நாட்டு மக்களின் ஜனநாயக கோரிக்கைக்கு மதிப்பளியுங்கள் : இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் செந்தில் தொண்டமான்

11 Apr, 2022 | 01:10 PM
image

(ஜே.ஜி.ஸ்டீபன்)

"கோ ஹோம் கோட்டா" என்ற சொற்பதத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டமானது ஜனநாயக ரீதியிலான உரிமையோடு தொடர்புபட்டிருக்கிறது. ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் இடையூறாக இருக்காது.

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து எழுச்சிகண்ட நாடுகளின் பொருளாதார வல்லுநர்களை நம்நாட்டவர்களுடன் தொடர்புபடுத்தி அந்நாடுகளின் நிபுணத்துவ முறைமைகளையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் நம் நாட்டிலும் செயற்படுத்துவதன் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார வீழ்ச்சி எனும் சவாலை வெற்றிகொள்ள வாய்ப்பிருக்கிறது. 

நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து விடுபட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். அதற்கென முன்னெடுக்கும் அரச வேலைத் திட்டங்கள் சாத்தியமானதாக இருக்கும் பட்சத்தில் அத்தகைய முன்மொழிவுகள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர் பீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்று காங்கிரஸின் புதிய தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

வீரகேசரிக்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போதே இதனைக் குறிப்பிட்டார்.

நேர்காணலின் விபரம் வருமாறு

கேள்வி: நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் பாதிப்படைந்த மக்கள் வீதியில் நிற்பதற்கும் பொறுப்புக் கூறல் யாரிடமுள்ளது என்பதைக் கணிப்பிட முடியுமா?

பதில்: 2019ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் கடன்களைப் பெற்று அதன் சுமை அதிகரித்ததே இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு காரணி என்றால் ஒருவர்மீது மாத்திரம் விரல் நீட்டி குற்றம் சாட்டி விடமுடியும்.  ஆனால் முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் தனியார் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பிற்பட்ட காலப்பகுதியிலிருந்து இலங்கை அந்நியர்களிடமிருந்து கடனுக்கு மேல் கடன் பெற்றிருக்கிறது. 

நிலைமை இப்படியிருக்கும்போது நாட்டின் இன்றைய வீழ்ச்சிக்கு மூலகாரணி என்ன என்பது குறித்து விரல் நீட்டுவதை விடுத்து மிகத்துல்லியமாக ஆராயப்பட வேண்டியது மிகமிக அவசியமாகும்.

அமரர் ஜே.ஆர். ஜயவர்தனவின் காலம்முதல் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களின் அநுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் பற்றி இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை அனுகூலமாக்கிக்கொள்ளாத  ஆட்சியாளர்கள் அனைவரும் நாடு எதிர்கொண்டுள்ள இன்றைய பொருளாதார கஷ்டங்களுக்கும் மக்களின் துன்பங்களுக்கும் பொறுப்பாளிகளாக வேண்டும். உதாரணமாக பத்து பில்லியன் டொலர்களை கடனாகப் பெற்று அதனை 15 பில்லியன்களாக அதிகரித்திருந்தால் அது அநுகூலமாகும்.

ஆனால் அதனை வீணடித்திருக்கும் பட்சத்தில் அதற்கான காரணர்கள் அனைவரும் குற்றவாளிகளேயாவர். நம் நாட்டைப் பொறுத்தவரையில் இங்கு 20 சதவீத உற்பத்தியும் 80 சதவீத இறக்குமதியும்  என்ற நிலையே காணப்படுகிறது. டொலரின் வருமதியானது தேயிலை, இறப்பர், ஆடைத் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்டவற்றின் மூலம் அடையப்படுகிறது.

