முஸ்லிம்கள் மத்தியில் மேலெழும் கேள்வி

Published By: Digital Desk 5

01 May, 2022 | 02:39 PM
image

எம்.எஸ்.தீன் 

முஸ்லிம்களின் அரசியலை சரியான பாதையில் முன்னெடுப்பதற்கு முஸ்லிம் கட்சிகளிடம் கொள்கைகளும், திட்டங்களும் இல்லாதிருப்பது கவலைக்குரியதாகும். முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுந்தரப்பினரின் கரங்களைப் பலப்படுத்துவதற்கும் அதற்குரிய விலையாக சமூகத்தையே அடமானம் வைப்பதும் தொடரும் அவலமாகவுள்ளது. 

சமூகத்திற்கு பயனில்லாத வகையிலும், கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்படாதவாறும்; பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டுக் கொண்டாலும், அத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை வெறும் கண்துடைப்பாகவும், கட்சியின் அடிமட்ட ஆதரவாளர்களை ஏமாற்றுகின்றதொரு நாடகமாகவுமே இருக்கின்றன. 

கட்சிக்கும், சமூகத்திற்கும் விரோதமாக செயற்பட்டுக் கொண்டவர்களுக்கே மீண்டும் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பங்களும் வழங்கப்படுகின்றன. முஸ்லிம் கட்சிகளின் இத்தகைய நடவடிக்கைகளினால்; அடிமட்ட ஆதரவாளர்களே ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களிடையே  காணப்படுகின்ற குருட்டுத்தனமான கட்சி விசுவாசத்தினால் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னுமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

சமூகத்திற்காகவே ஆளுந் தரப்பினருடன் ஒட்டிக் கொண்டோம் என்ற போலியான கருத்துக்களையும் வைத்து எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்றுவிடலாமென்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்பது முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைக்குரியதாகும். 

20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கி ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தியதோடு, 19ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்தமையும் தான் நாட்டின் பின்னடைவுக்கு காரணமென்று தெரிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் முதுநபீன் ஆகியோர்கள் அமைச்சர் பதவிகளைப் பெற்றமை சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளன. 

தலைவரின் சம்மதத்துடனேயே 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு வாக்களிக்கப்பட்டது. இதுவே உண்மை. அவ்வாறில்லை என்றால் தலைவர்களினால் சத்தியம் செய்ய முடியுமா? என்று சவால்கள் விடுக்கப்பட்டுள்ளன. இக்கட்சிகளின் தலைவர்கள் இக்குற்றச்சாட்டு குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.

இதனிடையே முஸ்லிம் காங்கிரஸ் நஸீர் அஹமட்டை கட்சியிலிருந்து விலக்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர்களை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் காங்கிரஸ{ம் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஷரப் முதுநபீன், இஸ்ஸாக் ரஹ்மான், அலிசப்ரி ஆகியோர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது. 

முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயநலத்திற்காக சமூகத்தை அடமானம் வைத்துச் செயற்பட்டுக் கொண்டிருப்பதனைப் போன்றே தலைவர்கள் தமது பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக விட்டுக் கொடுப்பு, ஜனநாயகம், மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற வார்த்தைகளைக் கொண்டு சடுகுடு ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். 

20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு தலைவரின் சம்மதத்துடனே ஆதரவு வழங்கினோம் என்று முஷரப், நஸீர் அஹமட் ஆகியோர் தெரிவித்துக் கொண்டிருப்பதில் உள்ள உண்மைத் தன்மையை தலைவர்களின் தெளிவுபடுத்தல்கள் மூலமே கண்டறிய முடியும். ஆனால் அவர்கள் அமைதியாக உள்ளார்கள்.

பொத்துவில் எனும் பிரதேசவாதமும், எக்காரணம் கொண்டு மொட்டுக்கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாதென்ற பிரசாரங்களும், ரிஷாத் பதியூதீனின் மறைமுக ஆதரவுமே முஷரப்பின் தேர்தல் வெற்றிக்கான முதலீடுகளாகும். 

ரிஷாத் பதியூதீன் கைது செய்யப்பட்ட போது அவரை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காது ஆளுந்தரப்பினரின் விருப்பதிற்கேற்றவர்று செயற்பட்டதாக முஷரப்பின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த கையுடன் ரிஷாத்; மீது காட்டிய விசவாசத்தைத் துறந்து ஆளுந்தரப்பினருக்கு விசுவாசியாக மாறினார் முஷரப்

உதய கம்மன்பிலவுக்கு பாடம்புகட்டுவதற்காகவே இரட்டைப் பிரஜாவுரிமை சரத்திற்கு ஆதரவளித்ததாக கூறிய முஷரப் உதயகம்மன்விவலவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த போது முஷரப் அதற்கு ஆதரவாகவும் வாக்களித்தார். இதன்மூலம், உதயகமமன்விலவை பாதுகாத்தவர்கள் பட்டியிலில் இடம்பிடித்துக்கொண்ட அவர், தன்னை ஆளுந்தரப்பினரின் விசுவாசியாக முழுமையாக முத்திரை குத்திக்கொண்டார். 

கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக அரசாங்கத்தின் வரவு,செலவுத் திட்டத்திற்கும் ஆதரவாக வாக்களித்தார். வரவு,செலவுத் திட்டத்தையும், அரசாங்கத்தின் கொள்கையையும் போற்றினார். நிதி அமைச்சராக பஷில் பதவியேற்ற போது நாட்டின் பொருளாதாரம் உச்சத்தைத் தொடுமென்றார்.

ஆனால், இவர் சொன்ன எதுவும் நடைபெறவில்லை. நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை செய்து கொண்டிருப்பதற்கு உள்ள காரணிகளில் அரசாங்கத்தின் வரவு,செலவுத் தி;ட்டமும், பஷிலும் என்றும் தெரிவிக்கப்படுகின்றன. 

ஆளுந் தரப்பினரில் ஒரு பிரிவினர் அரசாங்கத்திற்கு எதிராகவும், கூட்டணிக் கட்சிகள் எதிர்க்கட்சியில் அமர்வதற்கும் தீர்மானித்த போது, பாராளுமன்றத்தில் சுயமாக இயங்க உள்ளேன். புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கப் போகிறேன் என்றார்.

இந்த முடிவில் கூட முஷரப் உறுதியாக இருக்கவில்லை. புதிய அமைச்சர்கள் நியமனத்தின் போது இராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டார். இதன்போது அரசாங்கமும் இன்னமும் பெரும்பான்மையை இழக்கவில்லை. அதனால் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதற்கு தீர்மானித்தேன் என்றார். அப்படியாக இருந்தால் பாராளுமன்றத்தில் சுயமாக இயங்கவுள்ளேன் என்ற முஷரப் அறிவித்தபோது, அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து நின்றதா என்ற கேள்வி எழுகின்றது. அதற்கு முஷரப்பிடமும் பதிலில்லை. 

இவ்வாறு முதல் ஒரு கருத்துக்களையும், பின்னர் அதற்கு மாற்றமான கருத்துக்களையும் முன் வைத்துக் கொண்டிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் முஷரப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு தலைவர் ஆதரவாகவே இருந்தார் என்ற கருத்தும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

இவ்வாறு தமது தீர்மானங்களையும், கருத்துக்களையும் அடிக்கடி முஷரப் மாற்றிக் கொண்டு செல்வதன் பின்னணியில் முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளோ அல்லது பொத்துவிலின் பிரச்சினைகளுக்கான தீர்வோ இருக்கவில்லை என்ற உண்மையில் உள்ள மறுபக்கத்தையும் ஆராய வேண்டும். 

இதேவேளை, மு.கா.வின் தலைவர் ரவூப் ஹக்கீமின் முடிவின் பிரகாரமே 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியதாக என்று நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இதனை ரவூப் ஹக்கீமினால் மறுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர் சாட்சி என்றும் உரைத்துள்ளார். 

இவரது இக்கருத்துக்கள் பற்றி ரவூப் ஹக்கீம் மௌனமாகவே இருக்கிறார். அக்கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனமாக இருக்கிறார்கள். இதேவேளை, தலைவரின் கூற்றுப் பிரகாரமே 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஏற்கனவே ஊடகங்களுக்கு தெரிவித்து இருந்தார். ஆதலால், இதிலுள்ள உண்மை, பொய் முடிச்சுக்களை மு.கா.வினரே அவிழ்க்க வேண்டும்.

நஸீர் அஹமட்டை பொறுத்த வரை அவர் மஹிந்த சார்புக்கொள்கையுடையவர். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கூட மஹிந்தவுக்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டார். அதுமட்டுமல்லாது கட்சிக்கு தலைவராக வேண்டுமென்ற எண்ணத்தையும் கொண்டவர்.ரவூப் ஹக்கீமின் தலைமைக்கு எதிரானவர். 

ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறி, மு.கா.விற்கு எதிராக செயற்பட்டவர். ‘துஆ’ எனும் கட்சியையும் உருவாக்கி மு.கா.வுக்கு எதிராக செயற்பட்டவர். இவ்வாறு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் நம்பகத்தன்மையை முழுமையாக இழந்து நிற்கின்றார்கள். 

இதனால், முஸ்லிம்களின் அரசியல் போக்கு தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்திசைகளில் நின்று கொண்டிருக்கின்றார்கள். தலைவர்களை சவாலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியின் உள்ளக விவகாரங்களை சந்திக்கு  கொண்டு வந்துள்ளார்கள்.

சமூகம் சார்ந்த இலட்சியங்களில்லாது இலட்சங்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியான கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தேவையா என்று முஸ்லிம்கள் சிந்திக்கும் நிலைமையை தோற்றுவித்துள்ளார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22