இனப்படுகொலை செய்யும் சீனா

Published By: Digital Desk 5

09 May, 2022 | 11:20 PM
image

லத்தீப் பாரூக்

சீனாவின் வடமேற்கில் உள்ள மிகப் பெரிய மாநிலமான முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஷின்ஜியாங் 1949இல் சீன பெருநிலப் பரப்புக்குள் உள்வாங்கப்படும் வரை தனக்கே உரிய சிறப்பான பண்புகளைக் கொண்டதொரு மாநிலமாக இருந்தது. 

சீனப் பட்டுப் பாதையில் அமைந்துள்ள ஷின்ஜியாங் சீனாவின் நிலப்பரப்பில் ஆறிலொரு பங்கைக் கொண்டது.

பாகிஸ்தான், கஸகிஸ்தான், கிரிகிஸ்தான் என்பன உள்ளடங்களாக எட்டு நாடுகளை அது எல்லைகளாகவும் கொண்டுள்ளது. எண்ணெய்;, நிலக்கரி, இயற்கை வாயு என்பன இங்குள்ள வளங்களாகும். 

இங்கு 11 மில்லியன் உய்குர் இளத்தவர்கள் வாழ்கின்றனர். இவர்கள் இன ரீதியாக துருக்கி வம்சாவழியினர்.

பத்தாம் நூற்றாண்டு காலப்பகுதியில் மத்திய ஆசியாவில் இருந்து இங்கு வந்து குடியேறி இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள்.

இந்த மாநிலத்தின் மூலோபாய முக்கியத்துவம், இயற்கை வளங்கள் என்பன காரணமாக சீனாவுக்கு அதன் மீதான கட்டுப்பாடு அவசியமாகின்றது. 

இதனால் சீனா ஹான்ஸ் பிரிவு சீனர்களை இங்கு குடியேற்றியது. இது சீனாவின் ஆதிக்கம் மிக்க இனப்பிரிவாகும்.

இந்தப் பிராந்தியத்தின் அரச வேலைவாய்ப்புக்கள் அனைத்தும் இவர்களுக்கு வழங்கப்பட்டதோடு, இயற்கை வளங்களை கட்டுப்படுத்தும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமது கலாசாரம், இன மற்றும் சமய ரீதியான தனித்துவம் என்பன இந்த ஹான்ஸ் பிரிவு சீனர்களால் பாதிக்கப்படுகின்றது என்பதே உய்குர் இனத்தவர்களின் நிலைப்பாடாகும்.

இந்தப் பிரதேசம் கிழக்கு துருக்கி எனவும் குறிப்பிடப்படுவதுண்டு. இந்தப் பிராந்தியம் 1949க்கு முன் இருந்தது போல் சுதந்திரமான பிராந்தியமாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் வாதமாகும். 

சீனாவின் இணைப்புப் பாதை, புதிய பட்டுப்பாதை என்பன போன்ற ஐரோப்பா மற்றும் ஆசியாவுடனான பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் ஷின்ஜியாங் மூலோபாயம் மிக்க பிரதேசமாகும்.

சீனா தனது அபிவிருத்தி திட்டத்துக்கான முன்னேற்பாடாக இங்கு பிரிவினைவாத செயற்பாடுகள் எதுவும் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றது.

அதனை அடிப்படையாகக் கொண்டு சீனா கடந்த பல வருடங்களாக உய்குர் மக்களை தொடர்ந்து நசுக்கி வருகின்றது. அவர்கள் தமது சமயத்தை பின்பற்றவிடாமல் தடுக்கப்படுகின்றனர்.

தமது இனத்தை அடையாளப்படுத்தும் ஆடையை அவர்கள் அணிய முடியாது. அவர்களின் மொழியைக்கூட பேச முடியாது.

2017முதல் ஷின்ஜியாங்கில் வாழும் உய்குர் இன முஸ்லிம் ஆண்களும் பெண்களும் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஷின்ஜியாங்கைச் சேர்ந்த சுமார் இரண்டு மில்லியன் உய்குர் இனத்தவர்களும் ஏனைய சிறுபான்மையினரும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு அவர்களின் சமய உரிமைகள் மறுக்கப்பட்டு மார்க்சிஸ கொள்கைகளைப் படிக்குமாறு வற்புறுத்தப்படுகின்றனர். தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்.

இதேவேளை பிரித்தானியாவின் புகழ்பெற்ற மனித உரிமைகள் சட்டத்தரணி சேர் ஜெப்ரி நைஸ் நியமித்த ஒரு பொது விசாரணை மன்றம் சீனா உய்குர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்துள்ளதாகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை அவர்கள் மீது புரிந்துள்ளதாகவும் தனது முடிவை வெளியிட்டுள்ளது.

உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான மற்றும் துருக்கிய இனம் சார்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் இந்த விசாரணை மன்றம் நியமிக்கப்பட்டது.

