பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தியுள்ள அரசியல் நெருக்கடி “பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்”

Published By: Digital Desk 5

18 Apr, 2022 | 12:48 PM
image

கலாநிதி கணேமூர்த்தி

சிரேஷ்ட விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழகம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஒரு அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதைக் காணமுடிகிறது.

 

பெற்றோல் டீசல் மண்னெண்ணெய் எரிவாயு மற்றும் அரிசி,பருப்பு,சீனி, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருள்களின் துரித விலையதிகரிப்பு, அதிகரித்த விலைகளிலும் எரிபொருளையும் எரிவாயுவையும் பெறமுடியாமல் மக்கள் நீண்டவரிசைகளில் நாளாந்தம் கால் கடுக்கக் காத்திருக்கும் நிலை, படிப்படியாக அதிகரித்துச்சென்று ஒரு நாளின் பதின்மூன்று மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்பட்ட மின்வெட்டு, அரசியல்வாதிகள் அவ்வப்போது ஊடகங்களில் தலையைக்காட்டி கப்பல் அதோ வந்துவிட்டதுஅடுத்தவாரம் தட்டுப்பாடுகள் நீங்கிவிடும் என்று கொடுத்த உறுதிமொழிகள்ஒவ்வொன்றாகக் காற்றில் பறக்கவிடப்பட்டமை ஆகியன மக்களின் பொறுமையை மிகஅதிகமாகவே சோதித்து விட்டன என்று கூறலாம்.

இந்தநாட்டில் தொடர்ச்சியாகப் பதவியிலிருந்த அரசாங்கங்களும் அவற்றில் அங்கம்வகித்த அரசியல்வாதிகளில் மிகப்பலரும் மக்கள் பணத்தை முறையற்ற விதத்தில் தமது தனிப்பட்டநன்மைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பது ஊரறிந்த இரகசியம். 

இலங்கையின்சட்டங்கள் மிகவும் கடுமையாக இருந்தபோதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தொய்வுகள்இருப்பதை ஒப்புக்கொண்டாகவேண்டும்.

உதாரணமாக அரசியல்வாதிகளும் உயர்பதவி வகிப்போரும் பதவிகளை ஏற்கும் போது தமதுசொத்துகளை பிரகடனம் செய்ய வேண்டுமென்ற விதி இருக்கிறது ஆயினும் குறிப்பாகஅரசியல்வாதிகள் பலர் அவற்றை வெளிப்படுத்துவதில்லை. அவை கணக்காய்வுக்குஉட்படுத்தப்படுவதுமில்லை. 

நேர்மையான சில அரசியல்வாதிகள் தாமாக முன்வந்து அவற்றைவெளிப்படுத்திய சம்பவங்களையும் குறிப்பிட்டாக வேண்டும்.‘தேன் எடுப்பவன் கையை நக்குவது போல’ பொதுமக்கள் பணத்தை கையாள்பவர்கள்அதிலொருபகுதியை தமது சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படும் தன்மைபற்றி மிகப்பழையநூலாகிய அர்த்த சாத்திரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மக்கள் தமது பணத்தைக்கொள்ளையடிக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்ததாகவோபோர்க்கொடிதூக்கியதாகவோ வரலாறு கிடையாது.

மாறாக அரசியல்வாதிகள் வழமையாகக் கையாளும் தாய்நாடு ஆபத்தில் உள்ளது. தமிழர்கள்நாட்டைப் பிரித்து விடுவார்கள் முஸ்லிம்கள் நாட்டைக் கைப்பற்றிவிடுவார்கள் என்றபீதியைக்கிளப்பி சமூகத்தைக் கொதிநிலையில் வைத்திருக்கும் பிரித்தாளும் தந்திரத்தின்மூலம் தமது இருப்பைத் தக்கவைத்தக்கொண்டார்கள். 

