வாய்ப்பை பயன்படுத்துமா இந்தியா ?

Published By: Digital Desk 5

15 May, 2022 | 01:06 PM
image

ஹரிகரன்

இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சநிலையை எட்டியிருக்கும் சூழலில், இந்தியா தனது படைகளை இங்கு அனுப்ப வேண்டும் என்ற வாதப்பிரதிவாதங்கள் தோன்றியிருக்கின்றன.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, போராட்டங்கள் நடக்கத் தொடங்கிய போது, கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்னரும், இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்பியிருப்பதாக இந்திய ஊடகங்கள் சிலவற்றில் தகவல்கள் பரவின.

அதனை இந்தியா உடனடியாகவே மறுத்து அறிக்கை வெளியிட்டது. இப்போது, ராஜபக்ஷவினர் தாங்களாகவே உருவாக்கி வைத்த பொறியில், மாட்டிக் கொண்டு தவிக்கின்ற நிலையில், மீண்டும் அந்தப் புரளி கிளப்பி விடப்பட்டிருக்கிறது.

இந்தப் புரளியின் மூலகர்த்தா இந்திய அரசியலின் ‘கோமாளி’ என்று வர்ணிக்கப்படும் சுப்ரமணியன் சுவாமி தான்.

ராஜபக்ஷவினருக்கு மிகநெருக்கமான கூட்டாளியான சுவாமி, மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து இறக்கப்பட்ட பின்னர், இலங்கைக்கு தனது படைகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று ருவிட் செய்திருந்தார்.

போராட்டங்களினால், இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் நிலைபெறும் ஆபத்து உள்ளதாகவும், அதனால், இந்தியா தனது படைகளை அங்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் ருவிட் செய்திருந்திருந்தார்.

அவரது ருவிட்டுக்கு பலர் ஆதரவாக கருத்துக்களைப் பதிவிட்டிருந்தனர். 

இதன் பின்னர், இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்பவுள்ளதாக தகவல்கள் பகிரப்பட, மீண்டும் ஒரு முறை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், அதனை நிராகரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவதன் மூலம், பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று கருதினால் அது முட்டாள்தனம்.

மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இருந்து கொண்டு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று கனவு கண்டார்.

படைகளை அனுப்புவதன் மூலம் இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கருதினார், அதுவும், அவ்வாறானதொரு பகல் கனவு தான்.

இலங்கையின் அரசியல் நெருக்கடியும், குழப்பங்களும், அண்டை நாடு என்ற வகையில் இந்தியாவுக்கும் அச்சுறுத்தலானது, ஆபத்தானது. தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதே.

அதனை மட்டும் சாட்டாக வைத்துக் கொண்டு இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்பி விட முடியாது.

ஏனென்றால் இலங்கை இறைமை கொண்ட, சுதந்திரமான ஒரு நாடு. இந்தியாவின் இறைமைக்கு ஆபத்து என்று இலங்கையின் இறைமையை பறித்துக் கொள்ள முடியாது.

அவ்வாறு செய்தால், உக்ரைனின் இறைமையைப் பறிக்கும் ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும்.

இலங்கையில் அரசியல் உறுதித்தன்மை பாதிக்கப்படும் போது, இந்தியாவைப் பாதிக்கும் என்பது உண்மையே. 

ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளால் அகதிகள் இந்தியாவுக்குப் படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.

இதுபோன்ற பல சிக்கல்களை இந்தியா எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆனால் அவற்றுக்கு படைகளை அனுப்புவது தீர்வாக இருக்க முடியாது. இந்தியப் படைகள் இலங்கையில் நிலைகொள்வதால் மட்டும், இந்தப் பிரச்சினைகளை தீர்த்து விடமுடியாது.

ஏனென்றால், இப்போது இலங்கையில் இருப்பது, வெறும் அரசியல் குழப்பங்களோ, பாதுகாப்பு நெருக்கடிகளோ மாத்திரமல்ல, அதனைவிட சிக்கலான பொருளாதார நெருக்கடியும் உள்ளது.

அநத நெருக்கடி உள்ளவரை, குழப்பங்கள் நீடிக்கும். அரசியல் உறுதியற்ற நிலை தொடரும். 

அதனால், பொருளாதார நெருக்கடிகளை படைகளைக் கொண்டு தீர்க்க முடியும் என்று இந்தியா நினைக்காது.

இந்தநிலையில் இலங்கைக்கு வெறுமனே பொருளாதார உதவிகளை வழங்குவது மாத்திரம், தீர்வாக இருக்காது.

பொருளாதார உதவிகள் இந்த தருணத்தில் இலங்கைக்கு முக்கியம். அதனை விட, இதுபோன்ற பிரச்சினையும், நெருக்கடியும் எதிர்காலத்தில் உருவாகாமல் தடுக்கவும் தவிர்க்கவும் வேண்டும்.

அதனை உறுதிப்படுத்த வேண்டிய நிலையிலும் இந்தியா இருக்கிறது. இது இலங்கைக்காக மாத்திரமல்ல, இந்தியாவுக்காகவும் தான்.

இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையின் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை போன்றவற்றில் தங்கியிருப்பது உண்மையானால், இந்தியா தனக்காகவும் இதனைச் செய்து தான் ஆக வேண்டும்.

இலங்கைத் தீவின் இன்றைய சீரழிவுகளுக்கு மூலகாரணம், இனச் சிக்கலும், அதன் வழி உருவாகிய மோதல்களும் தான்.

அங்கிருந்து தான், பிளவுகள், பிரச்சினைகள் தோற்றத் தொடங்கி, போராக மாறி, அது பொருளாதாரத்தை நாசப்படுத்தியதுடன், நாட்டுக்குப் பொருத்தமற்ற தலைமைத்துவங்கள் தலையெடுக்கவும், அதிகாரம் பெறவும் அதனூடாக சீரழிவு நிலை மோசமடையவும் காரணமாயிற்று.

இவ்வாறான நிலையில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதோ, அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதோ தற்காலிகமானது தான்.

இனவிரோதங்கள், குரோதங்களைக் கடந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், இனங்களுக்கிடையில் சிறந்த உறவு கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இனங்களுக்கிடையிலான சமத்துவம் உறுதிப்படுத்தப்படுவதுடன் உரிமைகள், அதிகாரங்கள் பகிரப்ப வேண்டும்.

அது மட்டும் தான், நிலைத்தன்மையான அமைதியை நாட்டுக்குக் கொண்டு வரும்.

இலங்கையில் தலையீடு செய்த காலங்களில் இந்தியா நிலையான அமைதிக்கு முயற்சிக்கவில்லை.

தற்காலிக தீர்வைத் தான் முன்வைத்தது. 1987இல், ஆயுதக் களைவில் மட்டும் ஆர்வம் காட்டியது. புலிகளை ஒழிப்பதில் அக்கறை செலுத்தியது. தான் உருவாக்கிய மாகாணசபைகளை பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்தியது.

அதில் தோல்விகண்ட பின்னர், எல்லாவற்றையும் தொப்பென்று போட்டு விட்டு வெளியே போனது.

அதற்குப் பின்னர் பல்வேறு காரணங்களால், இலங்கை விவகாரத்தில் ஒருவித அக்கறையற்ற போக்குடனேயே செயற்பட்டிருக்கிறது.

13 ஆவது திருத்தச்சட்டத்தைக் கூட அமுல்படுத்துவதில் அக்கறையுடன் செயற்பட்டிருக்கவில்லை. வெறும் வாய்மொழி வலியுறுத்தல்களும், அறிக்கைச் சொல்லாடல்களும் தான் நடந்தேறின.

இதனால் இலங்கையின் இனச்சிக்கல் நீண்டு கொண்டே போனது.

இது தமிழர்களுக்கு வெறுப்பையும், இந்தியா மீதான அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது. 

தமிழ் மக்களுக்கு நியாயமான – கௌரவமான- அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தியிருந்தால், இன்று இந்தியா தனது பாதுகாப்புக் குறித்து கவலை கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

இன்றைய அரசியல் கொந்தளிப்பை இராணுவ ரீதியாகவோ, அல்லது இந்தியாவுக்கு விரோதமாகவே பயன்படுத்திக் கொள்வதற்கு எந்தத் தரப்பும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், அரசியல் உறுதியற்ற நிலை இந்தியாவுக்கு அச்சுறுத்தலானது.

இவ்வாறான நிலையில், இந்தியா படைகளை அனுப்புவதை விட, பொருளாதார உதவிகளை குவிப்பதை விட முக்கியமானது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை செலுத்துவது தான்.

அடிப்படைப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்த்தால் தான், அது நிலையானதாக  இருக்கும்.

இந்தியா அந்த விடயத்தை கடந்த காலங்களிலும் கவனிக்கத் தவறியது. இப்போதும் அதனை கண்டு கொள்ளவில்லை.

இந்த விடயத்தில் இந்தியா எந்தளவுக்கு காலத்தை வீணடிக்கிறதோ அந்தளவுக்கு அதற்கு அச்சுறுத்தல் அதிகம்.

இலங்கை அரசு எப்போது பலமிழக்கிறதோ அப்போது தான், இந்தியாவினால் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும்.

2019இல் சிங்கள பௌத்த பேரினவாத வாக்குகளால் ஆடசிக்கு வந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் இந்தியா அழுத்தங்களைக் கொடுப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளே இருந்தன.

ஆனால்- இப்போது, அதே சிங்கள பௌத்த மக்களால் வெறுக்கப்பட்டு விரட்டியடிக்கப்படும் நிலையில் உள்ள ராஜபக்ஷ அரசாங்கத்திடம், இந்தியா அழுத்தங்களைக் கொடுக்கவும், நியாயமான அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தையும் இந்தியா தவற விடுமானால், எதிர்காலத்தில் அதன் பாதுகாப்புக்காக ஒவ்வொரு முறையும் கவலைப்பட வேண்டியிருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13