இலங்கை தமிழ் தலைவர்களின் கோரிக்கை தமிழக முதல்வர் ஸ்டாலினை நெகிழ வைத்தது - இந்து பத்திரிகையின் சிரேஷ்ட இணை ஆசிரியர்  டி. இராமகிருஷ்ணன்  

07 May, 2022 | 10:49 AM
image

(நேர்காணல் - ரொபர்ட் அன்டனி )

தமிழகம் இலங்கைக்கு வழங்கும் மனிதாபிமான அவசர உதவி,  இந்திய மத்திய அரசாங்கம் வழங்கும்  டொலர் கடனுதவி, சீனாவுடனான இலங்கையின் உறவு, இலங்கை மீது இந்தியா ஆதிக்கம் செலுத்துகின்றதா? உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்து பத்திரிகையின் சிரேஷ்ட இணை ஆசிரியர்  டி. இராமகிருஷ்ணன்  கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வி

இந்தியா செய்கின்ற  உதவியை பார்த்து இந்தியா இலங்கையை காலனியாக மாற்றிவிடும்.29-ஆவது மாநிலமாக மாற்றி விடும் என்று கூறுவது பொருத்தமற்றது.  அவ்வாறு இந்தியாவுக்கோ இந்திய மக்களுக்கோ எந்த ஒரு சிந்தனையும் இல்லை.  

இது ஒரு கேலியான பேச்சு.  ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்ட   இலங்கைக்கு நாம் எவ்வாறு உதவி செய்யலாம் என்ற எண்ணத்திலேயே இந்தியா இருக்கின்றது.  இந்திய மக்கள் இந்த எண்ணத்திலேயே இருக்கின்றனர்    என்று இந்து பத்திரிகையின் சிரேஷ்ட இணை ஆசிரியர்  டி. இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வி யிலேயே  அவர்  இந்த விடயங்களை குறிப்பிட்டார். 

செவ்வியின் முழு விபரம் வருமாறு,

கேள்வி : தமிழகம் இக்கட்டான காலப்பகுதியில் இலங்கைக்கு உதவி வழங்குவதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் :  இலங்கைக்கான தமிழகத்தின் அவசர உதவி சரியான நேரத்தில் பொருத்தமான தருணத்தில் தமிழக அரசினால் வழங்கப் படுகிறது.  மார்ச் 31 ஆம் திகதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது மனு ஒன்றை கொடுத்திருந்தார்.

அதில் பல கோரிக்கைகள்  இருந்தன. அதில் இலங்கையில் நெருக்கடி இருக்கிறது.அவர்களுக்கு நாங்கள் உதவி செய்யவேண்டும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.  வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு உதவி  செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.  அதன் பின்னர் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும் தமிழக முதல்வர் தொலைபேசியில் பேசி இருந்தார். 

இந்தக் கடிதப் பரிமாற்றம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் இலங்கையிலிருந்து தமிழ் தலைவர்கள் ஒரு கோரிக்கை விடுத்தார்கள்.  அதாவது இலங்கையின் தற்போதைய நெருக்கடியில் மக்களை பிரித்து பார்க்காமல் இலங்கை மக்களுக்கு என்ற ரீதியில் உதவுங்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதனை உள்வாங்கிக் கொண்ட தமிழக முதல்வர் ஏப்ரல் 29ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்.   இலங்கை தமிழ் தலைவர்களின் இந்த கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகழ்ந்து விட்டதாக கூறியிருந்தார். மேலும் இது  இந்திய, இலங்கை உறவுகளை பலப்படுத்தும் என நான்  பார்க்கிறேன்.  தமிழ்நாடு என்பது இந்தியாவின் மிக முக்கியமான மாநிலம். 

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் மிக நீண்டகால உறவு இருக்கின்றது.  இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் தமிழ் மாநிலம் ஒரு  விசேடமான உறவை இலங்கையுடன் கொண்டிருக்கின்றது.  இதுபோன்ற ஒரு முயற்சி உதவி என்பது பொருத்தமான மற்றும் சரியான நேரத்தில் செய்யப்படுகிறது.

முன்னர் இருந்தே இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. குறிப்பாக யுத்த காலத்தில் கூட இந்தியா இலங்கைக்கு உதவி செய்திருக்கிறது.

அப்போதெல்லாம் வடக்கு, கிழக்குக்கு என்று   உதவிகள் சென்றடைந்தன.  ஆனால் அந்த தருணம் வேறு தற்போதைய   சூழல் வேறாக இருக்கின்றது.  அந்த வேறுபட்ட சூழலைப் புரிந்துகொண்டு அந்த கருத்தை உள்வாங்கி இந்த உதவி அளிக்கப்படுகிறது.