ஆனால் கொவிட் 19 தாக்கக் காலப்பகுதியில் எமது நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சி கண்டிருந்தது. வெளிநாடுகளில் தொழில் புரிந்தவர்கள் தொழிலிழந்து நாடு திரும்பினர். இவ்வாறான இக்கட்டான காலப்பகுதியில் தான் தேயிலை உற்பத்திக்காக பயன்படுத்தப் படுகின்ற இரசாயன உரமும் ஜனாதிபதியினால் தடைசெய்யப்பட்டது. எந்தவிதமான அனுமானமும் இல்லாது, திட்டங்கள், நோக்கு இல்லாது சடுதியாக  உரம் தடைசெய்யப்பட்டது. இது தேயிலை உற்பத்தியில் பாரிய தாக்கத்தை செலுத்தியது.  இவ்வாறான பல்வேறுபட்ட காரணிகளால் எமது நாட்டுக்கான டொலர் வருமதி பாரிய சரிவை எதிர்கொண்டது. 

அந்த சரிவானது பொருட்கள் இறக்குமதியில் தாக்கம் செலுத்தியதன் விளைவாக 20 சதவீதமான உற்பத்தியிலிருந்து நுகர்வோருக்கான நூறு சதவீத தேவையை பூர்த்திசெய்ய முடியாது போனது. ஆதலால் பற்றாக்குறை நிலைபேறாக மாறி பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வதற்கும் காரணமானது. இவ்வாறான பொருளாதார தளம்பல் நிலை தொடர்பில் அரசாங்கம் ஏற்கெனவே அறிந்திருந்தும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் மிகத் துல்லியமாக ஆராய்வதற்கும் அதிலிருந்து மீள்வதற்கான திட்டமிடல்களிலிருந்தும் தவறிழைத்து விட்டது.

இது அரசாங்கத்தின் திட்டமிடல்களின் வீழ்ச்சியையே சுட்டி நிற்கிறது. சரியான திட்டமிடல்கள் இருந்திருந்தால் இன்னும் சில வருடங்களுக்கு முன்னோக்கிப் பயணித்திருக்க முடியும். ஆனால் அனைத்தும் செயலாக்கமற்றதா கிவிட்டது. அதுமாத்திரமன்றி வெறுமனே காரணிகளைக் கூறி காலம் கடத்தப்பட்டதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

கேள்வி: மின்சாரத்துண்டிப்பு மக்களை சங்கடத்துக்குள் ஆழ்த்தியிருக்கிறது. இதிலும் அரசாங்கம் தவறிழைத்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: நம் நாட்டைப் பொறுத்தவரையில் மின்சாரத் தடையானது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நம்நாட்டில் மின்சார உற்பத்தியானது நீர்மின் உற்பத்தி, அனல்மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி என்ற முறைமைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மேற்குறிப்பிட்ட தான நீர்மின் உற்பத்தி தவிர்ந்த ஏனைய இரண்டு முறைமைகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு டொலர் பிரதானமானது.

டொலருக்கான தட்டுப்பாடொன்று எழப்போகிறது என்பது உணரப்பட்ட மாத்திரத்தில் அரசாங்கம் சுதாகரித்துக் கொண்டிருக்க வேண்டும். இது ஏனைய சேவைகளில் தாக்கத்தை செலுத்துவது போன்று மின்சாரத்துறையிலும் தாக்கத்தை செலுத்தவல்லது என்பதை அரசாங்கம் கண்டறிந்திருக்க வேண்டும். 

ஆகையினால் சகலரும் (SOLAR POWER)  சூரிய மின்கலத்தினாலான மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தூண்டியிருக்க வேண்டும். அவ்வாறு தூண்டப்பட்டிருந்தால் இன்று நாட்டில் பாரிய மின்சார சேமிப்பு ஒன்றை மேற்கொண்டிருக்க முடியும். இது நடைபெற்றிருந்தால் இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மின் குமிழும் ஒரு காற்றாடியேனும் இயங்கு நிலையில் இருந்திருக்கும். மின்சார்த்தடை அல்லது மின்சாரத்துண்டிப்புக்கு வழியேற்பட்டிருக்காது. இத்தகைய மிக சாதாரண திட்டமிடல்கள் கூட அரசாங்கத்திடம் இல்லை.

கேள்வி: அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கும் நிலையில் அதன் சாத்தியப்பாடுகள் குறித்து கூறமுடியுமா?