இப்போது பதவியில் இருக்கும் அரசாங்கம்வெளிப்படையாகவே இந்த உத்தியைக் கையாண்டு பதவிக்கு வந்தது.

அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகள், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபெரும்பான்மை மற்றும் கடுமையான பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்ட மகாராஜாநீடுழி வாழ்க என்று பாடல்பெற்ற மக்கள் செல்வாக்கு என்பனவெல்லாம் இரண்டே வருடத்தில்தவிடுபொடியாகிய மணற்கோட்டை போல மண்ணோடு; மண்ணாகி விட்டதே? அடுத்துவரும் சில தசாப்தங்களுக்கு அசைக்க முடியாத ஆட்சி என்று கருதப்பட்ட ஆட்சி கதிகலங்கிப்போய்நிற்கிறது.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளியில்இறங்கப் பயப்படுகின்றனர். ஆட்சியின் முக்கிய மைய உறுப்பினர்களின் குடும்பங்கள்நாட்டைவிட்டு நடையைக்கட்டிவிட்டன. 

முன்பொருபோதும் கிளர்ந்தெழாத மக்கள் கூட்டம் இப்போதுமட்டும் கிளர்ந்தெழக் காரணம் என்ன? திடீரென ஞானோதயம் பிறந்து விட்டதா என்ன?

‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்ற நிலை தான் அடிப்படைக் காரணம்.1970களின் ஆரம்பத்தில் மிகப்பெரிய பஞ்சமும் தட்டுப்பாடும் நாட்டை பாதித்த போதுபதவியிலிருந்த அரசாங்கம் பங்கீட்டுத்திட்டத்தின் ஊடாக மக்களின் அடிப்படை உணவுத்தேவைகள்உட்பட நாளாந்த வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருள்களை வழங்கியது.

 அதனைச் சமூகத்தின்எல்லாத் தரப்பினரும் பெற்றுக் கொண்டனர். தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்டமக்களின் வாழ்வாதாரத்தைக் கொண்டுசெல்ல அவசியமான எரிபொருளையும் மின்சாரத்தையும்அரசாங்கத்தால் முறையாக வழங்க முடியவில்லை.

மானியத்தையும் வழங்க முடியவில்லை. ஒரு பொதுமகன் குறைந்த பட்சம் சுயதொழில்ஒன்றைச்செய்து வருமானத்தைப்பெற்று தனது நாளாந்த வாழ்க்கையை நடத்தக்கூடியவாறான ஒருஅடிப்படைச் சூழலை தொடர்ந்தும் பாதுகாக்கத் தவறிமையே அரசாங்கத்திற்கு எதிராகமிகப்பெரிய மக்கள் எழுச்சி உருவாகக் காரணமாகியது. ஒருவன் தனது நாளாந்த வாழ்க்கையைக்கொண்டு செல்ல முடியாத கையறு நிலை ஏற்படும் போது நிச்சயமாக அவன் வீதியில்இறங்கிப் போராடுவான். அது தான் தற்போது நிகழ்ந்துள்ளது.

அத்தகைய பலகுரல்களை நாம் இப்போது கேட்கிறோம். ‘அதிகாரம் ஊழலை உருவாக்கும்:அளவுகடந்த அதிகாரம் நிச்சயமாக ஊழலை ஏற்படுத்தும்’ என்பதற்கேற்ப அரசாங்கத்திற்கு வழங்கபட்ட மிகப்பெரிய மக்கள்ஆணை அவர்களை மிதப்பில் ஆழ்த்தி மக்கள் தாம் எதைச் செய்தாலும் ஏற்றுக் கொள்வார்கள்என்ற அதீத கற்பனையுலகில் சஞ்சரிக்கவிட்டது. 

சுயபுத்தியுமின்றிசொல்புத்தியுமின்றி எடுக்கப்பட்ட பொருளாதாரத் தீர்மானங்கள் ஏற்கெனவேஅடித்தளத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு நீர்க்கசிய ஆரம்பித்திருந்த இலங்கைப்பொருளாதாரத்தில் சம்மட்டியால் அடித்து துளைபோட்டு விட்டன.

