கிழக்கு மாகாணத்தில் காணப்படும் 1134 கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப ஏற்ற ஒழுங்குகளைச் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிழக்கு முதல்வர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவித்துள்ளார். 

இன்று இந்தப் பணிப்புரை கிடைத்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கணிதம் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடத்திற்காக நீண்ட காலமாகக் காணப்பட்டு வருவதை முதலமைச்சர் பிரதம மந்திரிக்கு பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த ஆசிரியர் வெற்றிடங்களை கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கல்வியியற் பட்டதாரிகளைக் கொண்டு நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் விரைவில் இவர்களுக்கான நேர்மூகப் பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 5021 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமது ஆட்சிகாலத்திற்குள் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்பப் போவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தமது ஆட்சிக்காலப் பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையை மேம்படுத்துவதே தமது முதன்மை நோக்கம் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். கடந்த வாரம் திருகோணமலையில் நடந்த நிகழ்வொன்றில் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது மாகாணத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்குறை மாத்திரமின்றி தளவாடக் குறைபாடுகளையும் நிவர்த்திப்பதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக ஜனாதிபதி முதலமைச்சரிடம் உறுதியளித்திருந்தார்.

-அப்துல் கையூம்