மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் கண்ணகிபுரம் கிராமத்தில் சகோதரர்கள் இருவர் கத்திக்குத்துக்கு இலக்கானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொன்னம்பலம் யசோதரன் (பிரதிப்) மற்றும் அவரது சகோதரரான பொன்னம்பலம் உதயசங்கர் ஆகியோரே இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

கத்திக்குத்துக்கு இலக்காகான சகோதரர்கள் இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது தம்பியை யாரோ தாக்குகின்றார்கள் என்பதை அவதானித்த உதயசங்கர் அதனை தடுக்கச்சென்ற வேளையில் அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

யசோதரன் நேற்று மாலை 7.00 மணியளவில் தனது வீட்டில் இருந்த வேளை வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த இருவர் தாங்கள் இரகசிய விசாரணைப்பிரிவில் இருந்து வருகை தந்திருப்பதாகவும் யசோதரனை வெளியில் வரும்படியும் அழைத்துள்ளனர்.

வெளியில் செல்ல யசோதரன் மறுத்த வேளையில் வீட்டினுள் நுழைந்த இனந்தெரியாத இருவரும் யசோதரனை சரமாரியாக கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனைத் தடுக்கச்சென்ற அவருடைய அண்ணன் உதயசங்கரும் ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் கதறியழுகையில் பயந்து தப்பியோடிய இனந்தெரியாத நபர்களை கிராமத்து இளைஞர்கள் சிலர் பின்தொடர்ந்து விரட்டி செல்கையில், ஓந்தாச்சிமடம் எனும் இடத்தில் சந்தேக நபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது.

உடனடியாக வீதிப்போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு விடயம் அறிவிக்கப்பட்டு சந்தேக நபர்கள் இருவர் களுவாஞ்சிகுடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யசோதரன் மத்தியகிழக்கு நாட்டிற்கு வேலைக்காக சென்று விடுமுறைக்காக நாடுதிரும்பியிருந்த நிலையில் விடுமுறை நிறைவுற்று இன்று மீண்டும் வெளிநாடு செல்லவிருந்தார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

- அப்துல் கையூம்