(லியோ நிரோஷ தர்ஷன்)

பிரிகேடியர் சுஜீத் சிவாஜி படேல் தலைமையிலான இந்திய இராணுவத்தின் உயர் மட்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளது. இலங்கை - இந்திய சிறப்புப் படைப்பிரிவுகள் பங்கேற்கும் 'மித்ர சக்தி" கூட்டுப் பயிற்சி எதிர்வரும் திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.

அம்பேபுஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவு தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை - இந்திய இராணுவங்களுக்கிடையில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் 'மித்ர சக்தி" கூட்டுப் பயிற்சியின் நான்காவது கட்டம் இதுவாகும். 

இரண்டு வாரங்கள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ள  இந்தக் கூட்டுப் பயிற்சியில்  பங்கேற்பதற்காக மேஜர் ராகேஷ் ரோசன் தலைமையில் ஆறு அதிகாரிகள் உள்ளிட்ட 45 இந்திய இராணுவத்தினர் நாளை இலங்கை வரவுள்ளனர். மேலும் இலங்கை இராணுவத்தின் இலகு காலாட்படைப்பிரிவைச் சேர்ந்த 45 படையினர் இந்தக் கூட்டுப் பயிற்சியில்  பங்கேற்கவுள்ளனர்.

இராணுவத் தளபதியின் மேற்பார்வையில் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெறவுள்ள நிலையில், இந்தப் பயிற்சி நிறைவு நாளுக்கு முதல் நாளான நவம்பர் 6ஆம் திகதி இறுதிக்கட்டப் பயிற்சியை மதிப்பீடு செய்வதற்காக பிரிகேடியர் சுஜீத் சிவாஜி படேல் தலைமையிலான இந்திய இராணுவ அதிகாரிகள் குழுவொன்றும் இலங்கை வரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு செய்தி தளம் குறிப்பிட்டுள்ளது.

' மித்ர சக்தி " கூட்டுப் பயிற்சி இரண்டு தடவைகள் இந்தியாவில் இடம்பெற்றிருந்ததுடன் இலங்கையில் இரண்டாவது தடவையாக இந்தப் பயிற்சி எதிர்வரும் திங்களன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.