ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை பொலிஸார் வேடிக்கை பார்த்தது ஏன் ? - சஜித்

Published By: Digital Desk 5

09 May, 2022 | 10:56 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் அவசரகாலச்சட்டம் நடைமுறையிலுள்ள வேளையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டனம் செய்வதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, இதற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பொலிஸார் உள்ளடங்கலாக பாதுகாப்புத்தரப்பும் பொறுப்புக்கூறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக  திங்கட்கிழமை (09)அலரி மாளிகையில் ஒன்றுதிரண்டவர்கள், அலரி மாளிகைக்கு முன்பாக காலி வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 'மைனா கோ கம' கூடாரங்களை இடித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாகத் தாக்கினர். 

அதனைத்தொடர்ந்து காலி வீதியின் ஊடாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த 'கோட்டா கோ கம'விற்குச் சென்று அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்களை எரித்து, போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர். 

இதன்போது காலிமுகத்திடலுக்குச் சென்ற எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவும், கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் சிலரும் தாக்கப்பட்டு, திருப்பியனுப்பப்பட்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மக்களின் அமைதிப்போராட்டத்தில் அரசாங்கத்தின் ஆதரவாளர்களால் விளைவிக்கப்பட்ட குழப்பம் தொடர்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாஸ, இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

அரசியல் தீவிரவாதக்குழுவொன்று அலரி மாளிகைக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டிருந்த 'மைனா கோ கம' மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டிருந்த 'கோட்டா கோ கம' ஆகிய இரண்டையும் முழுமையாக சீர்குலைத்து நிர்மூலம் செய்திருக்கின்றது.

 இந்த அரசியல் தீவிரவாதத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். நாட்டில் ஜனநாயகத்திற்கும், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் ஏதுவான இடமிருக்கவேண்டும்.

 அரசாங்கத்திற்குள் இருவேறு நிலைப்பாடுகள் இருப்பதாக வெளியே காண்பித்துக்கொண்டு, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்கள்மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்துகின்றார்கள்.

 இது மிகமோசமான, மிலேச்சத்தனமான தாக்குதல் நடவடிக்கை என்பதுடன் இதற்கு பொலிஸாரே பொறுப்புக்கூறவேண்டும். 

அவசரகாலச்சட்டம் நடைமுறையிலுள்ள வேளையில், இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு பொலிஸார் அனுமதித்தது ஏன்? அவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது ஏன்? இதற்கு ஆணையிட்டது யார்? ஆகவே பொலிஸார் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த பாதுகாப்புப்பிரிவும் இதற்குப் பொறுப்புக்கூறவேண்டியது அவசியமாகும்.

 மேலும் இந்த சட்டவிரோத நடவடிக்கையை நாம் கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை, இதனுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் சட்டத்தின் முன்நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். 

அதுமாத்திரமன்றி இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நாம் ஒன்றைக்கூறவிரும்புகின்றோம். 

சட்டவிரோதமாகத் தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி, உச்சபட்ச தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் முன்னின்று செயற்படுவோம் என்பதே அதுவாகும்.

 அதேவேளை முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளடங்கலாக அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19