ஒதுங்கி நிற்கும் தமிழர்கள்

10 Apr, 2022 | 09:34 AM
image

-கபில்

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. கோட்டா வீட்டுக்குப் போ என்றும், அரசாங்கத்தைப் பதவி விலக கோரியும், பரவலான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனாலும், வடக்கு- கிழக்கு பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிறது. வடக்கு, கிழக்கில் ஆங்காங்கே சில போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு கொழும்பில் இருந்து சென்று ஹிருணிகா தலைமை தாங்கியிருந்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இருந்தும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்தும் நடத்தப்பட்ட பேரணிகளில் பெரும்பாலும் சிங்கள மாணவர்களே பங்கேற்றிருந்தனர். அதற்கான ஒழுங்கமைப்புகளைச் செய்ததும் அவர்கள் தான். வவுனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களும் அவ்வாறானவையே.

மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஏற்பாடு செய்த போராட்டம் தவிர, தமிழ் மக்களின் ஏற்பாட்டில் அரசாங்கத்தைப் பதவி விலக கோரியோ, கோட்டா வீட்டுக்குப் போ என்றோ போராட்டங்கள் நடத்தப்படவில்லை.

தெற்கில் நடந்து கொண்டிருக்கின்ற ஆர்ப்பாட்டங்களில் தமிழ் மக்கள் ஆர்வத்தைக் காட்டவோ, பங்கேற்கவோ இல்லை. ஆனால் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். ஆர்ப்பாட்டங்களில் தமிழ் மக்கள் அக்கறை செலுத்தவில்லை என்பதால், அவர்கள் அரசாங்கத்தை எதிர்க்கவில்லை என்றில்லை.

2019 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழ்மக்கள் ஒன்றுபட்டு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். அப்போதே தமிழ் மக்கள் ஜனநாயக முறைப்படி, அவரை நிராகரித்து விட்டார்கள்.

இப்போது, அவரை வீட்டுக்குப் போ என்று சிங்கள மக்கள் போராட்டம் நடத்துகின்ற போது பெரும்பாலான தமிழ் மக்கள் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வியும், ஆச்சரியமும் பலருக்கு இருக்கிறது. குறிப்பாக சிங்கள மக்கள், அரசியல்வாதிகளுக்கு இது குழப்பமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தெற்கில் தற்போது நடந்து கொண்டிருக்கின்ற போராட்டங்கள், அரசாங்கத்துக்கு எதிரானது, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. ஆனால், தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை நிராகரித்தது அதற்காக அல்ல. அவர் ஆட்சிக்கு வரக் கூடாது என்று அவர்கள் கருதியதற்கும் அது காரணமல்ல. போர்க்காலத்தில் நடந்த மீறல்களுக்கு அவர் பொறுப்பாக இருந்தவர். அந்தக் காலகட்டத்தில் இடம்பெற்ற அநீதிகளுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவர்.

அவ்வாறான ஒருவர் ஆட்சிக்கு வரக் கூடாது, அவர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றே, தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். இப்போதும் எதிர்பார்க்கின்றனர். தமிழ் மக்கள் 2019இல் இதனைச் சிந்தித்து வாக்களித்த போது, தெற்கிலுள்ள சிங்கள மக்கள் எதிர்மறையாக சிந்தித்தனர். எதிர்மறையாகவே வாக்களித்தனர்.

அவர்கள், கோட்டாபய வேண்டும் என்றனர். அவரே மீட்பர் என்றனர். அவரால் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும் என்று வாக்களித்தனர். அவருக்காக, 69 இலட்சம் சிங்கள மக்கள் திரண்டு வாக்களித்தனர். 69 இலட்சம் வாக்குகளை வைத்துக் கொண்டு, தாம் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்று பெருமையாக கூறிக் கொண்டார் கோட்டாபய ராஜபக்ஷ.

69 இலட்சம் மக்களின் ஆதரவு இருந்தது உண்மை. ஆனால் இன்று அது இல்லை என்பதும் உண்மை. 2019இல் 69 இலட்சம் மக்கள் ஆதரித்திருந்தாலும், நாட்டின் முழு வாக்காளர்களில், அது 43 சதவீதம் மட்டும் தான். ஏனென்றால் அப்போது 160 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

செல்லுபடியான வாக்குகளில், 52.25 வீதத்தை பெற்றதால் தான், அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாரே தவிர, நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்களின் ஆதரவை அவர் பெற்றிருக்கவில்லை.