2009இல் உள்நாட்டு உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து நாட்டில் உட்கட்டுமானங்களைஉருவாக்கவும் தொடர்ச்சியாக அதிகரித்துச் சென்ற பாதீட்டுப் பற்றாக்குறையைநிதியீட்டம் செய்வதற்காகவும் பெற்றுக் கொள்ளப்பட்ட பொதுப்படுகடன்களின் அளவுகள்அதிகரித்துச் சென்றன.

 அரசாங்கங்கள் கடன் பெறும் எல்லையையும் தொடர்ச்சியாகமேல்நோக்கி நகர்த்தின.அது மட்டுமன்றி சர்வதேச இறைமைக் கடன் முறிகள் என்னும் புதிய கடன் கருவியைப்பயன்படுத்திபெருமளவு நிதி பெற்றுக்கொள்ளப்பட்டது.

 இதன் விளைவாக நாடு தொடர்ச்சியாகமிகப்பாரியளவு வெளிநின்ற கடன்களைக் கொண்டிருந்தது. இலங்கை அரசாங்கத்தின் கடன்முகாமைத்துவம் 2020இன் பின்னர் கடுமையான சவால்களைச் சந்திக்கும் என்று உள்நாட்டு,வெளிநாட்டு பொருளாதார நிபுணர்களும் கடன் தரமிடல் நிறுவனங்களும் அரசாங்கத்தைதொடர்ந்து எச்சரித்து வந்த போதிலும் இலங்கை மத்தியவங்கியும் அரசாங்கமும் அவற்றைத்தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது. 

அதுமட்டுமல்லாது கடன் தரமிடல் நிறுவனங்களின்தரமிடலுக்கு எதிராக மோதல் போக்கினையும் கொண்டிருந்தன.

அரசாங்கம் ஆரம்பித்த கனவுத்திட்டங்கள் போதியளவு டொலர்கள் உட்பாய்ச்சல்களைஏற்படுத்தத் தவறிய நிலையில் 2019இன் இறுதியில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டகொரோனா காரணமாக இலங்கையின் பிரதான வருவாய் மூலாதாரங்களில் ஒன்றாகியஉல்லாசப் பயண வருவாய்கள் வற்றிப் போயின.

 இலங்கைப் பணியாளர்கள் உழைத்தனுப்பும்பணஅனுப்பல்களில் தொய்வு எற்பட்டது. நாட்டின் ஏற்றுமதிகளிலும் இறக்குமதிகளிலும்பாதிப்பு ஏற்பட்டது.

இவையும் இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் ஆற்றலில் உடனடிப் பாதிப்பகளை ஏற்படுத்தின.சந்தையில் இலங்கையின் இறைமைக் கடன் முறிகளின் விலைகள் 50சதவீத வீழ்ச்சியைச் சந்தித்தன.

இதனால் அவற்றின் வட்டிவருவாய் வீதம் 1020சதவீதமாக பலமடங்கு அதிகரித்து. இவற்றின்விளைவாக 2019இல் சுமார் 7 பில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட இலங்கையின் உத்தியோகபூர்வ ஒதுக்குகள் வற்றிப்போய் புதிய நிதி அமைச்சரின் கூற்றுப்படி மிக மிகமோசமான மட்டத்திற்கு குறைந்து போயுள்ளது.

இவ்வாண்டின் ஆரம்பத்தில் 500 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இறைமைக் கடன்முறிகளுக்கான செலுத்தல்களை மேற்கொள்ள வேண்டாமென நிபுணர்கள் எச்சரித்தனர்.ஆயினும் அது செலுத்தப்பட்டது.

