கொழும்பு வீட்டிலிருந்து வெளியேறும் மைத்திரி ; அரசாங்கத்தால் மற்றொரு வீடு வழங்கப்பட்டது

14 Apr, 2022 | 01:55 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு பெஜட் வீதியில் அமைந்துள்ள  வீட்டிலிருந்து வெளியேறவுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக  இருந்த காலப்பகுதியில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்திய  கொழும்பு , பெஜட் வீதியில் அமைந்துள்ள  வீட்டை,  ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தொடர்ந்தும் அவருக்கு சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில்  அமைச்சரவை ஊடாக முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு உயர் நீதிமன்றம்  கடந்த மார்ச் 29 ஆம் திகதி  இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான யசந்த கோதாகொட, மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய  நீதியரசர்கள் குழாமே இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்தது.  

இந்த இடைக்கால தடை உத்தரவானது,  பிறப்பிக்கப்பட்ட தினமான  மார்ச் 29  ஆம் திகதியிலிருந்து நான்கு வாரங்களின் பின்னர் அமுலகும் வண்ணம் பிறப்பிக்கப்பட்டது. 

அதனால் பெஜட் வீதி வீட்டில் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியால் தங்கியிருக்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், புத்தாண்டின் பின்னர் அவர் அவ்வீட்டிலிருந்து வெளியேறுவதாக  அறிவித்துள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பில் மற்றொரு வீட்டினை அரசாங்கம் வழங்கியுள்ள நிலையிலேயே, பெஜட் வீதி வீட்டை விட்டு அவர் வெளியேறி, புதிய வீட்டில் தங்கவுள்ளார்.

பெஜட் வீதியில் அமைந்துள்ள  வீட்டை,  ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில்  அமைச்சரவை ஊடாக முன்னெடுக்கப்பட்ட தீர்மானம்  அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக  தீர்ப்பளிக்குமாறு கோரி மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர்  பாக்கியசோதி சரவணமுத்துவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

 இந் நிலையில் இந்த பெஜட் வீதி வீடு தொடர்பில் செய்தியாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ( 13) விளக்கமளித்தார்.  

அதன் போது அவர் தெரிவித்ததாவது,

'பெஜட் வீதி வீடு தொடர்பில் பல்வேறு வதந்திகள்  பரப்பட்டுள்ளன.  அவ்வீட்டின் பெறுமதி 800 கோடிகள் என செய்திகள் பரப்படுகின்றன. 

அது தவறு. 800 கோடி அல்ல, 400 கோடி பெறுமதியான வீடு கூட இலங்கையில் எங்கும் இல்லை.  இது என் மீது சேறு பூசுவதற்காக கூறப்படும் பெறுமதியாகும்.

பெஜட் வீதி வீட்டிலிருந்து வெளியேற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் நான் புத்தாண்டின் பின் வெளியேறுவேன். அரசாங்கம் மற்றொரு வீட்டை நான் தங்குவதற்காக அளித்துள்ளது.

 உண்மையில்,  பெஜட் வீதி வீடு ஒன்றும் சொகுசு வீடல்ல. 5 அறைகள் அவ்வீட்டில் உள்ளன. 

எனக்கு முன்னர் அவ்வீட்டை  முன்னாள் அமைச்சர்  கெஹலியவே பயன்படுத்தினார். நான் ஜனாதிபதியாக இருந்த போது, அவ்வீட்டை ஓய்வுபெற்ற பின்னரும் நானே பயன்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரத்தை அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீரவே சமர்ப்பித்தார்.

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  சந்தேக நபர்கள், பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல் மன்னர்களிடமிருந்து எனக்கிருந்த அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இல்லமொன்று எனக்கு அவசியம் என்பதால்  அவ்வாறு  அதே வீட்டை வழங்க அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதாக அந்த பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது.

 நான் அமைச்சரவையின் பிரதானியாக இருந்த ஒரு கூட்டத்திலேயே இதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டமையே  நான் செய்த தவறாக கூறப்படுகிறது.

 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டம் பிரகாரம் ஓய்வுபெறும் ஜனாதிபதிகளுக்கு வீடுகள் வழங்கப்படும். அச்சட்டத்தை பாராளுமன்றம் ஊடாக ரத்து செய்தால், இந்த பிரச்சினை எதுவும் வராது.  ' என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32