இதனை  சிங்கள மக்களும்   புரிந்து கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.    இலங்கையில் இருக்கின்ற இந்த தமிழ் தலைவர்கள் இவ்வாறு தமிழர்களுக்கு மட்டுமன்றி முழு இலங்கையர்களுக்கும் உதவிகளை வழங்குங்கள் என்று கூறிய விடயம்  தமிழக முதல்வரையே நெகிழ வைத்திருக்கின்றது.  

கேள்வி : இலங்கைத் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு என்று இல்லாமல்  இலங்கை மக்களுக்கு உதவிகளை செய்யுமாறு கூறியது தமிழக முதல்வரை நெகிழ வைத்ததாக கூறினீர்கள். அதுபற்றி சற்று விளக்க முடியுமா ?

பதில் : அது இன நல்லிணக்கத்தை ஏற் படுத்தக் கூடியதாக இருக்கிறது.  எல்லா மக்களும் கஷ்டப்படும்போது பொருளாதார நெருக்கடியில் எல்லாரும் விழுந்து இருக் கின்றபோது, பாதிக்கப்பட்டிருக்கின்ற போது அதனை இன ரீதியாக பிரித்துப் பார்க்கச் சென்றால் அது ஒரு நெருடலாக இருக்கும். 

கசப்பான உணர்வுகளை அது கொடுக்கலாம்.  அதனால் அதை இலங்கையில் இருக்கின்ற தமிழ் தலைவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.  அந்த புரிதல்  இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு அடிப்படையாக இருக்கின்றது.  சிங்களமக்கள் மத்தியிலும் இந்த செய்தி செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. 

தமிழ்நாட்டை அவர்கள் ஒரு கண்ணோட்டத்தோடு பார்த்திருப்பார்கள்.  அது வரலாறு.  அது பற்றி நாம் தற்போது விவாதிக்கவேண்டிய அவசியமில்லை.  ஆனால் இப்பொழுது எல்லோருக்குமாகத்தான் இந்த உதவி செய்யப்படுகிறது.  இதில் எந்த ஒரு இன வேறுபாடும் இல்லை.  அவ்வாறு ஆலோசனை வழங்கிய தமிழ் தலைவர்களை நாம் நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

கேள்வி : தற்போதைய  தமிழக முதல்வரின் இலங்கை குறித்த கண்ணோட்டம் அல்லது அணுகுமுறை எவ்வாறு இருக்கின்றது? அக்கறை கூடி இருக்கிறதா? உங்கள் மதிப்பீடு என்ன?

பதில் : தி.மு.க.வைப் பொறுத்தவரையில் பாரம்பரிய உறவு  இலங்கை தமிழ் மக்களுடன் இருக்கின்றது. அதனுடைய நீட்சியாக இதைப் பார்க்கிறேன். இது ஒரு விடயம். இரண்டாவதாக மே 2009 இல் முடிவடைந்த உள்நாட்டு போர் காலகட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தது.   அந்த நேரத்தில் சரியான முறையில் அந்த மக்களுக்கு நிவாரண உதவி  செய்யவில்லை என்ற  அரசியல் விமர்சனம் கண்டனங்கள் அப்போது எழுந்திருந்தன. 

13 வருடங்கள் முடிந்துவிட்டன. அதனால் தாம் காட்டிய உணர்வு. ஈடுபாடு, அக்கறை தற்போது மேலும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க. மற்றும்  முதல்வர் ஸ்டாலின் செயல்படுவதைக் காணமுடிகிறது. அந்த முனைப்பை காணமுடிகிறது. தமிழகத்தில் உள்ள  இலங்கை  மக்களை அகதிகள் என்று கூறாமல் மறுவாழ்வு முகாம் என்று கூறப்படுகின்றது.  எனவே முனைப்பு ஈடுபாடு அதிகமாக இருக்கிறது என்று கூறலாம்.  பொறுப்பும் அதிகமாக இருக்கிறது.

கேள்வி : இலங்கையில் காணப்படுகின்ற தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பாக தமிழகத்தின் பிரதிபலிப்பு எவ்வாறு  இருக்கின்றது?  

பதில் : இது ஒரு கடினமான காலகட்டம். உலக சரித்திரத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். 1991ஆம் ஆண்டு இந்தியா இதுபோன்ற நெருக்கடியை சந்தித்தது.  இரண்டு வாரங்களுக்கு மட்டுமே டொலர் கையிருப்பு இந்தியாவிடம் அப்போது இருந்தது. அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 90 கோடியாக இருந்திருக்கும்.

