ஜனாதிபதி பதவி விலகினால் மட்டுமே தற்காலிக தீர்வு குறித்து சிந்திக்கலாம் - விஜித்த ஹேரத் செவ்வி

Published By: Siddeque Kariyapper

11 Apr, 2022 | 01:23 PM
image

நேர்காணல் -  ரொபட் அன்டனி 

மக்கள் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நிச்சயமாக பதவி விலகி செல்ல வேண்டும்.  அதன் பின்னரே தற்காலிக தீர்வு குறித்து சிந்திக்க வேண்டும். ஜனாதிபதி பதவி விலகி சென்றதுடன் பாராளுமன்றத்துக்கு உள்ளே ஒருவரை  ஜனாதிபதியாக தெரிவு செய்து நாட்டைக்கொண்டு நடத்த முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்  தெரிவித்தார்.  

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை தொடர்பாக வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

செவ்வியின் விபரம் வருமாறு

கேள்வி: இதற்கு முன்னர் இது போன்றதொரு ஆர்ப்பாட்டங்கள் இந்த நாட்டில் இடம்பெற்றுள்ளதா? 

 பதில்: ஆம்.  இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளன.  மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் மக்கள் இணைந்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  ஆனால் இம்முறை மக்களின் ஆர்ப்பாட்டம், எழுச்சி வித்தியாசமானதாக இருக்கிறது.  மக்கள் கடும் விரக்தியுடன் போராடுகின்றனர்.  ஊழல் மோசடிகளுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாக போராடி வந்திருக்கிறது.  அந்த வகையில் கடந்த காலங்களில் பாராளுமன்றம் மற்றும்  அதற்கு வெளியே மக்கள் விடுதலை முன்னணி நடத்திய போராட்டங்களில் தற்போது மக்கள் இணைந்திருக்கின்றனர்.   இது இலங்கையின் வரலாற்றில் புதுவிதமான ஒரு மக்கள் எதிர்ப்பு போராட்டமாக அமைந்திருக்கிறது. 

கேள்வி: இதற்கு முன்னர்  இது போன்று மக்களாகவே முன்வந்து போராடிய நிலைமைகள் இருந்தனவா?

 பதில் :அவ்வாறான நிலைமைகள் காணப்பட்டன. 1956 ஆம் ஆண்டு ஹர்த்தாலை  இங்கு நாம் குறிப்பிட முடியும்.  அப்போது மக்கள் தானாக எழுந்து வந்து  ஆர்ப்பாட்டங்களை செய்தனர்.  ஆனால் இப்போது போன்று அன்று மக்களுக்கு தொழில் நுட்ப வசதி இருக்கவில்லை.  இன்று இணையத்தின் ஊடாக சமூக வலைத்தளம் ஊடாக  மக்கள் ஒருங்கிணையும் சந்தர்ப்பங்கள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் இதற்கு முன்னர் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை என்று கூற முடியாது.

கேள்வி: இந்தப் போராட்டத்தின் உடனடி ஆரம்பம் மிரிஹானை ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆரம்பமானது.  அதில் இருந்து தற்போது வரை இதில் மக்கள் விடுதலை முன்னணியின்  பங்களிப்பு என்ன?

 பதில்:  தற்போது நாட்டில் காணப்படுகின்ற எரிபொருள் பிரச்சினை.   எரிவாயு பிரச்சினை. பால்மா மின்வெட்டு போன்ற அனைத்து நெருக்கடிகளும்  எதிர்க்கட்சிகள் மற்றும்   ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கும் உள்ளன.  அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தி பொது ஜன பெரமுன  முஸ்லிம் காங்கிரஸ் என சகல கட்சிகளின்  ஆதரவாளர்களுக்கும் அந்த பிரச்சனைகள் உள்ளன.  ஏன் ஜனாதிபதிக்கு வாக்களித்த 65 லட்சம் மக்களுக்கும் அந்த பிரச்சினை உள்ளது.  எனவே இந்த மக்கள் எழுச்சிகளில் சகல கட்சிகளினதும் ஆதரவாளர்கள் பங்கேற்கின்றனர்.  அதுவே எமது  பங்களிப்பாக  இருக்கிறது.  ஆனால் அரசாங்கம் இந்த இடத்தில் ஒரு முயற்சியை மேற்கொள்கிறது.  அதாவது மக்களின் போராட்டங்களில் தனது அடியாட்களை அனுப்பி குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நாங்கள் காண்கிறோம்.  பாராளுமன்ற சுற்றுவட்ட போராட்டத்திலும் குருநாகலில் இருந்து அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.  எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனமாகவும் விழிப்பாகவும் இந்த போராட்டங்களை முன்னெடுத்து செல்லவேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். 

