மக்கள் போராட்டங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவையல்ல : வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் ஜீ.எல்.பீரிஸ் எடுத்துரைப்பு

Published By: Digital Desk 5

09 Apr, 2022 | 07:04 PM
image

(நா.தனுஜா)

பொதுமக்களால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் நேரடியாக அரசாங்கத்திற்கோ, தனியொரு அரசியல் கட்சிக்கோ, ஆளுங்கட்சிக்கோ எதிரானது அல்ல.

நாட்டில் நடைமுறையிலுள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பிற்கும் எதிராகவே அவர்கள் போராடுகின்றார்கள் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு பொருளாதார நெருக்கடிக்கு மாத்திரமன்றி, அரசியல் நெருக்கடிக்கும் முகங்கொடுத்திருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாட்டின் நிலைவரம் குறித்து அவர்களிடம் விளக்கினார்.

தற்போது நாட்டுமக்கள் முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான நெருக்கடிகள் மற்றும் மின்விநியோகத்தடை, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கான பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக அந்நெருக்கடிகள் மேலும் தீவிரமடைந்துள்ளமை குறித்து அரசாங்கம் அறிந்திருப்பதாக வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மின்விநியோகம் துண்டிக்கப்படுவதன் காரணமாக பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டிருக்கும் எதிர்மறையான விளைவுகள் மக்களின் துன்பத்தை மேலும் அதிகப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு மக்களால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் எதிர்ப்புப்போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அந்த ஆற்றமையின் விளைவு என்றும், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினால் அவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இராஜதந்திரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் பீரிஸ், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வோரில் 80 - 85 சதவீதமானோர் அடிப்படைவாதிகளோ அல்லது அரசியல் ரீதியில் வலுவூட்டப்பட்டவர்களோ இல்லை என்றும் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி இலங்கை அரசியலமைப்பின் 14 ஆவது சரத்தின் பிரகாரம் ஒன்றுகூடுதல் மற்றும் கருத்துவெளிப்பாட்டு;ச்சுதந்திரம் ஆகிய உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான பொதுமக்களின் உரிமை என்பது இலங்கையில் இயங்குநிலையில் ஜனநாயகம் உள்ளது என்பதற்கான ஓர் குறிகாட்டியாகும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் இல்லங்களுக்கு வெளியே இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்த ஜீ.எல்.பீரிஸ், அவற்றின் தீவிரத்தன்மை குறித்து அவதானம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றக்கட்டமைப்பிற்கு எதிரான கண்டனத்தையும் அதன்மீதான எதிர்ப்பையும் வெளிக்காட்டியதுடன், ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்துகின்றார்கள் என்று இராஜதந்திரிகளிடம் தெரிவித்ததுடன் வெளிநாடுகள் மற்றும் சர்வதேசக்கட்டமைப்புக்களின் உதவியுடன் இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் நேரடியாக அரசாங்கத்திற்கோ, தனியொரு அரசியல் கட்சிக்கோ, ஆளுங்கட்சிக்கோ எதிரானது அல்ல என்றும் நாட்டில் நடைமுறையிலுள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பிற்கும் எதிரானது என்றும் அவர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

'ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நடைமுறைச்சாத்தியமானவை அல்ல என்பதுடன் அவர்கள் அரசியலமைப்பிற்கு அமைவாக வழங்கப்படக்கூடிய தீர்வுகளில் ஒன்றைக் கோருவதாகத் தெரியவில்லை.

சமையல் எரிவாயு, எரிபொருள், அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் மின்விநியோகத்துண்டிப்பு ஆகியவற்றின்மீது காணப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் அவதானம் தற்போது வேறுபக்கம் திரும்பியிருக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் தொடர்பில் உரியவாறான கணக்காய்வு மேற்கொள்ளப்படும்வரை அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையிலான உத்தரவைப் பெறுவதற்கு சிலர் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார்கள்.

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிகளிலிருந்து விலகி, கல்வித்துறை மற்றும் ஏனைய தொழிற்துறைசார் நிபுணர்களும் நாட்டை ஆட்சி செய்வதற்கு இடமளிக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

ஆனால் அது சாத்தியமில்லை என்பதுடன் உலகின் எந்தவொரு நாடும் அவ்வாறான வழிமுறையில் நிர்வகிக்கப்படவில்லை' என்று ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தபோது குறிப்பிட்டார்.

அத்தோடு தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின்படி ஜனாதிபதி இராஜினாமா செய்யும் பட்சத்தில், அடுத்த 60 நாட்களுக்கு அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளமுடியும் என்றும் அதன் பின்னர் தேர்தல் நடைபெறும் காலம்வரை நாட்டை நிர்வகிப்பதற்கு ஏற்ற ஜனாதிபதியொருவரைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யமுடியும் என்றும் பீரிஸ் எடுத்துரைத்தார். அதுமாத்திரமன்றி அரசியலமைப்பின் ஊடாக அரசாங்கத்தைப் பதவி விலக்குவதற்கான ஏனைய வாய்ப்புக்கள் தொடர்பிலும் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21