போராட்டங்களின் செல்நெறி 'தீவிரமடையும் எழுச்சிகளுக்கான எச்சரிக்கை மணியே அவசரகாலநிலை பிரகடனம்'

09 May, 2022 | 11:07 PM
image

-ஆர்.ராம்-

'அதியுத்தமனார்', தனக்குரிதாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு நாட்டில் அவசரகால நிலைமையை பிறப்பித்து ஆணையிட்டிருப்பதாக குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் செயலாளர் காமினி செனரத்.

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்காக இந்த அவசரகால நிலை அமுலாக்கப்பட்டுள்ளதாக காரணமும் கூறப்பட்டுள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியாலும், அதனையடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலையாலும் பொதுமக்கள் வீதிக்கிறங்கியுள்ள சூழலில்  இவ்வாறு அவசரகால நிலைமை பிறப்பிக்கப்படுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும். 

ஏற்கனவே, ஜனாதிபதி கோட்டாபயவின் பிரத்தியேக இல்லத்திற்கு முன்னால் நடைபெற்ற போராட்டம் 'வன்முறையாக்கப்பட்டு' நிறைவுக்கு வந்த தருணத்தில் அவசரகால நிலைமை பிறப்பிக்கப்பட்டது. 

அதன்போதும் மேற்படி காரணங்கூறப்பட்டே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. 

எனினும், அப்போது வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அரசியல், சிவில் தரப்பினரிடமிருந்து மேலெழுந்த எதிர்ப்பலைகள் 'அதியுத்தமனார்' தனது ஆணையை சொற்ப மணித்தியாலங்களுக்குள்ளே மீளப்பெறும் நிலைமையை உருவாக்கியிருந்தன. 

ஆனால், தற்போதைய நிலைமைகள் முழுதாக மாறிவிட்டன. நாடாளாவிய ரீதியில் முழு அடைப்பு போராட்டமொன்று முழுமையாக வெற்றி கண்டுள்ளது. 

நாலாபுறமும் தொழிற்சங்கங்களும், பொதுமக்களும் தாமாகவே வீதிக்கிறங்கி போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள்.

இளையோரும், பல்கலைகழக மாணவர்களும் எழுச்சி கொண்டு கிளர்ந்தெழுந்துள்ளனர். அரசியல் கலப்பற்று வெறும் வெகுஜனப் போராட்டங்களாகவே அவை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. 

இந்நிலைமையில் தான் அவசரகால நிலைமைக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அடுத்து வரும் நாட்களில் பொதுமக்களின் எதிர்ப்பு போராட்டங்களின் வீச்சினை குறிப்பறிந்து அதற்கு எதிராக முன்கூட்டியே எடுக்கப்பட்டதொரு நடவடிக்கையாகவே இதனைக் கொள்ளவேண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, ஆட்சியாளர்கள் தமக்கு எதிரான கோஷங்களையும் கண்டனங்களையும் முற்றாக நசுக்குவதற்கான முன்னறிவிப்பாகவுமே இதனைக் கருதவேண்டியுள்ளது.  

ஏனென்றால் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள விடயங்களின் ஒன்றான 'பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள்' என்பனவற்றை பேண முடியாத கையறு நிலையில் தான் தற்போதைய அரசாங்கம் இருக்கின்றது. 

இதற்கு, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாலும், சமையல் எரிவாயு விநியோக நிலையங்களுக்கு முன்னாலும் தற்போதும் காணப்படும் நீண்ட வரிசைகள் சான்றாகின்றன.

 அதனடிப்படையில், 'அதியுத்தமனாரின்' அவசரகால நிலைமை பிரகடனத்தின் நோக்கத்தினை புரிந்துகொள்வதற்கு நீண்ட தேடல்களைச் செய்யவேண்டியதில்லை.

ஆனால், இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன், 'கடந்த வாரம், இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் அமைதியான கருத்துச்சுதந்திரத்தினை பொதுமக்கள் அனுபவிக்கையில் தற்போது ஏதற்கு அவசரகால நிலைமை பிரகடனம்' என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார். 

எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதென்பது நெருப்பாற்றை நீந்திக் கடப்பதற்கு ஈடானது என்பதை ஒவ்வொரு பொது மகனும் உணர்ந்திருக்கையில் அதனை கனடிய உயர்ஸ்தானிகர் அறியமலிருக்க வாய்ப்பில்லை. 

ஆனால் அவர் தனது இராஜதந்திர வரையறைக்குள் நின்றே பிரதிபலித்திருக்கின்றார். 

