களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான குமார வெல்கமவின் மத்துகம வெலிங்டன் தோட்டத்தில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையானது சிறுபிள்ளைத்தனமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் டிபெண்டர் வண்டிகளை தேடியே அமைச்சர் குமார வெல்கம வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

எவ்வாறாயினும் குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது வாகனங்களை கண்டுபிடிக்கவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாட்டினை குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்டதா.? அல்லது நிதி மோசடி விசாரணை பிரிவு மேற்கொண்டதா.? என்பது குறித்து தான் தெரிந்திருக்காவிடினும் இதனால் பொலிஸார் சேறு பூசிக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறான சிறுபிள்ளைத் தனமான செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் அவற்றினை கண்டுபிடிப்பதற்கு தேவையான தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறும்  புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தில் இதற்கான உபகரணங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறான முறையற்ற செயற்பாடுகள் மக்களின் நகைப்புகுரியதாக மாறிவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.