 எதிர்வரும் ஜூன் மாதம் மேலும் ஒரு பில்லியன்டொலர்களைச் செலுத்த வேண்டியுள்ளது. 2022 தொடக்கம் 2026 வரையிலான காலப்பகுதியில்இலங்கை 26 பில்லியன் டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டு நாணயக் கடன்களை மீளச்செலுத்த வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் இலங்கையால் இதனை நிச்சயமாகச் செலுத்தமுடியாது.

சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று தேவையான நிதி உதவிகளையும் தொழில்நுட்பஆலோசனைகளையும் பெற்றுச் செயற்படுமாறு இலங்கைப் பொருளாதாரம் தொடர்பில்கரிசனையுள்ள சகல தரப்பினரும் மீண்டும் மீண்டும் அரசாங்கத்தை மன்றாடிய போதிலும்அவை யாவும் ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’ மாறியது. இப்போது இலங்கைப் பொருளாதாரம்மிக ஆழமாக வீழ்ச்சியடைந்த பின்னர் ‘சென்றுவிட்ட பேருந்துக்கு கை காட்டுவது’ போல

அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் உதவியைபெற்றுக்கொள்வதற்காக விரைகிறது.சுயாதீனமான சில தரப்பினரின் கணிப்பீடுகளின் படி இலங்கை அரசாங்கம் 2020ஜனவரிமாதம் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கும் போதே சர்வதேசநாணயநிதியத்திடம் சென்றிருந்தால் இப்போது ஏற்பட்டுள்ள இந்த பொருளாதாரநெருக்கடி நிலையை நிச்சயமாகத் தவிர்த்திருக்க முடியும்.

 விவேகமற்ற அரச தீர்மானங்கள்காரணமாக நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 5.5 பில்லியன் டொலர்கள் என்றுமதிப்பிடப்பட்டுள்ளது.

நாளை திங்கட்கிழமை சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உள்ளதாகநிதியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையும்அவதானிக்க முடிகிறது. 

குறிப்பாக 2022 ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி மாலை 5 மணிக்குப்பின்னர் பரிமாற்றக்கடன்கள் தவிர்ந்த சகல வகையிலான கடன்கள் மீதான கடன்சேவைகளையும் உடன் நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

வழமையாக கடன் வாங்கியவரும் கொடுத்தவரும் கலந்துரையாடியே இவ்வாறான தீர்மானங்கள்எடுக்கப்படும் எனினும் இது இலங்கை அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான தீர்மானமாகஎடுக்கப்பட்டது. சாதாரண வார்த்தைகளில் சொன்னால் இலங்கை அரசாங்கம் தான் பெற்ற கடன்களைமீளச்செலுத்த முடியாமல் உள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

எதிர்காலத்தில் செலுத்தப்படவேண்டியுள்ள கடன்களையும் அவற்றுக்கான வட்டி மற்றும்சேவைக்கட்டணங்களையும் செலுத்த முடியாது என்று முன்கூட்டியே கடன் வழங்கியவர்களுக்குஅறிவிப்பது இதன் நோக்கமாகும். இக்காலப்பகுதியில் கடன்வழங்கியவர்களுக்கு செலுத்தப்படவேண்டிய கொடுப்பனவுகளை அவர்கள் விரும்பினால் இலங்கைரூபாவில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அல்லது அவற்றை மூலதனத்தோடு சேர்த்துவிடலாம். எனவும் இதுபற்றிய அவர்களது விருப்பத்தை ஒருமாத காலப்பகுதிக்குள்அறிவிக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு இலங்கை அரசாங்கங்கம்; தான் பெற்ற கடன்களை செலுத்த முடியாது என அறிவிப்பதுஇதுவே முதன் முறையாகும். சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு கடந்த 12 ஆம்திகதி வரை இலங்கைதான் பெற்ற கடன்களை முறையாக மீளச் செலுத்தி வந்துள்ளது. 

