மாறாமல் வருமா மாற்றம்?

11 Apr, 2022 | 10:44 AM
image

-என்.கண்ணன்

“கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், பிரதமர் பதவியை கைநழுவ விடுவதற்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் தயாராக இல்லை”

“குடும்ப ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தும் வகையில், அரசாங்க கட்டமைப்பை உருவாக்குவதிலேயே தற்போதைய நெருக்கடியான நிலையிலும், ஆளும்கட்சி முற்படுகிறது”

Image

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வி பலரிடம் உள்ளது.

அரச எதிர்ப்பு மனோநிலை மக்களிடம் காணப்பட்டாலும், அதனை ஒருங்கிணைப்பதில், எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருமித்த நிலைப்பாடு இல்லை.

Image

இதனால், போராட்டங்களில் தொய்வு நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த தொய்வு நிலையை, அரச எதிர்ப்பு மனோநிலையில் ஏற்பட்ட மாற்றமாக கருத முடியாது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள், நீண்டகாலத்தை, நீண்ட நேரத்தை போராட்டங்களுக்காக வீதியில் செலவிட முடியாத நிலையில் உள்ளனர். இது முக்கியமான பிரச்சினை.

அடுத்து, இந்தப் போராட்டங்களை வீரியமிழக்கச் செய்யவும், இதன் நோக்கத்தைச் சிதைக்கவும், அரச தரப்பு திட்டமிட்டுச் செயற்படுகிறது.

அதன் முதல்கட்ட நடவடிக்கை தான், அமைச்சர்கள் பதவி விலகியமை ஆகும். அமைச்சர்கள் பதவி விலகி, புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு வழிவிட்டுள்ளதான தோற்றப்பாடு உருவாக்கப்பட்டது.

Image

தேசிய நெருக்கடியை தீர்க்க எதிர்க்கட்சிகளை அமைச்சரவையில் இடம்பெற முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். ஆனால் அதனை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

பிரதமர் பதவி விலகுகிறார், அமைச்சர்கள் பதவி, விலகவுள்ளனர் என்ற ஊகங்கள், வதந்திகள் பரவவிடப்பட்டன.

ஆனால் கடைசியில் பிரதமர் பதவி விலகமாட்டார் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே எந்த அரசாங்கத்திலும் பிரதமராக இருப்பார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்குப் பின்னரும், எதிர்க்கட்சிகள் இடைக்கால அரசில் பங்கேற்க எவ்வாறு இணங்கும்? ஆனால், இந்த அழைப்பை வைத்துக் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மனங்களை அரசாங்கம் ஆட்டம் காணச் செய்ய முயன்றது.

அதேவேளை, அமைச்சர்களை பதவி விலக கோரியோ இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்காகவோ மக்கள் போராட்டம் நடத்தவில்லை. ஜனாதிபதியை, ராஜபக்ஷவினரை வீட்டுக்கு அனுப்பவே போராட்டம் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

Image

‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்று நாடெங்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார் என்று, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ திட்டவட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டங்களின் மூலமாக, ராஜபக்ஷ குடும்பத்தினரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவர்கள் தமது இருப்பை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள்.

அரசாங்கத் தரப்புக்குள் உள்ள, பல தரப்புகள் இதற்காக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். ராஜபக்ஷவினரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தை எதிர்ப்பது போன்ற தோற்றப்பாட்டையும் ஏற்படுத்துகின்றனர்.

ஜனாதிபதியோ பிரதமரோ பதவி விலகப் போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருக்கின்றன.

Image

அமைச்சர்கள் பதவி விலகி, இடைக்கால அரசை அமைக்க வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்த சில மணி நேரங்களில், நான்கு அமைச்சர்களை நியமித்தார் ஜனாதிபதி.

நிதியமைச்சராக அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சராக, ஜிஎல்.பீரிஸ், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்த்தன ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இடைக்கால அரசை அமைக்க வருமாறு அழைத்து விட்டு, அதுபற்றி எதிர்க்கட்சிகளுடன் பேச்சுக் கூட நடத்தாமல், பிரதமரும் பதவி விலகாமல், தமது தரப்பை சேர்ந்தவர்களை மீண்டும் முக்கிய அமைச்சுப் பதவிகளில் நியமித்து குழப்பங்களை ஏற்படுத்தினார் ஜனாதிபதி.

இந்தக் குழப்பங்களின் மூலம் ஒரு விடயம் தெளிவாகியது. பிரதான அமைச்சுக்களை விட்டுக் கொடுக்க, அவர்கள் தயாராக இல்லை என்பதே அது.

அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அதேவேளை இடைக்கால அரசு ஒன்றை அமைக்கும் போது அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்து எதிர்க்கட்சிகளுடன் ஆராய்ந்திருக்க வேண்டும்.

ஆனால், தங்களின் விசுவாசிகளை முக்கிய அமைச்சுப் பதவிகளில் அமர்த்தியதன் மூலம், ஜனாதிபதியும் பிரதமரும், குடும்ப அதிகாரத்தை நிலை நிறுத்துவதில் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

ஆயினும், 24 மணி நேரத்துக்குள்ளாகவே நிதியமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி விலகி, குழப்பங்களை இன்னும் அதிகப்படுத்தினார்.

