(எம்.எப்.எம்.பஸீர்)

மேலதிக சொலிசிற்றர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்  பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த கடிதத்தை இன்று மாலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகத்தின் உயர் மட்ட தகவல்கள் கேசரிக்கு தெரிவித்தன.  

கடந்த வாரம் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலகுவதாக தில்ருக்ஷி டயஸ் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

எவ்வாறாயினும் இராஜினாமா செய்தமைக்கான காரணத்தை அவர் வெளிப்படுத்தாத போதும், கடந்த வாரத்துக்கு முன்னைய வாரம்  இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீது ஜனாதிபதி முன்வைத்த விமர்சனங்களே காரணம் என இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் உயர் மட்டத்தகவல்கள் கேசரிக்கு சுட்டிக்காட்டின. 

அதன்படி மிக விரைவில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நாயகத்தை ஜனாதிபதி நியமிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.