அதேநேரம், ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர், அமெரிக்க தூதுவர் ஜுலி சங் உள்ளிட்ட ஏனைய இராஜதந்திரிகளும், அரசியல், சிவில் தரப்பினரும், அவசரகாலநிலை பிரகடனத்துக்கு எதிராக தமது பிரதிபலிப்புக்களைச் செய்துள்ளனர். 

அவர்களின் பிரதிபலிப்புக்கள், 'ஜனநாயகம்' மீதான நம்பிக்கையினை அடியொற்றியவையாகவே உள்ளன. 

ஆனால், 2019ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதியன்றே அநுராதபுரத்தின் ருவன்வெலிசாயவில் ஜனநாயகத்துக்கான 'சாவுமணி' அடிக்கப்பட்டு விட்டது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். 

அதுவொருபுறமிருக்கையில், இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகமும் கேலிக்கூத்தாகிவிட்டது என்பதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும், பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டமையும், அடுத்த 24மணிநேரத்திற்குள் அவர் மீண்டும் இராஜானாமாச் செய்தமையும் மிக அண்மித்த உதாரணமாக இருக்கின்றது. 

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டமை, சுதந்திரக்கட்சி உள்ளிட்ட சுயாதீன அணியினரின் அரசியல் நாடகத்தினை வெளிப்படுத்தியது, சுதந்திரக்கட்சியின் மூன்றாந்தர அரசியல் அம்பலமானது, ரஜபக்ஷவினரின் சகபாடிகளை அடையாளமிட்டது, ராஜபக்ஷக்களுக்கு பாராளுமன்ற பெரும்பான்மை உள்ளதென்பதை உரத்துக்கூறியது உள்ளிட்ட பலகோணப் பார்வைகள் உள்ளன. 

ஆனால், நாடு கொந்தளித்துக்கொண்டிருக்கையில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் அரைநாளொன்று ரஞ்சித் சியம்பலாப்பிட்டிவை மீண்டும் அவர் வகித்த முன்னைய பதவிக்கு தெரிவு செய்வதற்காக, செலவிடப்பட்டுள்ளது. 

குறித்த அரைநாளுக்கான பாராளுமன்றத்தின் செலவீனம் அண்ணளவாக 45இலட்சங்களாகும். 

அன்றாட வாழ்வுக்காக தவித்து வரும் மக்களிடமிருந்து பெறப்படும் வரியில் 45இலட்சத்தினை செலவு செய்து தெரிவு செய்யப்பட்ட ஒருவர், மீண்டும் அப்பதவியில் இருந்து இராஜானாமாச் செய்கின்றார் என்றால் அச்செயற்பாட்டை மூன்றாந்தர அரசியல் செயற்பாடு என்று கூறுவதற்கு கூட தகுதியில்லை. 

அதேநேரம், தனது தெரிவுக்கான செலவீனத்தினை ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீள வழங்குவாரா என்பதும் கேள்வியே.

அதேவேளை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியப் பிரதிநிதிகளின் போராட்டத்தின் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சுக்களும், நீர்த்தாரைப் பிரயோகமும் உக்கிரமடைந்த நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் அலுவலக அறைக்குள் பிரவேசித்த ஐக்கிய மக்கள் சக்தியினர் அழுத்தங்களை பிரயோகித்தனர். 

அதன்விளைவு, சபாநாயகரால் பாராளுமன்ற அமர்வு 17ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது. 

பொதுமக்களால் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு மாதமொன்று நிறைவடைந்துள்ள போதும், மக்கள் ஆணை மன்றமான, ஜனநாயக தளமான பாராளுமன்றின் ஊடாக எவ்விதமான தீர்வுகளும் காணப்படவில்லை. 

ஆகக்கறைந்தது தீர்வுகளுக்கான ஆரம்பச் செயற்பாடுகள் கூட முன்னெடுக்கப்படவில்லை. 

மாறாக, பாராளுமன்றம் அரசியல் நாடகங்களின் அரங்கமாகவே செயற்பட்டு வருகின்ற நிலைமைகள் தான் நீடிக்கின்றன. 

மேலும், ஜனதிபதி கோட்டாபயவையும், பிரதமர் மஹிந்தவையும் வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்துவதே அனைத்துப்போராட்டங்களின் கருப்பொருளாக இருக்கின்றது. 

ஆனால், ஜனாதிபதி கோட்டாபய, புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்குவதும், பிரதமர் மஹிந்த பதவி விலக மாட்டேன் என்று அறிவிப்பதும் தொடர்கதையாக உள்ளது. 

இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போதும், ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்தவை இராஜினாமாச் செய்யக்கோரியதாகவும், பின்னர் அதுதவறான தகவல் என்று மஹிந்த தரப்பு அறிக்கை விட்ட சம்பவம் மூன்றாவது தடவையாகவும் அரங்கேறியுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபயவைப் பொறுத்தவரையில், தனது 'சுபீட்சத்தின் நோக்கு' இலக்கினைத் தொலைப்பதற்கு சகோதரர்களான மஹிந்தவும், பஷிலுமே காரணம் என்று கருதுகின்றார். 

அதனை வௌவேறு சந்தர்ப்பங்களில் நடைபெற்ற உள்ளகச் சந்திப்புக்களில் அவர் வெளிப்படுத்தியும் உள்ளார். 

அதேநேரம், ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும், ஜனாதிபதியாக வேண்டும் நிறைவேற்று அதிகாரம் வேண்டும், பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வேண்டும் என்று கேட்ட அனைத்தையும் வழங்கி அவருடைய (கோட்டாபயவின்) விருப்பில் ஆட்சியை முன்பெடுப்பதற்கு இடையூறும் அளிக்காது இருந்த நான் எதற்காக பதவி விலக வேண்டும் என்பது மஹிந்தவின் உளக்கிடக்கை. 

ஆக, அண்ணரும், 'தம்பியும் விடாக்கண்டன்,கொடாக்கண்டன்' நிலையில் தான் தொடர்ந்தும் இருக்கப்போகின்றார்கள். 

இது நெருக்கடிகளைத் திசை திருப்புவதற்கான வெளிவேசமாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் இல்லாமில்லை. 

இந்நிலையில், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களும், கருத்தாடல் தளங்களும், களங்களும் எதனைச் சாதித்துவிடப்போகின்றன என்ற கேள்விகளை வலுவாக எழுப்புகின்றன. காலிமுகத்திடலில் 'கோட்டா கோ ஹோம்' போராட்டம் தொடர்கிறது.

 அலரிமாளிகையின் முன்னாலிருந்த 'மைனா கோ ஹோம்', பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்த 'ஹொரு கோ கோம்' ஆகியன வலுவாக நீடித்திருக்கவில்லை. 

அதேநேரம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் உள்ளாடைப் போராட்டம் விமர்சனத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. 

ராஜபக்ஷக்களுக்கான 'மொழியாக' அப்போராட்டத்தினை அர்த்தப்படுத்தினாலும், கற்றறிந்த எதிர்கால நகாரீக சந்ததியினரின் செயற்பாடாக கொள்கையில் அநாகரீகமானதே. 

ஆகவே, தற்போதைய நிலையில், வெறுமனே 'கோ ஹோம்' கோசங்களோ, உள்ளாடைப் போராட்டங்களோ ராஜபக்ஷக்களை கிஞ்சித்தும் அசைத்துப்பார்க்கப் போவதில்லை. 

எனவே, தற்போது வீச்சுப்பெற்றுள்ள போராட்டங்களின் 'செல்நெறிகள்' செதுக்கப்பட வேண்டியது கட்டாயமாகின்றது. 

1953இல் 'ஏழைகளின் உணவை ஏழைகளே தேடவேண்டும்' என்று நிதி அமைச்சர் ஜேர்.ஆர். கூறினார். 

அதனையடியொற்றி அப்போதைய பிரதமராக இருந்த ட்டலி சேனநாயக்க கண்ணை மூடிக்கொண்டு ஏதேச்சதிகார தீர்மானங்களை எடுத்தார்.

குறித்த ஆட்சிக்கு எதிராக அதேயாண்டு ஜுலை 23இல் அணிதிரண்ட பொதுமக்களும், ஆகஸ்ட் 12,13 ஹர்த்தாலும் பதிலளித்தன. நிதி அமைச்சர் ஜே.ஆர்.உடன் பதவி விலகினார். 

பிரதமர் பதவியிலிருந்த ட்டலி ஒக்டோபர் 12இல் விலகினார். இது வெகுஜனப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றிக்கான வரலாற்று முன்னுதாரணம். 

எனவே, தற்போதைய நிலையில் தவீரமடையும் ஜனநாயகவழி போராட்டங்களும், பேரணிகளும், கதவடைப்புக்களும் நாளொன்றில் நடைபெறுவதால் மட்டும் மாற்றத்தினைக் காண்பது அரிது. 

அவை, நன்கு திட்டமிடப்பட்டு தொடராக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. 

உள்ளாடைப் போராட்டங்களுக்கும், டிஜிட்டில் வழி போராட்டங்களுக்கும் அப்பால் மரபுவழியிலான ஒருங்கிணைந்த உள்ளிருப்பு போராட்டங்களும், சிறைநிரப்பு போராட்டங்களும் ராஜபக்ஷக்களை நிச்சயம் அசைத்துப்பார்க்கும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48