பதில்: தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அது வெற்றியளிக்குமானால் அந்த கடன் தொகை நம்நாட்டை வந்தடைவதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஏனெனில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையானது உடனடியாக நாட்டுக்குள் வந்து விடுவதில்லை. சர்வதேச நாணய நிதியம் நம் நாட்டுக்கு கடனை வழங்குவதென்றால் அடிப்படையில் அதாவது அதன் ஒழுங்கு விதிகளின்படியே அது நடைமுறைப்படுத்தப்படும். அதன் ஒழுங்கில் திட்டம் நிறைவேறுவதற்கு நிச்சயமாக சிலகாலம் தாமதிக்க வாய்ப்புண்டு.

இத்தகைய காத்திருப்புக் காலத்தில் எவ்வாறு நாட்டை கொண்டு நடத்துவது என்பது நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு இருக்கும் மிகப்பெரும் சவாலாகும். இத்தகைய சவால்களை முறியடிக்க வேண்டுமானால் ஜனாதிபதியானவர் சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டாக வேண்டும். 

அதாவது, இலங்கைக்கு இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் உதவி வருகின்ற நிலையில், நட்புறவு பாராட்டும் ஏனைய நாடுகளுடன் ஜனாதிபதி நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி அந்நாடுகளிடமிருந்து உதவிகளையும் நிவாரணங்களையும் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.  அவர் அவ்வாறு முயற்சிகளை மேற்கொள்வாரானால் இடைப்பட்ட காலப்பகுதியை சமாளிக்கக் கூடியதாக இருக்கும்.

இல்லையேல் நாட்டு மக்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலைமை இரட்டிப்பாவதற்கும் அது வாய்ப்பாகி விடும். ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானும் அதில் இணைந்திருந்தார்.

இதன்போது ஜனாதிபதியிடம் நான் கூறியது யாதெனில், நம் நாட்டின் சமகால பொருளாதார வீழ்ச்சியை கட்டியெழுப்புவதற்கு இங்குள்ள பொருளாதார நிபுணர்களின் முன்னெடுப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது.

கிரீஸ் மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து எழுச்சி கண்டிருக்கின்றன. இவ்வாறு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து எழுச்சிகண்ட நாடுகளின் பொருளாதார வல்லுநர்களை நம்நாட்டவர்களுடன் தொடர்புபடுத்தி கலந்தாய்வுகளை மேற்கொண்டு அந்நாடுகளின் நிபுணத்துவ முறைமைகளையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் நம்  நாட்டிலும் செயற்படுத்துவதன் மூலம் நம்நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார வீழ்ச்சி எனும் சவாலை வெற்றிகொள்ள வாய்ப்பிருக்கும் என்றும் இல்லையேல் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நேரடியாகவே கூறியிருந்தேன்.

உதவிகோரும் விவகாரத்தில் இங்குள்ள தூதரகங்களோடு வரையறுத்து நிற்பதை விடுத்து, ஜனாதிபதி நேரடியாக களத்தில் இறங்கி நட்பு நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவர் அவ்வாறு செய்வாரயோனால் அந்நாடுகள் நிச்சயமாக உதவும் வாய்ப்புள்ளது.

சவால்களை வெற்றிகொள்வதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர வலைத்தங்களையும் சமூக ஊடகங்களையும் முடக்குவதால் நாட்டு மக்களின் பசியும் பட்டினியும் மாறிவிடப் போவதில்லை. ஆகவே ஆக்கபூர்வ தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றோம்.

எந்த ஒரு இயற்கை வளமுமே இல்லாத டுபாய் இன்று நம்நாட்டவருக்கும் அந்நிய தேசத்தவருக்கும் தொழில் வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறது. ஆனால் இன்னோரன்ன வளங்களை கொண்டிருக்கும் நம் நாட்டில் இவ்வாறு பொருளாதார சவால்கள் எதிர் கொள்ளப்பட்டிருக்கிறதென்றால் இலங்கை அரசாங்கத்தின் கட்டமைப்பு முழுமையாக தோல்வியடைந்திருக்கிறது என்பது மறுக்கப்படாத உண்மையாகும். காலத்துக்கு ஏற்ற வகையில் நம்நாட்டு இயற்கை வளங்களை பயன்படுத்துவதற்கும் அதன் மூலமான வருமானங்களை ஈட்டுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கேள்வி: இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைத்துவம் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்துக்கு சென்றிருக்கிறது என்று உணர்கிறீர்களா?

