அமைச்சர்கள் பதவி விலகல் கோமாளி நாடகம் : அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துங்கள்  - ஜே.வி.பி.

05 Apr, 2022 | 07:17 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் , அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகக் கூடும். 

இதற்கு இடமளிக்காத வகையில் அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

அதற்கமைய ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர் தனது பதவி காலம் முடிவதற்கு முன்பதாக  ஏதாவது காரணங்களினால் பதவியை இராஜிநாமா செய்தால் அடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கே செல்ல வேண்டும் என்ற வகையில் அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். 

தமது தேவைக்கு ஏற்ப அரசியலமைப்பில் திருத்தங்களை செய்யும் ராஜபக்ஷாக்கள் உண்மையில் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்தால் இதனை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் முதன் முறையாக வெறும் காகிதமாக்கப்பட்டுள்ளது. 

நாடளாவிய ரீதியில் அவசரகால நிலைமை சட்டம் நடைமுறையிலுள்ள நிலையில் ஞாயிறன்று பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதிலும் பொது மக்கள் வீதிக்கு இறங்கி போராடினர். 

அடக்குமுறைகளால் மக்களின் போராட்டங்களை முடக்க முடியாது என்பதை இப்போதாவது அரசாங்கம் உணர வேண்டும்.

மக்களின் ஆர்ப்பாட்டங்கள் அமைச்சர்கள் பதவி விலக அல்ல

அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியமை கோமாளித்தனமானதொரு நாடகமாகும். ஜனாதிபதியையும் , ராஜபக்ஷாக்களையும் பதவி விலகுமாறு கோரியே மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

 அதனைவிடுத்து இவ்வாறு அமைச்சர்கள் பதவி விலகி அரங்கேற்றப்படும் நாடகங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பொது மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் , அமைச்சு பதவிகளை ஏற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வருமாறு ஜனாதிபதி ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதன் மூலம் அவரது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

அத்தோடு அவருக்கு தற்போது அவ்வாறு கோரிக்கை விடுப்பதற்கு எந்தவொரு அதிகாரமும் உரிமையும் கிடையாது. மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருப்பது அமைச்சர்களை மாற்றுவதற்காக அல்ல.

இந்த நாடகம் தொடர்வதற்கு மக்கள் இடமளிக்கக் கூடாது. எனவே அனைத்து ராஜபக்ஷாக்களும் பதவி விலகும் வரை போராட்டங்களை கைவிடவும் கூடாது. அமைச்சர்கள் பதவி விலகுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியமைக்காக அவர் தூய்மையானவர் என்று கருதி விட முடியாது. மாறாக பொருளாதார நெருக்கடிகளை தோற்றுவித்ததில் பெரும்பங்கு வகித்த அவர் தற்போது அதனை சரி செய்யும் பொறுப்பிலிருந்து தப்பியுள்ளார்.

ராஜபக்ஷாக்கள் முற்றாக விரட்டியடிக்கப்பட்டு, நாட்டில் அமைதியானதொரு நிலைமை ஏற்பட்ட பின்னர் மக்கள் ஆணைக்கு செல்வதே தற்போது காணப்படும் ஒரேயொரு மாற்று வழியாகும்.

ஜனாதிபதி எங்கே?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. தனக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதால் மறைந்து கொண்டிருக்கின்ற ஜனாதிபதியால் எவ்வாறு நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும்? ஜனாதிபதி , பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலகினால் மாத்திரமே நாம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிந்திப்போம். அதனை விடுத்து ராஜபக்ஷ தலைமைத்துவத்தில் எந்தவொரு இடைக்கால செயற்பாடுகளிலும் ஜே.வி.பி. கலந்து கொள்ளாது.

மக்கள் எழுச்சி எந்தளவிற்கு பலமானது என்பதை அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம் மிகவும் கால தாமதமானது. 

இதுவும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நாடகத்தின் ஒரு பகுதியே ஆகும். இவர்களை பதவி விலகச் செய்வதோடு மாத்திரமின்றி , கொள்ளையடித்த சொத்துக்களை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

ராஜபக்ஷாக்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் தமக்கு தேவையான வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை செய்து கொண்டுள்ளனர். 

எனவே தற்போது நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர் தனது பதவி காலம் முடிவதற்கு முன்பதாக  ஏதாவது காரணங்களினால் பதவியை இராஜிநாமா செய்தால் அடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கே செல்ல வேண்டும் என்ற வகையில் அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58