்பட்டிருந்தன. முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு வழமையாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்தது.

ஆனால் அந்தக் கட்டமைப்புடன் எவ்விதமான கலந்தாய்வுகள் இடம்பெறாது பேரணிகளுக்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. 

இதில், முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு தரப்பிலும், ஏனைய சிவில் அமைப்புக்களின் பக்கமும் தவறுகள் இல்லாமலில்லை. அவர்களுக்குள்ளும் நினைவேந்தல் நிகழ்வுக்கான ‘உரிமைகளை’ பங்குபோடுவதற்கு மனதில்லை.

இவ்வாறான நிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிகளுக்கு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத்தலைவர்களும், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கமொன்றும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

இதற்கு புலம்பெயர் தரப்புக்களும் காரணமாகின்றன. புலம்பெயர் தேசங்களில் உள்ள தரப்புக்கள் ‘தமக்கு இசைவான’ தரப்புக்களுக்கு மட்டும் நிதி உள்ளிட்ட ஒத்துழைப்புக்களை வழங்குவதால் தாயகத்தில் உள்ள தரப்பக்களும் குழுக்குழுவாக இயங்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. 

அதேநேரம், புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் கூட தாயகத்தில் தரப்புக்களாக குழு முன்னெடுப்பது போன்றே அங்கும் ஒரே பிரதேசத்தில் நூறு மீற்றருக்கு ஒரு நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்ப்பட்டிருக்கின்றது.

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ என்பது தமிழினம் சார்ந்தது. அதன் எதிர்காலம் சார்ந்தது. அதன் நீதி, நியாயத்துக்கான கோரிக்கை சார்ந்தது.

அவ்விதமான ஒரு உணர்வு பூர்வமான நிகழ்வினை கூறுகளாக பிரிந்து நிற்பதால் தமிழினத்தின் ஒட்டுமொத்த உணர்வெழுச்சியையும் எவ்வாறு உலகிற்கு வெளிப்படுத்த முடியும் என்பது முதலாவது கேள்வி?

அடுத்து, முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரவலம் ‘தமிழின இனப்படுகொலை தான்’ என்பதில் இன்னமும் தமிழ்த் தரப்பிற்குள் முரண்பாடுகள் இருக்கின்றன.

இந்த விடயத்தில் ஏகோபித்த தீர்மானம் இல்லாது நீதியை, பொறுப்புக்கூறலை எவ்வாறு கோர முடியும் என்பது இரண்டாவது கேள்வி?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்வதற்கு தற்போது அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சூடல் ஏற்றும் நிலம் தற்போது வரையில் அரசுக்கு உரித்துடையதாகவே உள்ளது. எதிர்வரும் காலத்தில் நிகழ்வைத் தடுப்பதற்கு அதுவொரு காரணமே போதுமானதாகிவிடும். 

அவ்வாறிருக்கையில், கடந்த 13ஆண்டுகளாக பேசப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதும் அதற்கான நிலத்தை உரித்தாக்குவதும் பற்றி இதுகால வரையிலும் உணர்வெழுச்சியில் பங்கேற்கும், அரசியல், சிவில், புலம்பெயர் தரப்புக்கள் மெத்தனப்போக்கில் இருப்பது ஏன் என்பது மூன்றாவது கேள்வி?

பல்வேறு நெருக்கடிகளுக்கும் அப்பால் நினைவேந்தலை தொடர்ச்சியாக ஏற்பாடு செய்துவரும் முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு(வடக்கு,கிழக்கு) என்பது பருவகாலத்து கட்டமைப்பாக இல்லாது ஒட்டுமொத்த வடகிழக்கையும் உள்ளடக்கியதாக, தொடர்ச்சியாக செயற்பாட்டு வடிவங்களை கொண்ட தரப்பாக உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுப்பதில் உள்ள தயக்கம் என்ன என்பது நான்காவது கேள்வி?

போர் வடுக்களையும், நினைவுகளையும் தம்மகத்தே கொண்ட சாட்சிகளான பொதுமக்களிடத்திலிருந்து இதுவரையில் முழுமையான தரவுத்திரட்டொன்று பெறுவதற்கான பொறிமுறை அமைக்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக மனித உரிமைகள் பேரவைக்கு சென்று வருவதாலோ அல்லது மாயங்கள் நிகழ்ந்து சர்வதேச தீர்ப்பாயத்திற்கோ, குற்றவியல் நீதிமன்றத்துக்கோ சென்றால் கூட நீதியும் பொறுப்புக்கூறலும் எவ்வாறு கிடைக்கும் என்பது ஐந்தாவது கேள்வி?

ஆகவே, ஆண்டு தோறும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுடன் மிகநெருங்கிய தொடர்புடைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எழுச்சியாக கொள்வதற்கு அப்பால் மேற்குறிப்பிட்ட வினாக்களுக்கான விடைகளை கண்டறிவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பெரும்பாhன்மை சிங்கள சமூகத்தை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அழைப்பதற்கு முன்னதாக, சிறுபான்மை தேசிய இனமாக இருக்கும் தமிழனம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒருங்கிணைந்து ஒன்றிணைய வேண்டும்.

அவ்விதமான நிலைமையொன்று ஏற்படுகின்றபோதே நீதி,பொறுப்புக்கூறலுக்கான முறையான உந்துதல் முன்னெடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நம்பிக்கை ஏற்படும். நினைவேந்தல் நிகழ்வும், அதற்கான உணர்வுகளும், அடுத்த பரம்பரைக்கு கடத்தப்படும். 

அதுவரையில், ஆண்டுகள் ஒவ்வொன்றும் கடக்கும் போது முள்ளிவாய்க்கால் முற்றம் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரால் தோய்ந்து கொண்டு தான் இருக்கப்போகின்றது. அவர்கள் வலிகளின் சுமைதாங்கிகளாகவே வாழ்க்கை முழுவதும் இருக்கப்போகின்றார்கள். 

அதேநேரம், நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏட்டிக்குப் போட்டியான நிலைமைகள் நீடித்துக்கொண்டிருக்குமானால் நாளடைவில் அது உச்சமடைந்து அரசியல், சிவில் தரப்பினரின் பிரசன்னத்தால் முள்ளிவாய்க்கால் முற்றம் முரண்பாட்டுக் களமாகலாம். 

அதனால், உணர்வு ரீதியானவர்களின் பிரசன்னம் நலிவடையும் ஆபத்துக்களே அதிகமுள்ளது. அதுவே, தென்னிலங்கையின் எதிர்பார்ப்புகமாகவுள்ளது. இந்தப் புரிதல் ஏற்படுகின்றதா என்பது அடுத்த ஆண்டு நினைவேந்தல் நாள் வருக்கின்றபோது துலங்கும். 

“மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை”

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04