ஆனால் அதிலிருந்து இந்தியா மீண்டு வந்தது. இப்பொழுது இலங்கைக்கு இந்த பிரச்சினை வந்திருக்கிறது. ஆனால் 1991ஆம் ஆண்டு என நான் கூறும்போது உங்களுக்கு ஒரு நெருடலாக இருக்கலாம். அது இந்திய சரித்திரத்தில் மிக முக்கியமான வருடம் என்று நான் கருதுகிறேன்.

1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் செய்யும் போது கொலை செய்யப்பட்டார்.  இலங்கை, இந்திய உறவில் அது மிக முக்கியமான வருடமாக காணப்படுகிறது.  அதன் பின்னர் இலங்கை பற்றியதான ஒரு ஆர்வம் அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வுகூட காலப்போக்கில் குறைந்து விட்டது.  

அதன் பின்னர் தற்போதுதான் இந்தியா வில் இருக்கின்ற ஊடகங்கள் மொழி வேறு பாடின்றிஇலங்கை பற்றிய பிரச்சினை பற்றி பேசுகின்றன.

பத்திரிகைகள் உங்கள் விடயங்களை பாரியளவில் வெளிக்கொண்டு வருகின்றன. உள்நாட்டு போர் முடிந்ததன் பின்னர் இலங்கை பற்றி அதிகம் பேசப் படவில்லை.  ஆனால் தற்போது அதிகம் பேசப்படுகிறது.  ஒரு கவன ஈர்ப்பாக இருக்கின்றது என்பதை நான் கூறுகிறேன்.  இந்திய அரசாங்கத்தை ஈர்க்குமளவுக்கு அந்த கவனத்தை ஊடகங்கள் வெளிக்காட் டுகின்றன.  இது அனுதாபப்பட்டு எழுதும் விடயமல்ல.

ஒரு விதத்தில் இந்த பொருளாதார நெருக்கடி இலங்கை பற்றியதான ஒரு கவனத்தை இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கிறது.   இந்திய ஊடகங்கள்  தொடர்ச்சியாக இலங்கை நிலைமை பற்றிய செய்திகளை வெளியிடுகின்றன.  விவாதங்களை நடத்துகின்றார்கள்.  இதிலிருந்து நாம் படிப்பினை பெறவேண்டும் என்ற உணர்வில் கூட அதனை கவனிக்கிறார்கள் என்று கூறலாம்.  இது நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக நான் கருதுகிறேன்.

கேள்வி : இந்தியா இலங்கைக்கு தற்போது உதவிகளை வழங்கி கொண்டிருக்கின்றது.  தற் போது கூட ஒரு பில்லியன்  டொலர் உதவிகளை இலங்கை பெற்றுக் கொண்டிருக்கின்றது.  மேலும் இந்தியாவிடம் இலங்கை உதவிகளை எதிர்பார்க்கிறது. எனினும்  இலங்கையில்  இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது.  இலங்கையை இந்தியா தனது மாநிலமாக மாற்றப் போகிறது  போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?  குறிப்பாக  பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

பதில் : அண்ணாமலை ஒரு இளம்  துடிப்பு மிக்க ஒரு தலைவராக இருக்கிறார். நான் கூட அவருடன் சில சமயங்களில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன்.  அவருடைய கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் உங்கள் கேள்விக்கு பதிலளிப்பது என்றால் இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு. 

அந்த நாட்டுக்கு எத்தனையோ பொருளாதார பிரச்சினைகள் இருக்கின்றன.  அவற்றை இந்திய அரசாங்கம் தனக்கு ஏற்ற வகையில் தனது சக்திக்கு ஏற்றவகையில் சமாளித்து வருகிறது. 

அப்படி இருக்கும் பொழுது இலங்கை பற்றி இந்தியாவில்  பிரதமர்களாக வந்தவர்களில்  பெரும்பாலானவர்களுக்கு ஒரு சரியான புரிதல் இருந்தது.  இருக்கின்றது.  இலங்கை அரசியலை பற்றி சமீப கால வரலாறு பற்றி புரிந்து வைத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 450 வருடகாலம் ஐரோப்பியர் ஆட்சியில் இலங்கை  இருந்தது.  எனவே அவர்களுக்கு தேசிய உணர்வு அதிகமாக இருக்கின்றது.  அவ்வாறு பார்க்கின்ற ஒரு வெளிப்பாடாகவே இந்த கருத்துக்கள் வெளிவருகின்றன. இந்தியா ஒரு முக்கிய இடத்தில் இருக்கின்றது.  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல வழிகளில் பாரிய உறவுகள் இருக்கின்றன. 

இலங்கையில் இருக்கின்ற  பல தலைவர்கள் திருப்பதி கோயிலுக்கு வருவது வாடிக்கையாகி இருக்கின்றது. ஏன்   அவர்கள் திருப்பதிக்குச் செல்ல வேண்டும்?  இந்நிலையில் இந்தியா செய்கின்ற  உதவியை பார்த்து இந்தியா இலங்கையை காலனியாக மாற்றிவிடும்.

