1989 இல் இடம்பெற்ற வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்கள் - சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின

Published By: Digital Desk 5

16 May, 2022 | 10:43 AM
image

(நா.தனுஜா)


தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 1989 ஆம் ஆண்டில் மாத்தளை மாவட்டத்தின் இராணுவ ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றியபோது இடம்பெற்ற வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்களையும், அவ்வாறு காணாமலாக்கப்பட்ட சுமார் 700 பேரின் பெயர்க்ளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமாறு செயற்திட்டம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ளன.

அவ்வறிக்கையில் 1989 ஆம் ஆண்டளவிலேயே கடத்தப்பட்டு, மிகமோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றிலிருந்து தப்பியவர்களின் திடுக்கிடச்செய்யும் வகையிலான வாக்குமூலங்களும் இணைக்கப்பட்டிருப்பதுடன், அச்சம்பவங்களில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வகிபாகம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டிருக்கின்றது.

Image

இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தின்மீது முன்னெப்போதுமில்லாத அளவிற்கு மக்கள் மத்தியில் கடுங்கோபம் தோற்றம்பெற்றிருக்கும் நிலையில், கடந்த 1989 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் உள்ளிட்ட அட்டூழியங்களில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எத்தகைய வகிபாகத்தைக் கொண்டிருந்தார் என்ற விரிவான தகவல்கள் மற்றும் அக்காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டவர்கள் பெயர்கள் ஆகியன அடக்கிய 71 பக்க அறிக்கையொன்றை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ளன.

அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கியமான விடயங்களில் சுருக்கம் வருமாறு :

நாட்டில் கடந்த 1989 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் இரகசியப்பட்டியலில் குற்றங்களுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபராகத் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்ததாக புதிய அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மாத்தளை மாவட்டத்தின் இராணுவ ஒருங்கிணைப்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ பதவி வகித்தபோது, அவரது கட்டளையின்கீழ் செயற்பட்ட பாதுகாப்புப்படையினரால் 700 இற்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக பெரும்பான்மையாக சிங்களமக்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள்.

அது அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால், அதாவது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு முற்பட்ட இடதுசாரி இளைஞர் இயக்கத்தின் இரண்டாவது கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியாகும். இக்கிளர்ச்சியாது பாதுகாப்புப்படையினரால் மிகக்கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது.

 தற்போதைய ஜனாதிதி கோட்டாபய ராஜபக்ஷ சுமார் இரு தசாப்தகாலம் இராணுவத்தில் பணியாற்றியிருந்தார். இதில் பெரும்பான்மையான காலம் தமிழ்ப்போராளிகளுடனான போரில் செலவிடப்பட்டது.

ஆனால் 1980 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களில் நடைபெற்ற கிளர்ச்சிகளை மிகவும் மிருகத்தனமான முறையில் முறியடிக்கும் நடவடிக்கைகளில் அவர் வகித்த பங்கு எப்போதும் கவனிக்கப்படாமலேயே இருந்திருக்கின்றது.

அப்போது மக்கள் விடுதலை முன்னணி என்ற ஆயுதப்போராட்ட அமைப்பின் கோட்டையாகத் திகழ்ந்த மாத்தளை மாவட்டத்தின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவி வகித்தபோது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.

 கோட்டாபய ராஜபக்ஷ 1989 மேமாதம் தொடக்கம் 1990 ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்தின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை 1988 ஜனவரி மாதம் முதலாம் திகதியின் பின்னர் காணாமல்போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட 4 ஆணைக்குழுகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதும் இக்காலப்பகுதியிலேயே ஆகும்.

கோட்டாபய ராஜபக்ஷ மாத்தளை மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த காலப்பகுதியில் காணாமல்போன 700 பேரின் பெயர்களை (பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்கள்) இந்த ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் பட்டியலிட்டன.

கோத்தாபய ராஜபக்ஷ நன்கு அறியப்பட்ட அரசியல்வாதியாக மாறுவதற்கு முன்னர் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்தில் மிகமோசமான சித்திரவதைக்கூடங்களாகத் திகழ்ந்த பாடசாலைகள், விருந்தினர் விடுதிகள் பலவற்றில் அவர் இருந்தமையை சித்திரவதைகளிலிருந்து உயிர்தப்பியவர்கள் நினைவுகூர்ந்திருக்கின்றார்கள்.

முன்கூட்டியே திட்டமிடப்பட்டுப் பரவலாக நடத்தப்பட்ட இத்தகைய மனித உரிமைமீறல்களுக்கு தனது கட்டளையின்கீழ் செயற்பட்ட படையினரே பொறுப்பு என்பதை கோட்டாபய ராஜபக்ஷ நன்கு அறிந்திருந்தார் அல்லது அறிந்திருக்கவேண்டும்.

அவ்வாறிருந்தும் இவ்விடயத்தில் அவர் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக இலங்கை அரசாங்கத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகயின் முக்கிய கருவியாக அவர் செயற்பட்டார்.

பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் அவர்களின் நம்பிக்கைகளுக்கு மாறாக, அரசின் விருப்பமும் அதன் துரித செயற்பாடுகளும் பாதுகாப்புப்படைகள் பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்படுவதற்கான அழுத்தம் வெகுவிரைவில் நீர்த்துப்போவதற்குக் காரணமாக அமைந்தன.

குறிப்பாக வட,கிழக்கில் போர் தீவிரமடைந்ததைத்தொடர்ந்து, இராணுவத்திற்கு அதிகமான ஆட்கள் தேவையாக இருக்கும் தருணத்தில் பாதுகாப்புப்படைகளைப் பொறுப்புக்கூறச்செய்வதையோ அல்லது இராணுவத்தை சீரமைப்பதையோ தவிர்க்குமாறு அரசாங்கத்திற்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் இன்றளவிலே அதிகாரம்மிக்கவர்களாகக் கருதப்படக்கூடிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன ஆகியோர், சட்டவிரோதமாக பல்லாயிரக்கணக்கான சிங்களவர்களைக் கொன்றுகுவித்த 1989 ஆம் ஆண்டுக் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர்கள் என்பதுடன், 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிலும் முக்கிய பங்கு வகித்தவர்களாவர் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் மிகமோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அவற்றிலிருந்து தப்பியவர்களின் வாக்குமூலங்களும் இவ்வறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்ட முறைகள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் அளிக்கப்படும் விளக்கங்கள் ஒருசேர அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04