எனினும் துரதிருஷ்ட வசமாகமுறையற்ற பேரினப்பொருளாதார முகாமைத்தவம் காரணமாக தவிர்க்க முடியாத வகையில்இவ்வறிவிப்பைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில்பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாது என்று அறிவித்த நாடுகள் பட்டியலில் லெபனான்,ஆர்ஜன்டீனா, பேலிஸ், சாம்பியா மற்றும் சுரினாம் ஆகிய நாடுகள் இருந்தன.இப்போது இந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்து கொண்டுள்ளது.

சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் காலப்பகுதியில் நாட்டின்அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதிக்காகத் தேவைப்படும் அந்நியச் செலாவணியைப்பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை இந்தியாவிடம் 2பில்லியன் டொலர்களை மேலதிககடனாகக் கேட்டுள்ளது. இந்திய அரசாங்கமும் அதற்கு சாதகமாகப் பதிலளித்துள்ளதாகத்தெரிகிறது.

அத்துடன் சீனாவிடமும் மேலும் 1.5பில்லியன் டொலர்கள் பெறுமதியான நிதிகோரப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இது தவிர சர்வதேச நாணயநிதியத்திடம்இணைப்பு நிதியுதவியாக 3 தொடக்கம் 4 பில்லியன் டொலர்கள் வரைகிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் நிதியமைச்சர் அலிசப்ரி குறிப்பிடுகிறார்.

இவ்வாறான இடைக்காலக் கடன் நிதிவசதிகள் மூலம் எரிபொருள் உணவு மருந்துப்பொருள்உட்பட்ட அத்தியாவசியப்பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்கிவிடலாம்.

தட்டுப்பாடுகள் நீங்கி மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டால் அரசுக்குஎதிராக தற்போது முனைப்படன் மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைகாற்றுப்போகச் செய்துவிடலாம் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஆனால் சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சு வார்த்தைகளில் இலங்கை மிகப்பலவீனமான ஒருநிலையிலேயே சென்று அமரப்போகிறது. தேவநாராயணன் போன்ற அனுபவமுள்ளநிபுணர்கள் இலங்கைக்கு உதவலாம்.

 எனினும் நிபுணர்களின் அழுத்தம் ஒரு கட்டத்திற்குஅப்பால் செல்ல முடியாது. ஆகவே வழமையான நிபந்தனைகளுடன் கூடிய ஒரு கட்;டமைப்புசீராக்கத்தை ஒத்த ஒரு நிபந்தனைப்பொதியை இலங்கை சந்திக்க நேரிடும்.

ஏற்கெனவே இலங்கை மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த ஐந்து சிபாரிசுகளைசர்வதேச நாணயநிதியம் முன்வைத்திருந்தது. வரிகளை அதிகரிப்பது அரச செலவினங்களைக்குறைப்பது நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது வட்டிவீதங்களைஅதிகரிப்பது நாணயமாற்று வீதத்தை மிதக்க விடுவது மற்றும் இக்கொள்கைச்சீர்திருத்தங்களால் பாதிக்கப்படும் மக்களுக்க உரிய சமூக பாதுகாப்பு வலைப்பின்னல்களைஎற்படுத்தி அதற்கு அதிக நிதி ஒதுக்குதல் போன்றவை அதில் உள்ளடக்கம்.

அத்தகைய கொள்கைச் சீர்திருத்தங்கள் உரிய பலன்களைத் தரமுன்னர் பொருளாதார நிலைமைகள்மோசமடையக் கூடிய வாய்ப்பகள் அதிகம்.

 ஆகவே இப்போது அரசாங்கத்திற்க எதிராகஏற்பட்டுள்ள சமூக எழுச்சியை சமாளிக்க வேண்டுமானால் நாட்டிற்கு நல்ல மாற்றங்களைச்செய்ய விட்டுக்கொடுப்படன் அரசியல் வாதிகள் செயற்படவேண்டும். ஆனால் அதற்கானவாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21