காலி முகத்திடல் “கோட்டா கோ கம” தொடர் போராட்டம் : நீதிமன்றுக்கு 'அறிக்கை சமர்ப்பித்துள்ள பொலிஸார்

Published By: Digital Desk 4

18 Apr, 2022 | 09:40 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு - காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்துக்கு அண்மித்த கோட்டா கோ கம  என போராட்டக் காரர்களால் பெயரிடப்பட்டுள்ள ' ஆர்ப்பாட்டம் செய்யும் இடம் '  ஆகிய பகுதிகளை உள்ளடக்கி இடம்பெறும் பொது மக்கள் போராட்டம்  11 ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  

இந் நிலையில்  இந்த போராட்டம் தொடர்பில், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நேற்றையதினம் ( 18) நீதிமன்றுக்கு விடயங்களை விளக்கும் ' ஏ ' அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்தார்.

 கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனுவெல முன்னிலையில், அவர் இந்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

 அதன்படி, ஜனாதிபதியை பதவியிலிருந்து விலகுமாறும் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும்  ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு தொடரும் இந்த போராட்டத்தின் இடையே,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடையே வன்முறைச் சம்பவங்கள்,  அல்லது பொது அமைதியை பாதிக்கும் சம்பவங்கள் அல்லது அதனை ஒத்த பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றால்  அது குறித்து விசாரணைகளை உடன் நடாத்தி, உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து, ' பீ ' அறிக்கை ஊடாக அதனை மன்றுக்கு அறியத் தருமாறு,   குறித்த அறிக்கையிலுள்ள விடயங்களை ஆராய்ந்து நீதிவான் கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்த போராட்டம் தொடர்பில், பொலிசார் விழிப்புடன் இருந்து விசாரணை நடாத்தி வருவதாக, நேற்று (18) தாக்கல் செய்யப்பட்ட ஏ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொலிஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

' கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி காலி முகத்திடலை அண்மித்து, ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பெரும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டமாக வந்து எதிர்ப்புக்களை வெளியிடலாயினர்.  

ஜனாதிபதியையும், பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் பதவி விலகக்  கோருவது அவர்களின்  முக்கிய கோரிக்கை என சமூக வளைத்தாங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த தினம் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்   இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் அங்கு ஒன்று கூடியதுடன், அவர்கள் தாம் எந்த கட்சியையும் சாராதவர்கள் என  தம்மை பிரகடனப் படுத்திக்கொண்டுள்ளனர்.

அன்றைய தினம் இரவு,  ஜனாதிபதி செயலக பிரதான வாயில் மற்றும்,  ஆர்ப்பாட்டம் செய்யவென நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள ' ஆர்ப்பாட்ட இடம் ' ஆகியவற்றில் தொடர்ச்சியாக தங்கியிருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகங்கள் ஊடாக அறிவித்தனர்.  

அதனால் அவர்கள் தற்காலிக கூடாரங்களையும்,  மலசல கூடங்கள் உள்ளிட்ட வசதிகளையும் அமைத்துக்கொண்டுள்ளனர். 

அவர்கள் ஜனாதிபதி செயலகத்துக்குள் செல்வதற்கு இடையூறு ஏற்படும் விதமாக கூடாரங்கள், மேடைகளை அமைத்துள்ளதுடன்,  உணவு, குடி நீர் களஞ்சியம்,  முதல் உதவி பிரிவு,  வாசிகசாலை,  தொலைபேசி மின் கலங்களை  மின்னேற்றும் இடங்களையும் அமைத்துக்கொண்டுள்ளமை கோட்டை பொலிஸாரின் மேற்பார்வையில் தெரியவந்தது.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் உள்ள வீதியிலும், நடை பாதையிலும் இரும்புக் கம்பிகளைக் கொண்டு தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

நூற்றுக்கும் அதிகமான கூடாரங்கள் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. பெளத்த தேரர்கள், கத்தோலிக்க, இந்து மதகுருமார்,  பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள்,  கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நாளாந்தம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர்.  

அவர்கள் காலி வீதியினூடான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மத அனுஷ்டாங்கள்,  நாடகங்கள், இசை கச்சேரிகளை அரங்கேற்றி வருவதும், ஒலி பெருக்கிகளை பயன்படுத்தி வருவதும் பொலிஸாரால் அவதானிக்கப்பட்டுள்ளன.

இதனால் பகல் வேளையிலும், இரவிலும் காலி வீதியின் ஊடாகவும், அதன் நடைபாதை ஊடாகவும் பயணிக்கும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதுடன்  ஆர்ப்பாட்டக் காரர்கள் பயன்படுத்தும்  உக்காத கழிவுகளை  காலி முகத்திடலில் கொட்டுவதாலும்,  ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதாலும்  சுற்றுச் சூழல் மாசடைதல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டுள்ளன. அத்துடன்  பல குற்றங்கள், உடமை திருட்டுக்கள் அப்பகுதியில் நாளாந்தம் பதிவாகின்றது.  பலர் பல நோய்களுக்காக அன்றாடம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவளித்துக்கொண்டிருந்த  வெள்ளவத்தையைச் சேர்ந்த மொஹம்மட் யூசுப் அஹமட் சிராஸ் என்பவர்  மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

 இந்த போராட்டம் காரணமாக கோட்டை பொலிஸ்  பிரிவில், இரவு பகல் என்று வேறுபாடின்றி பலத்த வாகன நெரிசல் நிலவுகின்றது. இவ்வாறான நிலையில், ஆர்ப்பாட்டத்தின் இடையே, ஏதும் வன்முறைகள், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகள்  இடம்பெறுமாயின், அவற்றை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் மேலதிக பொலிசார் அழைக்கப்பட்டு நிலை கொள்ளச் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் தனியாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தின் இடையே, பொது மக்கள் இடையூறு சம்பவங்கள் தொடர்பில் புகைப்படம், வீடியோ எடுத்து தனியாக விசாரணைகளையும் நடாத்துகின்றனர்.' என அந்த  ஏ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 குறித்த விடயங்களை முன் வைத்தே, கோட்டை பொலிசாரால்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடையே  வன்முறைச் சம்பவங்கள்,  அல்லது பொது அமைதியை பாதிக்கும் சம்பவங்கள் அல்லது அதனை ஒத்த பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றால்  அது குறித்து விசாரணைகளை உடன் நடாத்தி, உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து, ' பீ ' அறிக்கை  சமர்ப்பிக்க நீதிமன்றில் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கே நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:24:23
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32