அதைவிட, இப்போது இலங்கையின் மொத்த சனத்தொகை 224 இலட்சமாகும். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக, குழந்தைகளும் போராடுகிறார்கள். ஏனென்றால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்களின் கருத்துக்கும் மதிப்பளித்தால், 69 இலட்சம் வாக்காளர்களின் ஆதரவு என்பது, மூன்றில் ஒரு பங்கு தான் தேறும். இவை எல்லாவற்றுக்கும் அப்பால், சிங்கள மக்கள் இப்போது தான் முதல் முறையாக கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள். துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

அவர்களின் கோபத்திலும், கொந்தளிப்பிலும் நியாயம் உள்ளது. ஆனாலும், இதில் தமிழர்களும் பங்களிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

இது ஒட்டு மொத்த நாட்டுக்கும் வந்திருக்கும் பேரழிவு. இதன் விளைவுகளில் இருந்து தமிழர்களும் தப்பிக்க முடியாது.

ஆனாலும், இது தமிழர்களால் ஏற்படுத்தப்பட்ட தவறோ, தமிழர்களால் திருத்தப்பட வேண்டிய தவறோ அல்ல.

இந்த தவறுக்குக் காரணமானவர்கள் சிங்கள மக்கள் தான். அவர்கள் தான், கோட்டாபய ராஜபக்ஷவையும், அவரது அரசாங்கத்தையும் ஆதரித்தார்கள். பதவியில் அமர்த்தினார்கள். தமிழர்கள், முஸ்லிம்கள் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இனவாதத்தை கிளறி விட்டதும், அதற்கு மயங்கி வாக்களித்தவர்கள் செய்த தவறு தான் இது.

இந்த தவறை அவர்கள் தான் சரிப்படுத்த வேண்டும். அவர்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். யாரால் அரியணையில் ஏற்றப்பட்டார்களோ, அவர்களோ அவர்களை இறக்கி விடுவது தான் முறை.

எனவே, இந்தப் போராட்டங்களில் தமிழர்கள் பங்கேற்க வேண்டும் என்றோ அவர்களும் கிளர்ந்தெழ வேண்டும் என்றோ சிங்கள மக்கள் எதிர்பார்க்க கூடாது.

ஏனென்றால், தமிழர்களுக்கு எதிராக கொடூரமான சட்டங்களும், இராணுவ பலப் பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்ட போது, தமிழர்கள் அதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்த போது சிங்கள மக்கள் திரும்பியும் பார்க்கவில்லை.

ஏன் அப்படிச் செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்கவுமில்லை. தமிழர்கள் அழிக்கப்பட்ட போதும், அவர்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்ட போதும், அதன் மீது வெற்றி பெறப்பட்ட போதும், கூடிக் குதூகலித்துக் கொண்டாடியவர்கள் அவர்கள்.

தமிழர்களால் அதனை இலகுவாக மறந்து விட முடியாது. அதேவேளை, கோட்டா வீட்டுக்குப் போ என்று சொல்பவர்களிடம் எந்த தெளிவான திட்டமும் இல்லை. அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வரப் போகிறவர்கள், தமிழர்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியாது.

கொழும்பின் அரசியல் மாற்றங்களும், ஆட்சிமாற்றங்களும், தமிழர்களுக்கு தீர்வை வழங்கியதும் இல்லை. வழங்கப் போவதும் இல்லை.

இன்றைக்கு பெரும்நெ ருக்கடிகளைச் சந்திப்பதால் தான், சிங்கள மக்கள் கோட்டா வீட்டுக்குப் போ என்கிறார்கள். இந்த நெருக்கடிகள் வராமல் இருந்தால், அவர்கள் இன்னமும் தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டு தான் இருப்பார்கள்.

ஆனால் தமிழர்களின் நிலை அவ்வாறில்லை. அவர்கள் வயிற்றுக்காகப் போராடவில்லை. வாழ்வுக்காக போராடினார்கள். உரிமைகளுக்காக போராடினார்கள். இன்னமும் போராடுகிறார்கள்.

கொழும்பின் ஆட்சி மாற்றங்களின் ஊடாக தமிழர்களுக்கு விடிவு கிட்டும் என்றால், அது சந்திரிகாவின் ஆட்சியிலோ, மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலோ நடந்திருக்க வேண்டும்.

இன்றைய நிலையில், ஆட்சியை மாற்றுவதென்பது, தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்றதே. சிங்கள மக்களின் நிலையில் இருந்தும், தமிழ் மக்களின் நிலையில் இருந்தும் அது தான் பொருந்தும். ஏனென்றால், ராஜபக்ஷ குடும்பத்தை அகற்றி விட்டு அமைக்க கூடிய அரசாங்கத்தினால், கூட தற்போதைய பொருளாதார சிக்கல்களை தீர்க்க முடியாது.

அதுபோல, தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் அந்த ஆட்சி தீர்த்து வைக்கப் போவதில்லை. இந்த நிலையில், சிங்கள மக்களின் போராட்டங்களை ஓரமாக நின்று பார்ப்பதை விட தமிழர்களுக்கு வேறென்ன வழி இருக்கிறது?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22