நெருக்கடிகால பிரதமர் : காப்பாற்றப்போவது யாரை ?

Published By: Digital Desk 5

15 May, 2022 | 12:56 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

பிரதமர்  பதவியை ஏற்று வெளியே வந்த ரணிலிடம், வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். ‘உங்களது கட்சியின் ஒரே உறுப்பினராக பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் நீங்கள் எவ்வாறு நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்? 

‘1939 ஆம் ஆண்டு வின்ஸ்டன் சேர்ச்சில் தனது  மூன்று ஆதரவாளர்களுடன் பிரித்தானிய பிரதமரானார். காரணம்  அப்போதைய நெருக்கடி காலகட்டம். அவருக்கு முடியும் போது  ஏன் என்னால் முடியாது’ இது ரணிலின் பதில்.  

எந்த கேள்விகளுக்கும் பொருத்தமான பதில்களை வைத்திருப்பதில் ரணில் சமர்த்தியர். அவர்  ஒரு சிறந்த இராஜதந்திரி என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.

அவரது அரசியல் வரலாற்றை அறிந்தவர்கள்,  அவரோடு நெருக்கமாக இருந்தவர்கள் கூறும் விடயம் என்னவென்றால் அவர் ஒரு சிறந்த அவதானி. அதிகமாக பேசுவதில்லை, ஓரிரண்டு வார்த்தைகள் பேசினாலும்  எதிர்மறையான வார்த்தைகள் அவரிடமிருந்து வராது. 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை  கைவிட்ட நிலையில் கிடைத்த வாக்குகளைக் கொண்டு தேசிய பட்டியலில் தனி ஒரு மனிதராக அவர் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்ததை அன்று பலரும் கிண்டலடித்தனர்.

இன்னும் தலைமைப் பதவி ஆசை ரணிலை விட்டுப்போகவில்லையென்று விமர்சித்த பலர் அதை கட்சியின் சிரேஷ்ட பிரமுகராக இருக்கும் வேறு யாருக்கும் வழங்கியிருக்கலாம் என்றும் பகிரங்கமாகவே கூறினர். 

ஆனால் அன்று ரணிலுக்குப் பதிலாக ஐக்கிய தேசிய கட்சியில் வேறு யாராவது பாராளுமன்றத்துக்குள்  வந்திருந்தால் இப்போது நிலைமை என்ன? ‘நாட்டை சீர் செய்கிறேன் வாய்ப்பொன்றை தாருங்கள்’  என தைரியமாக   ஜனாதிபதியின் முன்பு யாரால்  கூறியிருக்க முடியும்?  இவை எல்லாவற்றையும் விட நாட்டின் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில்  ரணிலைத் தவிர  அவ்விடத்தில் இருந்திருக்கக் கூடிய யாரை ஜனாதிபதியால் அணுகியிருக்க முடியும்?

நல்லாட்சி காலத்தில் பிரதமராக விளங்கிய ரணில் முன்னெடுத்த திட்டங்கள் பற்றி அனைவரும் அறிவர். ஆனால் இடையில் ரணிலின் நிர்வாக திறனுக்கும் வேகத்துக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கு ஈடு கொடுக்க முடியாத அதேவேளை நாட்டு நிர்வாகம் தொடர்பாக  விளங்கிக்கொள்ள முடியாது போய்விட்டது.

மட்டுமன்றி  நல்லாட்சியின் மூன்று வருடங்கள் கழிந்தவுடனேயே ராஜபக்ஷவினர் மைத்திரியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். 

ரணிலால் மாத்திரமே நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை தீர்க்க முடியும் என்று பலரும் கூறி வந்தாலும் அவரை பிரதமராக தெரிவு செய்திருப்பது என்னவோ கோட்டாபய அரசாங்கமாகும்.

கடந்த வாரம் அரசாங்கத்துக்கு எதிராக நாடெங்கினும் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களையடுத்து ஏற்பட்ட அரசியல் நகர்வுகளை வைத்துப் பார்க்கும் போது, இடைக்கால அரசாங்கமொன்றை  ஸ்தாபிப்பதில் மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய மக்கள் சக்தியும் முன்வைத்த நிபந்தனைகளை மிகவும் அவதானமாகவும் உன்னிப்பாகவும் அவதானித்துக்கொண்டு மௌனம் காத்திருந்தார் ரணில். 

அது தனக்கான அழைப்பு வரும் என்ற சாணக்கிய மௌனமாகும்.  அவரது எதிர்ப்பார்ப்பு பிழைக்கவில்லை. ஜனாதிபதியிடம் அவர் பெரிதாக எந்த நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை.

அவரை பதவி விலகவும் கோரவில்லை. பொருளாதார மீட்சிக்கான சந்தர்ப்பம், 19ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள சரத்துக்களை மீள அமுல்படுத்தும் 21ஆவது சட்டத்தை கொண்டுவரல் என்பனவே இதில் பிரதானமானது. 

தனது பதவிக்கு ஆபத்து வராத நிபந்தனைகளே ஜனாதிபதி கோட்டாபாயவுக்கு சரியாகப் பட்டது. அதையே அவரது ஆதரவாளர்களும் விரும்பினர்.

எல்லா பக்கங்களிலிருந்தும் பலரது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்ற அநுரவும் சஜித்தும் இவ்விடயத்தில் சறுக்க, தனி ஒரு மனிதராக சாணக்கிய முடிவெடுத்து அலட்டிக்கொள்ளமால் பிரதமராகியிருக்கின்றார் ரணில். 