Image

நிதியமைச்சராக இருந்த பஷில் ராஜபக்ஷவின் கல்வித் தகைமையை பரவலாக கேள்வி எழுப்பியிருந்த நிலையில், சட்டத்தரணியான அலி சப்ரியை நிதியமைச்சராக நியமித்தமை இன்னும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

குடும்ப ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தும் வகையில், அரசாங்க கட்டமைப்பை உருவாக்குவதிலேயே தற்போதைய நெருக்கடியான நிலையிலும், ஆளும்கட்சி முற்படுகிறது.

இவ்வாறான நிலையில் இடைக்கால அரசாங்கத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க மறுத்தமை ஆச்சரியமில்லை. 

Image

‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், பிரதமர் பதவியை கைநழுவ விடுவதற்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் தயாராக இல்லை. தற்போதைய நிலையில், ஒட்டுமொத்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரான மனோநிலை இருந்தாலும், அவர்களுக்கு விசுவாசமான கணிசமான தரப்பினரும் இருக்கின்றனர்.

அவர்கள், ஜனாதிபதியைக் காப்பாற்றவும், பிரதமரைக் காப்பாற்றவும் தனித்தனியாக வேலை செய்கின்றனர். ஜனாதிபதியே நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார் என்ற கோபம் பரவலாக காணப்படுகிறது.

மோசமான நிலை ஒன்று ஏற்படுமானால், ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டிய நிலை வராது என்று உறுதியாக நம்ப முடியாதுள்ளது. அவ்வாறான நிலை ஒன்று ஏற்பட்டால், உடனடியாக பிரதமர் தான் ஜனாதிபதியாகப் பதவியேற்பார்.

அதன் பின்னர் அவர் அல்லது பாராளுமன்றத்தில் உறுப்பினராக உள்ள ஒருவர் இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்கள். ஜனாதிபதி பதவி விலக வேண்டியதொரு நிலை ஏற்பட்டால், 1993இல், டி.பி.விஜேதுங்கவுக்கு கிடைத்தது போன்ற அதிஷ்டம், தமது கட்சியில் வேறெவருக்கும் கிடைத்து விடக்கூடாது என்பதில் ராஜபக்ஷவினர் உறுதியாக உள்ளனர்.

Image

ஜனாதிபதி பதவி விலகும் நிலை ஏற்பட்டாலும், பிரதமர் பதவியில் இருப்பது முக்கியம். அப்படியானால் தான், ஜனாதிபதி பதவியை ராஜபக்ஷ குடும்பத்துக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

அதிகாரம் வேறொருவரின் கைக்குள் சென்றால், எல்லாமே முடிந்து போய் விடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

2015இல் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஒரு தடவை அதனை அவர்கள் அனுபவித்திருந்தார்கள். தற்போது மீண்டும் ராஜபக்ஷ எதிர்ப்பு அலை எவ்வாறு பரவுகிறது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

இன்றைக்கு தலையில் தூக்கி வைத்திருப்பவர்கள், நாளை தூக்கியெறிந்து விட்டுப் போவார்கள் என்பதும், அரசியலில் இதெல்லாம் வழக்கம் என்பதும் ராஜபக்ஷவினருக்குத் தெரியாததல்ல.

அதனால் தான் ஜனாதிபதி பதவி மட்டுமல்ல, பிரதமர் பதவியும் முக்கியமானது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

ஜனாதிபதியும் மாறாமல், பிரதமரும் மாறாமல், எவ்வாறு அரசாங்கத்தில் மாற்றம் நிகழும்? தற்போதைய நிலையில் முழுமையான மாற்றங்கள் தான் முக்கியம்.

Image

பிரதேச சபை உறுப்பினராக கூட பதவியில் இல்லாதவரை ஜனாதிபதியாக்குவதா என்று எதிர்ப்புத் தெரிவித்து, வெளியேறியவர் குமார வெல்கம.

அவர் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் பேசிய போது, தாம் மூன்று வருடங்களுக்கு முன்னர், எதனைக் கூறினேனோ அதுவே நடந்திருக்கிறது. இந்த தவறுகளுக்கு பிரதமர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தற்போதைய நிலைமைக்கு பிரதமரும், ஜனாதிபதியும் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலையில், அவர்கள் இருவருமே மாறாமல், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

Image

மாற்றங்கள் ஏதும் நிகழாமல், தற்போதைய பிரச்சினைகள் எதுவும் தீரப் போவதில்லை. தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் வீரியம், குறையுமானால், அது மாற்றங்களுக்கான வாய்ப்புகளை அருகச் செய்யும். அது மீண்டும் புதிய போத்தலில் பழைய கள் என்ற நிலையையே ஏற்படுத்தும். அந்த நிலை, பிரச்சினைகளுக்கு தீர்வைத் தராது. நாட்டை மேலும் படுகுழிக்குள் தான் தள்ளிவிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41