(ந.ஜெகதீஸ்)

 

மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்களை பொலிஸார் இடைநிறுத்தக்கோரிய போது மாணவர்கள் தடுப்புக்காவலில் நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் வாள் வெட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கருதி மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவத்தின் போது கடமையில் இருந்த ஐந்து பொலிஸாரும் சிங்களவர்களே. இவர்களின் மொழி தெரியாமல் மாணவர்கள் குறித்த இடத்தில் நிறுத்தாமல் சென்றிருக்கலாம். தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் ஏன் சிங்களவர்களை அதிகமாக கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இது மாணவர்களின் தவறல்ல. ஆட்சியாளர்களின் தவறாகும். இவ்வாறான சம்பவங்களினால் எவ்வாறு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன கேள்வியெழுப்பினார்.

பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த யாழ்பல்கலைகழக மாணவர்களின் படுகொலையை கண்டித்தும் அவர்களின் கொலைக்கான நீதி உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியும்  இன்று மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக  பாரிய கண்டன  ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு முழுவதும் நல்லாட்சியை தோற்றுவிப்பதாக கூறி  இனவாதத்தினை பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 

வட மாகாணத்தில் பொலிஸாரின்  அடாவடித்தனம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. 

பொலிஸார் இரவு நேர கடமைகளில் இருக்கும் போது மக்களை துன்புறுத்துகின்றனர். இதற்கு எதிராக சட்டம் பயன்படுத்தப்படவே இல்லை. இதுவா நல்லாட்சியின் மிக முக்கிய பண்பு?  

நல்லாட்சியிலேயே பொலிஸாரின் அடாவடித்தனம் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது.

கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சியில் பெரிதாக இனவாதம் இருக்கவில்லை. ஆனால் மைத்திரி ரணில் இணைந்த நல்லாட்சியில் இனவாதம் துளிர் விட ஆரம்பித்துள்ளது.

பொலிஸாரின் கட்டளைக்கு அடிபணியாவிட்டால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்படும் கலாசாரமே வடமாகாணத்தில் நிலவி வருகிறது. 

 

ஜனாதிபதி வட மாகாணத்துக்கு சென்று நாட்டில் இனவாதம் மீண்டும் துளிர்விடாது என்றும் நாட்டை பாதுகாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபடுகின்றது என்றும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாக்கப்படுவர் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்.

ஆனால் அவை பொய்யாகியுள்ளது. பொலிஸாரின் அராஜகங்களை கட்டுப்படுத்த முடியாதளவிற்கு அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது. 

நல்லாட்சி அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் வட மாகாணத்தில் சென்று குறித்த மக்களின் துன்பங்களை கேட்க கூட இந்த அரசாங்கத்துக்கு நேரமில்லை என்றார்.