பதில்: இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனும்போது அது நுவரெலியா மாவட்டத்தை மாத்திரமே பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு மாவட்ட கட்சி அல்ல. அது இந்நாட்டின் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்ற  மாபெரும் ஸ்தாபனமாகும்.

காலி முதல் அனுராதபுரத்தைத் தொட்டு வவுனியா வரையிலும் மட்டக்களப்பு முதல் கொழும்பு வரையிலுமாக வியாபித்திருக்கிறது.  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபையில் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இப்படியிருக்கும்போது ஒரு மாவட்டத்துக்குள் வரையறுக்காது  நல்லதொரு தலைமைத்துவத்தை வழங்குவதற்கான நபராக தேசிய சபை என்னை அடையாளப்படுத்தியிருக்கிறது. ஆகவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனும் போது தலைமை என்கிற எனது தனிக்குரலாக அல்லாது ஒவ்வொரு அங்கத்தினரதும் குரலாக செயற்படுவேன் என்பதை உறுதிபட கூறி வைக்க விரும்புகிறேன்.

கேள்வி: அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியம் மற்றும் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஆளுமை ஆகியவற்றுக்கு மத்தியில் தலைமை என்ற புதிய பயணத்தில் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் பற்றி?

பதில்: அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் அரசியல் நடவடிக்கைகளின்போது நான் ஒரு பார்வையாளனாகவே இருந்திருக்கிறேன். அவருக்குப் பின்னர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நடவடிக்கைகளின் போதும் அவரால் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களின் போதும் அவரோடு இணைந்து செயலாற்றியிருக்கிறேன். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் என இருவரது தீர்மானங்களையும் அனுமானித்து செயற்படக்கூடியவனாகவும் இருந்து வந்துள்ளேன். இவ்வாறான கொள்கை ரீதியிலான வழிகாட்டல்களுடன் முன்னோக்கி பயணிக்கும்போது எத்தகைய சவால்களையும் வெற்றிகொள்ள முடியும் என்று திடமாக நம்புகிறேன்.

கேள்வி: அரசாங்கம் இக்கட்டான காலகட்டத்தில் இருக்கும்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறியது சரியான தீர்மானமா-?

பதில்: மலையக மக்களின் நலன்புரி விவகாரங்கள், பொருளாதார மீட்சி உள்ளிட்ட விடயங்கள் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் கோரிக்கைகள் அரசாங்கத்தினால் உள்வாங்கப்படவில்லை.

சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் எம்மோடு கலந்துபேசி திடமான முடிவுகள் மேற்கொள்ளப்படவும் இல்லை. இதற்கு சிறந்ததொரு உதாரணத்தைக் கூறுவதானால் தேயிலை உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட இரசாயன உரம் தடை செய்யப்பட்ட விவகாரத்தை கூறமுடியும். இரசாயன உரம் தடை குறித்து பலமுறை எடுத்துக்கூறியும் உரியவாறான பதில்களை வழங்குவதற்கு ஜனாதிபதி தவறிவிட்டார். 

இது தொடர்பில் நானும் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும் நிதிச் செயலாளர் ராமேஸ்வரம் இணைந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து முறையிட்டபோது அவர் அது தொடர்பில் ஜனாதிபதியிடம் பேசி கட்டாயத்தின் பேரில் தோட்டங்களுக்கு இரசாயன உரத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.  இவ்வாறு மலையகம் சார்ந்த ஒவ்வொரு விடயத்திலும் அழுத்தம் பிரயோகித்து தேவைகளை அடைந்துகொள்ள வேண்டும் என்ற நிலை காணப்படுமானால் நாம் அரசாங்கத்தில் இணைந்திருக்க வேண்டிய தேவை கிடையாது.

