ரம்புக்கனை ஆர்ப்பாட்ட துப்பாக்கிச் சூடு : உத்தரவிட்ட அதிகாரி, தொடர்புடைய பொலிஸாரை உடன் கைதுசெய்ய உத்தரவு

Published By: Digital Desk 4

27 Apr, 2022 | 09:54 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு  நடாத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும், அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ்  உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய கேகாலை நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை  (27) உத்தரவிட்டது. 

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் துப்பாக்கிச்சூடு : பலர் காயம், ஒருவர்  உயிரிழப்பு | Virakesari.lk

கேகாலை நீதிவான் வாசனா நவரட்ன இந்த உத்தரவை பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு பிறப்பித்தார். சம்பவம் தொடர்பிலான நீதிவான் நீதிமன்ற விசாரணைகளின் தீர்மானத்தை அறிவித்தே, நீதிவான் வாசனா நவரட்ன இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்தமை மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்த  பீ 2424/ 2022 எனும் இலக்கத்தை உடைய வழக்கு இன்று மீள விசாரணைக்கு வந்தது.

 இந் நிலையில், ஏற்கனவே குறித்த சம்பவம் தொடர்பிலான ஸ்தல மேற்பார்வைகள், மரண பரிசோதனை, சாட்சிப் பதிவுகளை  நீதிவான் வாசனா நவரட்ன முன்னெடுத்திருந்த நிலையில், அதனூடாக மன்றுக்கு முன் வைக்கப்பட்டிருந்த விடயங்கள், சாட்சியங்களை மையப்படுத்தி மேற்படி உத்தரவை அவர் பிறப்பித்தார்.

 இன்றைய தினம் வழக்கானது விசாரணைக்கு வந்த போது,  இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகர,  விசாரணைக் குழுவை வழி நடாத்தும் பொலிஸ் அத்தியட்சர்  மொஹான் லால் சிறிவர்தன,  பிரதான விசாரணை அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர்  கருணாதிலக, உப பொலிஸ் பரிசோதகர் விஜேசூரிய மற்றும் சார்ஜன்  உபாலி ஆகியோர் மன்றில் ஆஜராகினர். பொலிஸ் சட்டப் பிரிவு சார்பிலும் இவ்வழக்கில் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி அசங்க கரவிட்ட ஆஜரானார்.

 இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான குழுவினர் பிரசன்னமாகினர்.

 இதனைவிட, பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக ( ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்) ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரியன்சி அர்சகுலரத்ன,  சரத் ஜயமான்ன,  உபுல் ஜயசூரிய உள்ளிட்ட  சட்டத்தரணிகள் குழாம் ஆஜரானது.

 இந் நிலையிலேயே, பிற்பகல் 2.30 மணியளவில், இந்த சம்பவம் குறித்த நீதிவான் நீதிமன்ற பரிசோதனைகள், விசாரணைகளின் தீர்மானத்தை நீதிவான் வாசனா நவரட்ன அறிவித்தார்.

 அதன்படி,  இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த நபரின் மரணத்துக்கு  துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயமே காரணம் என  கேகாலை சட்ட வைத்திய அதிகாரியின்  அறிக்கை, சாட்சியம்  ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிவான் திறந்த மன்றில் அறிவித்தார். அதன்படி இந்த மரணமானது சந்தேகத்துக்கு இடமானது என தீர்மானித்த நீதிவான் வாசனா நவரட்ன,  குறித்த துப்பாக்கிச் சூட்டினை நடாத்த உத்தரவிட்ட அதிகாரி, அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய  பொலிசாரை உடன் கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டார்.

 சி.ஐ.டி.யின் மேலதிக அறிக்கை :

 இன்று வழக்கானது விசாரணைக்கு வந்த போது, இந்த  சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்  சி.ஐ.டி. குழு மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றினை மன்றுக்கு சமர்ப்பித்தது. அவ்வறிக்கை ஊடாக  இரு பிரதான கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்திருந்ததுடன், வாய் மொழி மூலமாக மற்றொரு கோரிக்கையையும்  உத்தரவு கோரி சி.ஐ.டி. அதிகாரிகள் முன் வைத்தனர்.

 குறிப்பாக வாய் மொழி மூலம் முன் வைத்த கோரிக்கையின் போது,  துப்பாக்கிச் சூட்டை நடாத்த உத்தரவிட்ட அதிகாரி, அதனுடன் தொடர்புடைய பொலிஸார் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரினர்.

 எனினும் இதன்போது மன்றில் ஆஜராயிருந்த பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலான ஜனாதிபதி சட்டத்தரணிகள்  அக்கோரிக்கையை எதிர்த்தனர்.  துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள், அதற்கான உத்தரவு பிறப்பித்தவர்கள் யார் என மிகத் தெளிவாக தெரியவந்துள்ள நிலையில் அவர்களைக் கைது செய்து மன்றில் ஆஜர்ச் செய்வதை விடுத்து வெளிநாட்டு பயணத் தடை கோருவது நியாயமற்றது என அவர்கள் சுட்டிக்காட்டினர். இந் நிலையிலேயே அதற்கான உத்தரவை வழங்காத நீதிவான் வாசனா நவரட்ன   துப்பாக்கிச் சூட்டுக்கான உத்தரவுகளை பிறப்பித்தவர்கள்,  அதனுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்து மன்றில் ஆஜர்ச் செய்யும் உத்தரவை பிறப்பித்தார்.

