யக்கலமுல்ல பிரதேச செயலகத்திற்குக் கீழ் பணிபுரியும் தொழிநுட்ப அதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற முற்பட்டதால் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் இலஞ்சமாக கோரியுள்ள 15,000 ரூபாவில் 5000 ரூபாவை பெற்றுக் கொண்டுள்ள நிலையில் மீதமுள்ள 10,000 ரூபாவில் 8000 ரூபாவை பெறமுற்பட்ட வேளையே கைதாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

பிரதேச வீதிக்கு கொங்கிரீட் இட்டு அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தக்காரர் ஒருவருக்கு, இது தொடர்பான நிதியைப் பெற்றுக் கொள்ள தேவையான தொழிநுட்ப அதிகாரியின் அறிக்கையை பெற்றுக் கொடுக்கவே குறித்த இலஞ்சத் தொகை கோரப்பட்டுள்ளது என, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார். 

யக்கலமுல்ல பிரதேச செயலகத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர் அலுவலகத்தில் வைத்தே பணத்தை பெற முற்பட்டபோது, கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.