கேள்வி: தற்போது என்ன நடக்க வேண்டும் ? மக்கள் விடுதலை முன்ன நிலைப்பாடு என்ன ?

பதில்: முதலாவது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.  அந்த பொருளாதார நெருக்கடி  தற்போது அரசியல் நெருக்கடியாக மாறியிருக்கிறது.  தற்போது பாரிய அரசியல் நெருக்கடி காணப்படுகிறது.  எனவே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அரசியல் தலைமைத்துவம் அவசியமாகும்.  அதனால் மக்கள் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நிச்சயமாக பதவி விலகி செல்ல வேண்டும்.  அதன் பின்னரே தற்காலிக தீர்வு குறித்து சிந்திக்க வேண்டும். 

கேள்வி; ஆனால் தற்போதைய அரசியலமைப்பின்டி இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியுமா? 

 பதில் :இதற்கு பல மாற்று வழிகள் காணப்படுகின்றன.  முதலாவது தற்போதைய  ஜனாதிபதி பதவி விலகு சென்றதுடன் பாராளுமன்றத்துக்கு உள்ளே ஒருவரை  ஜனாதிபதியாக தெரிவு செய்து நாட்டைக்கொண்டு நடத்த முடியும்.  அல்லது அரசியல் அமைப்புக்கு ஒரு புதிய பிரிவை உட்படுத்தி ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டரை வருடங்களாக குறைக்க முடியும்.    ஜனாதிபதி தனது பதவியை முடித்துக்கொண்டு வெளியேறினால்  புதிய ஜனாதிபதியை தேர்தலில் தெரிவு செய்யலாம்.  அத்துடன்  பாராளுமன்ற தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.  இவ்வாறு பல சந்தர்ப்பங்கள், மாற்று வழிகள் காணப்படுகின்றன. 

கேள்வி;  ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றவேண்டும் என்று கூறப்படுகிறதே?

 பதில்: அதுவும் செய்ய வேண்டிய விடயமாகத்தான் இருக்கின்றது. அதனை  செய்யவேண்டும்.  ஆனால்  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்த யோசனையை கொண்டு வந்தால் அதனை செய்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும்.  அது நீண்டகாலம் எடுக்கின்ற ஒரு செயற்பாடாக அமையும்.  உடனடியாக அதன் ஊடாக  அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.  அதற்கு 6 மாத காலம் செல்லும் .  உடனடி தீர்வாக அமையாது. அதனை  அரசாங்கம் கொண்டு வந்தால் முடியும்.

கேள்வி: தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருக்கத்தக்கதாக எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு அரசாங்கத்தை அமைத்து நாட்டை கொண்டு நடத்த முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றதே?  

பதில்: அது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது.  அது சகலரும் இணைகின்ற ஒரு கூட்டு குழப்பமாகவே அமைந்துவிடும். அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து அரசாங்கம் அமைத்தாலும் இதே நிலைதான் ஏற்படும்.  எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கம் அமைத்தாலும் இந்த நிலையே ஏற்படும். மேலும்  அவ்வாறு எதிர்க்கட்சி அரசாங்கம் அமைப்பதற்கு எதிர்க்கட்சியிடம்  பெரும்பான்மை இல்லை.  பெரும்பான்மை அரசாங்கத்திடமே  இருக்கின்றது.  42 பேர் சுயாதீனமாக செயற்பட்டாலும் பெரும்பான்மை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.  அதனை மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

 கேள்வி: அப்படியானால் மக்கள் விடுதலை முன்னணியின் பரிந்துரை என்ன ?