 இப்போது பிரதமர் ரணிலுக்கு எதிராக கிளம்பியுள்ள எதிர்ப்பலைகள்  பிரதானமான  ஒரு விடயத்தை மாத்திரமே மையப்படுத்தி நிற்கின்றன.

அது ராஜபக்ஷக்களை காப்பாற்றுதல் என்பதாகும். பொருளாதார ரீதியில் இலங்கையை ஓரளவு ரணில் நிமிர்த்தி விடுவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.   

ஆனால் இன்று நாட்டிலுள்ள சிங்கள பௌத்த மக்கள் அனைவரும் ராஜபக்ஷ சகோதரர்களின் மீது கடுங்கோபத்தில் உள்ளனர். இந்த நிலைமைக்கு நாடு சென்றதற்கு காரணமான அவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படல் வேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் கோஷமாக உள்ளது.

ஏனென்றால் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஏகபோகமான வாழ்க்கையும் ஒரு காரணம் என்பது அனைவரினதும் பொதுவான கருத்து.

அவ்வாறு இருக்கும் போது அவர்களை காப்பதற்காகவே ரணில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதாக தற்போது சஜித் மற்றும் அநுர அணிகள் கூறியுள்ளன. 

இதை நாட்டு மக்களும் கூற வேண்டும் என அவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். அமையப்போகும் தேசிய அரசாங்கமே அதை முடிவு செய்ய வேண்டும். அமைச்சரவை  15 அல்லது  20 பேரை கொண்டதாக இருக்கலாம். 

அனைத்து கட்சிகளினதும் உறுப்பினர்கள் அமைச்சுப்பதவியை வகிக்கக் கூடும். அரசாங்கத்துக்கு எதிராக இருந்தவர்களும் சுயாதீனமாக இயங்கியவர்களும் இதில் உள்ளடக்கப்படுவர்.

அப்படியிருக்கும் போது பாராளுமன்றத்துக்குள் இந்த தேசிய அரசாங்கத்தை விமர்சிக்கப்போகின்றவர்கள் அநேகமாக இதில் அங்கம் வகிக்காத எதிர்த்தரப்பினராகத்தான் இருக்கப்போகின்றனர். 

அதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனும் பேச்சு நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கிறார்.

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கக்கூடிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் போது வடக்கு,கிழக்கு,மலையகத் தமிழர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்பது அவரது கருத்து. 

ரணில் பதவியேற்றவுடன்  முதன் முதலாக மலையகத்தின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாழ்த்துத் தெரிவித்திருந்தது.  அதற்கடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தனது ருவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்ததோடு, தாம் தொடர்ந்தம்  கொள்கையின் அடிப்படையில் எதிரணியிலேயே இருக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். 

ஆனால் அமையப்போகும் தேசிய அரசாங்கத்தில் இணைவது குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணியானது, அரசாங்கத் தரப்புடன் பேசுவதற்கு நியாயமான காரணங்கள் பல உள்ளன.

ஏனெனில் மலையக சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணியில் உள்ளனர். நல்லாட்சி ஆட்சியில் இதே ரணில் பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த கூட்டணி இது.

ஆகவே தமிழ் முற்போக்குக் கூட்டணியினரைப்பற்றி ரணிலுக்கு புதிதாக ஒன்றும் கூறத் தேவையில்லை. அதேவேளை மறுபக்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் புதிய தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப்போவதில்லையென, தாம் ஆதரவு வழங்கம் ஐக்கிய மக்கள் கூட்டணியினரின் கொள்கையில் இருப்பதால் அந்த வாய்ப்பு நிச்சியமாக இ.தொ.காவுக்கு கிடைக்கக் கூடும். 

எது எப்படியானாலும் ஒரு ஸ்திரமான அரசாங்கம் அமைவதற்காக அடுத்த வருடம் ஒரு பொதுத்தேர்தலுக்கு நாடு செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் தேசிய அரசாங்கமானது அடுத்த வருடத்தின் முற்பகுதி வரை மாத்திரமே பயணிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். 

ஆகவே இங்கு பொருளாதார நிலைமைகளை சீர்செய்வதற்கே முக்கியத்துவம் வழங்கப்படப்போகின்றதே ஒழிய, அமைச்சுப்பதவிகளால் எந்த வித அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட வாய்ப்புகள் இல்லை. அதற்கான  நிதிகளும் திறைசேரியில் ஒதுக்கப்படப் போவதில்லை.  

ஆகவே அமைச்சுப்பதவிகளுக்கு  குறிவைத்தோ அல்லது அதை பெற்றுக்கொண்ட பிறகோ மக்களிடம் சென்று வழமையான அரசியல் செய்வதை பிரதிநிதிகள் விட்டு விட வேண்டும்.

இப்போது அவ்வாறு செய்ய முடியாது என்பது வேறு கதை.  பிரதமர் ரணில் தனக்கு முன் உள்ள பொருளாதார அரசியல் நெருக்கடிகளை நன்கு இனங்கண்டுள்ள அதேவேளை ராஜபக்ச தரப்பினரை வைத்து, தன் மீது  முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மக்களிடம் தெளிவை ஏற்படுத்த வேண்டியவராக உள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04