29-ஆவது மாநிலமாக மாற்றி விடும் என்று கூறுவது பொருத்தமற்றது.  அவ்வாறு இந்தியாவுக்கோ இந்திய மக்களுக்கோ எந்த ஒரு சிந்தனையும் இல்லை.  இது ஒரு கேலியான பேச்சு.  ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்ட  இலங்கைக்கு நாம் எவ்வாறு உதவி செய்யலாம் என்ற எண்ணத்திலேயே இந்தியா இருக்கின்றது.  இந்திய மக்கள் இந்த எண்ணத்திலேயே இருக்கின்றனர்.

இந்தியாவுக்கு பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன.  தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மீண்டு வர 12 வருடங்கள் எடுக்கும் என்று மத்திய வங்கி அறிவித்திருக்கின்றது.  இந்தியா உதவி செய்வதால் இலங்கையின் அனைத்து விதமான பொருளாதார பிரச்சினையும் தீர்ந்துவிடாது.

சில பிரச்சினைகளை இலங்கை மக்கள் தீர்க்க வேண்டும்.  நாங்கள் ஒரு ஒக்சிஜன் வழங்கமுடியும். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வர உதவமுடியும். அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது இலங்கை மக்கள்.  அவர்களுக்கு அதற்கான அனுபவம் அறிவு இருக்கின்றது. சாமர்த்தியசாலிகள், திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.  நாம் உதவி வழங்க முடியும். தற்போதைய நிலையில் இருநாட்டு உறவை மேம்படுத்த வேண்டுமே தவிர தேவையற்ற விடயங்களை திணித்து பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது.   

கேள்வி : இலங்கை சீனாவிடமும் உதவிகளை எதிர்பார்க்கிறது. இதனை இந்தியா எவ்வாறு பார்க்கிறது ?

பதில் : இலங்கை சீனாவிடமிருந்து உதவி பெற முடியும் என்றால் அதில் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.    இதனை சம்பந்தப்படுத்தி பார்க்க வேண்டும் என்று நான் கருதவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பேச்சை நீங்கள் பார்த்தால் இந்தியாவுடன் நல்லுறவு வைக்கவேண்டும் என்று அவர் கூறுகின்றார். 

சீனாவை யாரும் தடுக்க முடியாது. இலங்கை சீனாவிடமிருந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவர உதவிகளை பெறுமானால்அதில் பிரச்சினை இருக்க முடியாது. ஆனால் சீனா இலங்கை கேட்கின்ற அளவுக்கு உதவிகளைச் செய்கின்றதா என்பதை நாம் பார்க்கவேண்டும். 

எவ்வாறான உதவிகள் செய்யப்படுகின்றன? அதாவது வேறு ஏதேனும் நிலைப்பாடுகள் இருக்கின்றனவா என்பது குறித்தே நாம் பார்க்கவேண்டும்.  இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வரவேண்டும் என்பது மிக முக்கியமானது.  அது யார் மூலமாக வரவேண்டும் என்பது குறித்து இந்தியா ஒன்றும் நினைக்கவில்லை.

கேள்வி : நீங்கள் இலங்கையில்  இருக்கும் போது இலங்கை வரலாறு தொடர்பாக ஒரு புத்தகம் எழுதினீர்கள்.  அது தொடர்பாக தமிழகத்தில் எவ்வாறான ஒரு வரவேற்பு இருந்தது?

பதில் : நிறைய பேர் இது தொடர்பாக விமர்சனம் எழுதி இருந்தார்கள்.  பத்திரிகைகள் விமர்சனம் எழுதி இருந்தன.  தொலைக் காட்சிகள் சிறப்பு விவாதங்களை நடத்தியிருந்தன.  இங்கு மூன்று நிகழ்வுகள் அது தொடர்பாக நடைபெற்றன.  அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.   சந்திரஹாசன் அது தொடர்பாக ஒரு அழகான வார்த்தையை பயன்படுத்தினார். 

அதாவது ஒரு மென்மையான அணுகுமுறையை நான் அந்த புத்தகத்தில் பயன்படுத்தியதாக கூறியிருந்தார்.  நான் எந்த இயக்கத்தைப் பற்றியும் கடுமையாக எழுதாமல் அணுகி இருக்கின்றேன்.  எழுத வேண்டிய விடயங்களை எழுதி இருக்கின்றேன். ஆனால் மென்மையாக அணுகி இருக்கின்றேன். 

யாருக்கும் சார்பாக யாரையும் கண்டித்து இது எழுதப்படவில்லை.  அந்தப் புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.  நிறைய விவாதங்கள் இடம்பெற்றன.  அது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54