உய்குர் முஸ்லிம்களை இலக்கு வைத்து பலவந்தமான பிறப்புக் கட்டுப்பாடு, கட்டாய கருத்தடை கொள்கைகள் என்பன அமுல் செய்யப்படுகின்றன. இந்த இனத்தின் சந்ததி பரவலை தடுக்கும் நோக்கில் இவை செய்யப்படுகின்றன என்று இந்த விசாரணை மன்றத்துக்கு தலைமை தாங்கிய ஜெப்ரி நைஸ் தெரிவித்துள்ளார். 

சட்டத்தரணிகள், கல்விமான்கள் மற்றும் வர்த்தக முக்கியஸ்தர்கள் ஒன்பது பேர் அடங்கிய இந்த விசாரணை மன்றம் 63 பக்க அறிக்கையை தனது தீர்ப்பாக வெளியிட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட சான்றுகளின் படி சீனா ஷின்ஜியாங் மாநிலத்தில் உய்குர் இனத்தவர்கள் வாழும் முக்கிய பகுதிகளில் கட்டாயமான கருத்தடை மற்றும் பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகளை அமுல் செய்துள்ளமை சந்தேகத்துக்கு இடமின்றி நிருபணமாகியுள்ளது 

சீன ஜனாதிபதி, ஷி ஜிங் பிங் மற்றும் சிரேஷ்ட உயர் மட்ட அதிகாரிகள் பலரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உய்குரில் பாதிக்கப்பட்டவர்கள், உய்குர் நிலைமைகள் சம்பந்தமாக நிபுணத்துவம் கொண்ட ஆய்வாளர்கள் எனப் பலர் இந்த மன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர். 

மக்கள் மீது நெருக்கடிகளைப்  பிரயோகித்தல், தடுத்து வைத்தல் மற்றும் உலகில் இருந்து அவர்களை ஒதுக்கி வைத்தல் என்பன மிகத்தீவிரமாக இடம்பெறுகின்ற நிலையில், இவற்றை எல்லாம் மீறி மத்திய கிழக்கு மற்றும் வடஆபிரிக்க நாடுகளில் இருந்து சீனாவுக்கு கிடைத்து வரும் ஆதரவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் என்பன பற்றி சீனா மற்றும் அமெரிக்கா பற்றி ஆய்வு நடத்தும் கிஸின்ஜர் நிறுவனத்தின் வுட்ரோ வில்ஸன் மத்திய நிலையம் புதிதாக  வெளியிட்டுள்ள ‘கிரேட் வோல் ஒப் ஸ்ட்ரீட்’ என்ற அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“உய்குர் முஸ்லிம்களை தான் நடத்தும் முறைமை பற்றி முஸ்லிம் மக்கள் மற்றும் நாடுகள் என்ன நினைக்கின்றன என்பதில் சீனா ஒருவகையான அச்சம் கொண்டுள்ளது. மேலும் அந்த நாடுகளின் அரசுகள் மீது செல்வாக்கு செலுத்துவதிலும் சீனா பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது” என்று வொஷிங்டனில் செயற்படும் கம்யூனிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மன்றம் என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் சென்ஸ் தெரிவித்துள்ளார்.

பத்தி எழுத்தாளர் அனா ஸ்கெட்ச்கே, “சீனா அதன் எல்லைக்குள் மட்டும் உய்குர் இனத்தவர்களை கொடுமை படுத்த வில்லை. வெளிநாடுகளிலும் அவர்களை அது வேட்டை ஆடுகின்றது.

சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் ஆதரவோடு இது இடம்பெறுகின்றது. முஸ்லிம் சிறுபான்மையினர் தொடர்பான தனது நடவடிக்கைகள் விமர்சிக்கப்படக் கூடாது என்பதில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

சீனாவின் எல்லைகளுக்கு அப்பாலும் சிறிய குழுக்களாகக் கூட உய்குர் முஸ்லிம்களின் செயற்பாடுகள் இருக்கக் கூடாது என்பதில் சீனா மிகவும் தெளிவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நான் சந்தித்த சில உயகுர் மக்களின் கூற்றின் படி எகிப்து சுற்றிவளைப்பில் சீன பொலிஸார் துபாய் அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு அங்கமாக எகிப்தில் இருந்து வெளியேறி அமீரகம் வர இருந்த உய்குர் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இன்னெரு பத்தி எழுத்தாளரான ஜரடின் ரோட் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் உலகில் இருந்து தனது நடவடிக்கைகளுக்கு பாரிய அளவில் கண்டனம் எதுவும் வெளிவராமல் சீனா இதுவரை தடுத்து வந்துள்ளது.

எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்பனவற்றில் மேலைத்தேச நாசகார சக்திகளின் ஆதரவோடு பதவியில் இருக்கும் அரசுகளின் வெட்கக்கேடான நிலை இதுதான். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54