(எம்.எம்.மின்ஹாஜ்)

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் அர்ஜூன மகேந்திரன் மீது சுமத்தப்பட்டிருந்த பிணைமுறி குறித்தான ‍குற்றச்சாட்டு குறித்த கோப் குழுவின் (அரச தொழில் முயற்சிகள் பற்றிய பாராளுமன்ற குழு) அறிக்கை டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக அர்ஜூன மகேந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். இவரது பதவிக்காலத்தின் போது பிணைமுறி வழங்கலின் போது தனது குடும்பத்தினர் ஒருவருக்கு சலுகை அடிப்படையில் வழங்கியதாகவும் , குறித்த பிணைமுறியின் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அப்போது பொது எதிரணியினர் பெரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பில் பாராளுமன்றத்தின் கோப் குழு விசாரணை செய்ய ஆரம்பித்தது. இதன்போது அர்ஜூ மகேந்திரன் கூட கோப் குழுவில் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த விடயம் தொடர்பாக திறைசேரியினாலும் அறிக்கை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த மாதம் பிணைமுறி மோசடி குறித்தான கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை மத்திய வங்கியின் இரகசியங்கள் வெளிவருவது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் விரைவில் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.