 இதன்போது விசாரணைகளுக்கு  நியாயமான கால அவகாசத்தை சி.ஐ.டி.யினர் கோரிய நிலையில், நீண்ட நாட்களை வழங்க முடியாது என மறுத்த நீதிவான்  எதிர்வரும் மே 2 ஆம் திகதி மேலதிக விசாரணை அறிக்கை மன்றுக்கு அவசியம் என சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.

டி.வி.ஆர்.  உபகரணம் இரசாயன பகுப்பாய்வுக்கு :

 அதே நேரம்,  இன்று இந்த  வழக்கு விசாரணையின் போது, ஆர்ப்பாட்டம்  சார் சம்பவங்கள் பதிவாகிய சி.சி.ரி.வி. காட்சிகளின் டி.வி.ஆர். பதிவு உபகரணம் சி.ஐ.டி.யினரால் மன்றில் ஒப்படைக்கப்பட்டது. குறித்த டி.வி.ஆர். உபகரணத்தை  பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக ஊடாக இரசாயன பகுப்பாய்வாளருக்கு சமர்ப்பித்து, இரசாயன பகுப்பாய்வாளர் ஊடாக அறிக்கை பெற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.  அதற்கான அனுமதியை நீதிவான் அளித்தார்.

இதன்போது, ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புபட்ட எரிபொருள் பெளசர், தற்போது மீரிகம பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ், மீரிகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் அதன் உரிமையாளரின் பொறுப்பில் உள்ள நிலையில் அது தொடர்பிலும் இரசாயன பகுப்பாய்வினை முன்னெடுக்க சி.ஐ.டி.யினரால் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

 சட்டத்தரணிகலின் ஆட்சேபனம் :

 இதற்கு மன்றில் ஆஜராகிய ஜனதிபதி சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனம் வெளியிட்டனர்.

  ஆர்ப்பாட்டத்தின் போது, ரம்புக்கனை புகையிரத தண்டவாளத்துக்கு குறுக்காக நிறுத்தப்பட்டு, தீ வைக்க முயன்றதாக கூறப்படும்  குறித்த பெளசர் வழக்குப் பொருள் என சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், அது எப்படி அதன் உரிமையாளருக்கு கையளிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர்.

 பெளசர் உரிமையாளர் சார்பிலும் இதன்போது மன்றில் சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியிருந்த நிலையில், குறித்த பெளசர் எப்படி அவருக்கு சென்றது என்பது குறித்து நீதிவானும் கேள்வி எழுப்பினார். இதன்போது பொலிஸாரே பெளசரை தமக்கு எடுத்துச் செல்ல அனுமதியளித்ததாக உரிமையாளர் குறிப்பிட்டார்.

  இந்த   பெளசர் வண்டியின் முன் பகுதியை தவிர்த்து, அதன் தாங்கிப் பகுதியை  உரிமையாளருக்கு எடுத்துச் செல்ல பொலிசார் அனுமதித்துள்ளமையும், அதிலிருந்த எரிபொருள் வரகாபொல பகுதி எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இறக்கப்பட்ட நிலையில், வண்டி மீரிகம பகுதியிலுள் உரிமையாளரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளமையும் நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டது.

 இந் நிலையில் சி.ஐ.டி.யினர் கோரிய உத்தரவை வழங்காத நீதிவான், இந்த வழக்குப் பொருளான பெளசர் உரிமையாளருக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை நடாத்தி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க சி.ஐ.டி.யினருக்கு உத்தரவிட்டார்.

பெளசருக்கு தீ வைக்க முற்பட்டமை குறித்து தனியாக வழக்கு :

இதன்போது ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் இடையே பெளசருக்கு தீ வைக்க முற்பட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபரும் இன்று மன்றில் ஆஜராகியிருந்தார். அது குறித்து தனியான வழக்கொன்றினை முன்னெடுத்து செல்லுமாறு சி.ஐ.டி.க்கு ஆலோசனை வழங்கிய நீதிவான் அந்த வழக்கை மே 25 ஆம் திகதிவரை ஒத்தி வைத்தார்.

 முச்சக்கர வண்டிக்கு தீ :

 அதே நேரம் ஆர்ப்பாட்டத்தின் இடையே, ரம்புக்கனை புகையிரத  நிலைய தங்குமிட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியாருக்கு சொந்தமான முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தொடர்பிலும் தனியாக விசாரிக்குமாறு  நீதிவான் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.

 இரு அறிக்கைகள் சமர்ப்பிக்க உத்தரவு :

 அத்துடன் ஆர்ப்பாட்ட சம்பவத்தை அடுத்து, ஸ்தல பரிசோதனைகளை முன்னெடுத்த சொகோ எனும் பொலிஸ் ஸ்தல தடயவியல் பரிசோதனைப் பிரிவினரின் அறிக்கை மற்றும், துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்தவர்களின் பெயர் விபரங்கள் குறித்த அறிக்கை ஆகியன மன்றில் இதுவரை சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் நீதிவானின் அவதானம் செலுத்தப்பட்டது.

 அதன்படி பொலிஸ்  ஸ்தல தடயவியல் பரிசோதனைப் பிரிவின் அறிக்கையை சமர்ப்பிக்க பொலிசாருக்கும், துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்தோரின் பெயர் விபரப் பட்டியலை சமர்ப்பிக்க  கேகாலை சட்ட வைத்திய அதிகாரிக்கும் நீதிவான் உத்தரவிட்டார்.

 அதன்படி, இந்த விடயம் குறித்த மேலதிக வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மே 2 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணி வரை நீதிவான் ஒத்தி வைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35