ராஜபக்சக்களை மாற்றினால் மட்டும் ‘சிஸ்டம்’ மாறி விடுமா ?

Published By: Digital Desk 5

24 Apr, 2022 | 03:42 PM
image

- ஏ.எல்.நிப்றாஸ்  

பெருநாள் அல்லது பண்டிகைக் காலம் வந்துவிட்டால் வியாபாரிகள் காணும் இடமெல்லாம் கடை விரிப்பார்கள். பண்டிகை தினத்துக்கு முன்தினம் இரவு வியாபாரம் பெரும்பாலும் வேறுவிதமாக இருக்கும். விடிவதற்கிடையில் எப்படியாவது கைவசம் இருக்கின்ற சரக்குகளை விற்று, இலாபம் தேடிவிட வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருப்பார்கள். 

எனவே, என்ன பொய்யையாவது கூறி, வாடிக்கையாளரை ஏமாற்றியாவது பொருட்களை விற்றுவிடுவார்கள். இலாபத்தைக் குறைத்தோ வெகுமதிகளை வழங்கியோ, ‘தாமதித்தால் தவிக்க நேரிடலாம்’ என்று ஆசையூட்டியோ மக்கள் அவற்றை வாங்கச் செய்து விடுவார்கள். அதன் பிறகு நேரம் முடிந்ததும் மூட்டையைக் கட்டிவிடுவார்கள். 

இப்படித்தான் இலங்கையின் சந்தர்ப்பவாத, பிரித்தளும் அரசியலும் மக்களை ஆண்டாண்டு காலமாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது.  நிகழ்காலத்தில், இந்த அரசாங்கம் மட்டுமன்றி சில முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட இவ்விதமே செயற்படுவது மக்களுக்கு வெளிப்படையாகவே தெரிகின்றது. 

ஆனால், இது தேசிய அரசியலுக்கோ முஸ்லிம்களின் அரசியலுக்கு புதிதல்ல. இனவாதம், தேசப்பற்று, சிங்களவர்களுக்கு முன்னுரிமை என்ற மாயைகளை கட்டியெழுப்பி சிங்கள மக்களை ஏமாற்றுவதும், மறுபுறத்தில் சமூகத்தை மறந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் சோரம் போவதும் வழக்கமாக நடக்கின்ற சம்பவங்களே என்பதே இங்கு முக்கியமானது. 

இப்போது அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகின்றது. ராஜபக்ஷக்களின் வித்தைகள் எதுவும் பலிக்கவில்லை. ‘சேர் பெயில்’ என்ற விமர்சனங்களை எல்லாம் தாண்டி, ‘கோட்டபாய வீடு செல்ல வேண்டும்’ என்ற கோசங்களும் ‘முழு ராஜபக்ஷ குடும்பமும் ஆட்சியிலிருந்து விலக வேண்டும்’ என்ற அழுத்தமும் என்றுமில்லாத அளவுக்கு மக்கள் தரப்பில் இருந்து பிரயோகிக்கப்படுகின்றது. அத்துடன் ‘முறைமை மாற்றம்’ (சிஸ்டம் சேன்ஞ்) வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. 

ஆனால், கோட்டபாய மட்டும் தான் ‘பெயில்’ ஆகியிருக்கின்றாரா? ராஜபக்ஷ குடும்பத்தை மட்டும் வீட்டுக்கு அனுப்பினால் எல்லாம் சரியாகி விடுமா? என்ற கேள்விக்கு ஆழமாக விடை தேட வேண்டியுள்ளது. 

அப்படிப் பார்த்தால்,  இந்த ஆட்சியே இன்று நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு பிரதான, உடனடி காரணம் என்றாலும், இதற்கு முன்னைய அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும் கூட இந்த நிலைக்கு நாட்பட்ட காரணங்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதை மறுக்கவியலாது. அந்த வகையில், கடந்த பல ஆட்சிகளில் எம்.பி.க்களாக இருந்தவர்கள் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். 