பதில்; எதனை செய்வதற்கும் தற்போதைய ஜனாதிபதி பதவி விலகிச் செல்ல வேண்டும்.  அதன் பின்னர்  புதிய தலைவர் மற்றும் புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.  

கேள்வி: தற்போதைய சூழலில் தேர்தலுக்கு செல்ல முடியுமா?

பதில்; அப்படி இல்லாவிட்டால் என்ன செய்வது ? போராட்டங்களை நடத்தி நெருக்கடியை மேலும் அதிகரிப்பதா?  தேர்தலுக்கு செல்ல வேண்டுமென்றால் செல்லத்தான் வேண்டும். எனினும்   பல மாற்று வழிகளும் உள்ளன.  

கேள்வி: தற்போது அரசாங்கம் என்ன செய்யப் போகிறதாக  உங்களுக்கு தெரிகிறது?

பதில்;  அரசாங்கம் பதவி விலக மாட்டோம் என்று கூறுகிறது.  காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.  அதனால் பிரச்சினை மேலும் உக்கிரமடையும்.  

கேள்வி:  இவ்வாறு பதவி விலகுவது தவறான முன்னுதாரணமாக அமைந்து  விடும் என்று கூறப்படுகின்றதே ? 

பதில்: மக்கள் அப்படி நினைத்த நேரமெல்லாம் வீதிக்கு இறங்கமாட்டார்கள்.  அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இழக்கப்படும் பட்சத்தில் மட்டுமே அந்த நிலைமை ஏற்படும்.  மக்களின் பக்கம் நின்று ஆட்சி செய்தால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினால் மக்கள் வீதிகளில் இறங்க மாட்டார்கள்.   

கேள்வி: ஜே.வி.பி.க்குமக்களிடம் ஆதரவு அதிகரித்திருக்கிறதா?

 பதில்: நிச்சயமாக எமக்கான ஆதரவாக அதிகரித்திருக்கிறது.  அடுத்த அரசாங்கத்தை ஜே.வி.பி. அமைக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.  மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் நாம் செய்து காட்டுவோம்.  மக்கள் அதனை தற்போது தீர்மானித்து விட்டனர். 

 கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் சஜித்  தலைமையில் ஒரு அரசாங்கம் அமைந்தால் என்ன நடக்கும்? 

பதில்: தற்போதைய நிலைமையை விட மோசமான நிலைமை  நாட்டில் ஏற்படும். 

 கேள்வி: உங்கள் கட்சியில் இருந்து 2007 ஆம் ஆண்டு விலகி தற்போது அரசாங்கத்திலிருந்தும் விலகி ஒரு அரசியல் கதாபாத்திரமாக மாறி இருக்கிற விமல் வீரவன்ச தொடர்பில் உங்கள் மதிப்பீடு என்ன?

பதில்: அவர்  அரசியல் அனாதையாக இருக்கிறார்.  செல்வதற்கு இடம் இல்லாமல் இருக்கின்றார்.   அவர்களே இந்த பிரச்சினைக்கு பொறுப்புக்கூற வேண்டும்.  அவர்களே தற்போதைய  ஜனாதிபதியை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி கொண்டு வந்தனர்.  நாட்டை அழிப்பதற்கு பங்களிப்பு செய்தனர்.  

கேள்வி; உங்கள் கட்சியில் இருந்து விமல் வீரவன்ச வெறி வெளியேறியமை   உங்கள் கட்சிக்கு மிகப்பெரிய ஒரு இழப்பாக அமைந்ததா? 

பதில்: இல்லை.    அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.  அதனால் நன்மை தான் கிடைத்தது.  எமக்கு கொள்கையை முக்கியமாகும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13