மாறாக பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருந்தவாறே  அழுத்தங்களைப் பிரயோகித்து தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இவ்வாறான காரணிகளை முன்னிலைப்படுத்தியே நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறினோம் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. மாறாக அமைச்சரவை அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாக கூறுவது அரசியல் ரீதியிலான காழ்ப்புணர்ச்சிக் கூற்றாகும். இது மாற்றுத்தரப்பினரது இயலாமையின் வெளிப்பாடு என்றுதான் கூறவேண்டும்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பது தொடர்பில் நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. மாற்றுத்தரப் பினருக்கு நேரம் இருந்தால் அவர்கள் நாடகங்களை நடிக்க முடியும். ஆனால் எமக்கு அவ்வாறு நேரம் கிடையாது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை பொருத்தவரையில் பொருளாதாரக் கஷ்டத்தில் துவண்டு கிடக்கும் எமது மக்களை எவ்வாறு அதிலிருந்து மீட்டெடுப்பது என்பது குறித்து சிந்தித்து அதில் கவனம் செலுத்தியிருக்கிறோம். ஆதலால் மாற்றுத்தரப்பினர் கூறுவது போன்று நாடகங்களில் நடித்துக்கொண்டிருப்பதற்கு எமக்கு நேரம் கிடையாது.

கேள்வி: இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?

பதில்: நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து விடுபட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். அதற்கென முன்னெடுக்கும் அரச வேலைத் திட்டங்கள் சாத்தியமானதாக இருக்க வேண்டும். அவ்வாறிருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் சிறந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஆராய்ந்து அதன் முன்மொழிவுகளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்  பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் ராமேஸ்வரன் ஆகியோர் உள்ளிட்ட கட்சியின் உயர்சபையிடம்  சமர்ப்பித்து அது சகலராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இடைக்கால அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பது குறித்து பரிசீலிக்க முடியும்.

கேள்வி: "கோ ஹோம் கோட்டா" கோஷத்தின் பின்னணி பற்றி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறுவதென்ன?

"கோ ஹோம் கோட்டா" என்ற சொற்பதத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டமானது ஜனநாயக ரீதியிலான உரிமையோடு தொடர்புபட்டிருக்கிறது. ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் இடையூறாக இருந்தது கிடையாது. இவ்விடயத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பக்கமே நிற்கிறது. வேலை இல்லாது எவரும்  பதாகைகளை ஏந்திக்கொண்டு வீதியில் வந்து நிற்கவில்லை. ஜனாதிபதி இந்நாட்டை வழிநடத்திச் செல்வதில் தவறு இருப்பதாக மக்கள் உணர்ந்திருக்கின்றனர். அதேநேரம் இந்நாடு எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. மாறாக இது 22 மில்லியன் மக்களுக்கு சொந்தமான நாடாகும் ஆகவே நாட்டில் இடம்பெறுகின்ற தவறுகளை சுட்டிக்காட்டும் போது மக்களது உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

கேள்வி: இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைமை கூறும் செய்தி என்ன?

பதில்: நாட்டின் இன்றைய பொருளாதாரமானது மிக மோசமான நெருக்கடிக்குள் விழுந்து கிடக்கிறது. இது மலையக மக்களை வெகுவாக பாதித்திருக்கிறது. மலையக மக்களுக்கு வேறு தொழில் கிடையாது. அவ்வாறான சூழலுக்குள்ளேயே அவர்கள் இருக்கின்றனர். மின்சாரம் இல்லாமை என்ற காரணி தேயிலை உற்பத்தியில் தாக்கத்தை செலுத்தியிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடானது தேயிலை விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக் கிறது.

இத்தகைய சூழலுக்குள்  எமது மக்கள் சிக்கித்தவிப்பது எமக்கு வேதனையை அளிக்கிறது. இதிலிருந்து மலையகத்தையும் மலையக மக்களையும் மீட்பதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் கையாள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தன்னை அர்ப்பணித்திருக்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13