குறிப்பாக, ‘கோட்டாபய ராஜபக்ஷ தோல்வி கண்டுள்ளார்’ என்றால் அது 3 வருடங்களுக்குள் நடந்தது தான். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் கடந்த 25 வருடங்களாக தோல்வியடைந்துள்ளனர். ‘டீல்’ அரசியலாக இது மாறியுள்ளது. இன்னும் இதில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதையே 20ஆவது திருத்தத்திற்கான ஆதரவு, அதற்குப் பின்னர் முஸ்லிம் எம்.பி.க்கள் எடுத்த நிலைப்பாடுகள் மற்றும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றமை ஆகியன எடுத்துக்காட்டுகின்றன.  

‘பழம் தின்று கொட்டை போட்ட’ ராஜபக்ஷ விசுவாசிகளே இப்போதைக்கு அமைச்சு தேவையில்லை என்று ஒதுங்கியிருக்கின்றனர். இந்தச் சூழலில் முஸ்லிம் காங்கிரஸால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு எம்.பி.யான நஸீர் அகமட்டும் மக்கள் காங்கிரஸால் நேரடியாக தெரிவான ஒரேயொரு எம்;.பியான மொஹமட் முஷாரப்பும் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். 

இதனை என்ன மாதிரியான அரசியல் என்று வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. அதேநேரம் 20இற்கு கையுயர்த்திய எம்.பி.க்கள் சிலர் கடைசி பஸ்ஸின் மிதிபலகையில் தொற்றிக் கொண்ட கதையாக தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளனர். இன்னும் ஓரிரு எம்.பி.க்கள் அந்த பஸ்ஸிலும் ஏறிக் கொள்ளமல் நடுவீதியில் நிற்கின்றனர். 

ஆனால் ஒன்று, முஸ்லிம் அரசியல் எந்த அளவுக்கு சோரம் போயுள்ளது என்பதற்கு இது ஆகப் பிந்திய எடுத்துக் காட்டு மட்டுமே ஆகும். இவ்வாறு செயற்பட்ட முதலாவது எம்.பி.க்கள் இவர்கள் அல்லர். இதற்கு முன்னர் பல முஸ்லிம் எம்.பி.க்கள் ஏன் தலைவர்கள் கூட இவ்விதம் செயற்பட்டிருக்கின்றார்கள்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் சம்தப்பட்ட கட்சிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அல்லது முஸ்லிம்கள் அவர்களுக்கு பாடம்புகட்டி வீட்டுக்கு அனுப்பியிருந்தால் மக்களுக்கு எதிரான யாப்புத் திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் தைரியமும், பதவி பட்டம் பணத்திற்குப் பின்னால் போகின்ற கலாசாரமும் எப்போதோ மாற்றப்பட்டிருக்கும். 

எனவே மக்கள் ஒரு விடயத்தை இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது ‘முறைமை மாற்றம்’ என்பது பல மட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் முதன்மையானது, அரசியலமைப்பு, சட்டவாக்க ரீதியான ஏற்பாடுகளில் மேற்கொள்ளப்படும் மாற்றம், மறுசீரமைப்பு எனலாம். இதுதான் இன்று அதிகம் பேசப்படுகின்றது. 

சட்டத்தையும் அரச இயந்திரத்தையும் இயக்குகின்ற அதிகாரிகள், படையினர், கொள்கை வகுப்பாளர்களின் நடத்தைகளில் கட்டமைப்பு மாற்றம் இடம்பெற வேண்டும். 

அதேநேரம்,  இலங்கையர் என்ற புள்ளியில் இன, மத பேதம் கடந்து எல்லோரும் தொடர்ந்தும் ஒன்றிணைந்திருக்க வேண்டியது அத்தியாசியமானது. சிறுபான்மையினரை காட்டி பயமுறுத்தும் இனவாதிகளின் பிரசாரங்களுக்குப் பின்னாலும் மலட்டுக் கொத்து, கருத்தடை வைத்தியர் போன்ற முட்டாள்தனமான கதைகளுக்குப் பின்னாலும் சிங்கள மக்கள் போகக் கூடாது. 

முஸ்லிம்கள் நாட்டுப் பற்று, இன ஐக்கியம் போன்ற விடயங்களை தமது மதத்துடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. எல்லா இடங்களிலும் அளவுக்கதிமாக இன, மத அடையாளத்தை முன்னிறுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல், தமிழ் மக்கள் தமது அரசியல் தீர்வுத் திட்டம் பற்றிய கோரிக்கையையும் இலங்கையர் என்ற பொது அடையாளத்தையும் வேறுவேறாக நோக்குகின்ற மனநிலைக்கு வர வேண்டும். 

நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட்டு, அரச ஆளுகையின் மேல்மட்டத்தில் பிரதானமான முறைமை மாற்றம் மேற்கொள்ளப்படுவது மட்டுமன்றி, இப்போது பிரதிநிதித்துவ அரசியலில் இருக்கின்ற 226 (225+1) பேரில் ஓரிருவர் தவிர மற்றெல்லாரும் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். எல்லா மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் சம்பளத்திற்காக அல்லது அரசியல்வாதிகளுக்காக வேலை செய்யாமல் நாட்டு மக்களின் நலனுக்காக மனச்சாட்சியுடன் பணியாற்ற வேண்டும். 

இனிமேல், புதிதாக தெரிவு செய்யப்படும் எம்.பி.க்கள் இப்போதுள்ள கணிசமான எம்.பி.க்களைப் போலல்லாமல் நன்கு படித்தவர்களாக, விடய அறிவுள்ளவர்களாக, சமூக அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சண்டியர்கள், பேதைவஸ்துடன் தொடர்புபட்டவர்கள். ஊழல்வாதிகள், இனவாதிகளை யாரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யாத ஒரு முறைமை வேண்டும். 

பொதுவாக நாட்டு மக்களும் குறிப்பாக முஸ்லிம்களும் பதவிகளுக்காக சோரம்போகின்ற, பணத்திற்காக விலைபோகின்ற, பெருந்தேசியக் கட்சிகளுக்கு முட்டுக் கொடுக்கின்ற வேலையை மட்டுமே செய்து கொண்டு மக்களை ஏமாற்றுகின்ற எந்தவொரு எம்.பியையும் வீட்டுக்கு அனுப்புவது மட்டுமன்றி, இனி ஒருபோதும் அவ்வாறனவர்களை தேர்ந்தெடுக்கவும் கூடாது. 

ஆக மொத்தத்தில், ஆட்சி மாற்றமோ ஆட்சியாளர்களில் மனமாற்றமோ ஏற்படுவதால் மாத்திரம் நாட்டில் வெற்றிகரமான ‘சிஸ்டம்’ மாற்றமொன்றை ஏற்படுத்தி விட முடியாது. நாட்டின் ஆளுகைக்கான சட்ட ஏற்பாடுகள் மாற்றப்படுவதுடன், ஆட்சியாளர்கள் தொடங்கி அடிமட்ட மக்கள் வரை அனைத்து மட்டங்களிலும் கட்டமைப்புசார், மனப்பாங்குசார் மாற்றம் ஏற்படுவது அவசியமாகும். 

இங்கு, மக்கள் மாற வேண்டியது மிக முக்கியமானது. இல்லாவிட்டால், முறைமை மாற்றம் என்ற கதையெல்லாம் ‘தலையிடிக்கு தலைணயை மாற்றுதைப் போல’ ஒரு ஆட்சி மாற்றத்தோடு முடிந்து போகும். பிறகு பழைய பல்லவி புதிய இசையில் தொடங்கும். வேறு எதுவும் பெரிதாக நடக்காது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04