போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடைகள் மூலமே பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தமுடியும் - சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்

Published By: Digital Desk 3

31 Mar, 2022 | 05:25 PM
image

(நா.தனுஜா)

மனிதகுலத்திற்கு எதிரான மிகமோசமான மீறல்களுடனும் போர்க்குற்றங்களுடனும் தொடர்புபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராகத் தடைகளை விதிப்பதிலும் அவரைக் குற்றவியல் விசாரணைக்குட்படுத்துவதிலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தோல்வியடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் 3 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், அவுஸ்திரேலியாவில் விசேட விசாரணைப்பிரிவொன்று உருவாக்கப்படவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதன் மூலம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் காணப்படும் இடைவெளியை நிரப்பமுடியும் என்பதுடன் ஜெனரல்களால் அனுபவிக்கப்படும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கையும் முடிவிற்குக்கொண்டுவரமுடியும் என்று அவ்வமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் மற்றும் சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய மையம் ஆகிய இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜெனரல் ஜகத் ஜயசூரிய கட்டளையிடும் அதிகாரத்திலிருந்தபோது நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களைக் கருத்திற்கொண்டு அவருக்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என்று அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களும் மனித உரிமைகள் அமைப்புக்களும் வலியுறுத்திவருகின்றன. 

அதுமாத்திரமன்றி முன்னாள் இராணுவத்தளபதி அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அனுமதியளிக்கப்பட்டதன் பின்னர் அவரை விசாரணைக்கு உட்படுத்துவதில் அவுஸ்திரேலிய பொலிஸார் தோல்வியடைந்துள்ளமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

ஜகத் ஜயசூரியவிற்கு எதிராகத் தடைவிதிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கையானது பிரிட்டன் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கையை ஒத்ததாகும். அவருக்கு எதிராகத் தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தி இவ்வாண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி மனித உரிமைகள் அமைப்புக்களால் முதற்தடவையாக அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் 100 பக்க ஆவணமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

போர்க்குற்றவாளியான அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மேமாதம் அவரது குடும்ப உறுப்பினர்களைப் பார்ப்பதற்காக அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்துடன் மெல்பேர்னில் நடைபெற்ற பொதுநிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தார். 

சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய மையம் மற்றும் மனித உரிமைகள் சட்ட நிலையம் ஆகிய மூன்று அமைப்புக்கள் இணைந்து அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு கடிதமொன்றை எழுதியிருந்ததுடன், அவுஸ்திரேலிய சட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச நியமங்களின் பிரகாரம் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக உடனடியாகக் குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அதில் வலியுறுத்தியிருந்தனர். 

அதுமாத்திரமன்றி சாட்சியங்கள் மற்றும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட 40 பேரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றையும் அவர்கள் சமர்ப்பித்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மிகமோசமான சர்வதேச குற்றங்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகளை முன்னெடுப்பதில் அவுஸ்திரேலிய பொலிஸார் தோல்வியடைந்திருப்பதன் ஊடாகப் பொறுப்புக்கூறலைப் புறக்கணித்திருப்பதாக சில அமைப்புக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன. 

குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர்மாத இறுதியில் ஜகத் ஜயசூரிய மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டமையும் பொதுநிகழ்வுகளில் கலந்துகொண்டமையும் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 

ஆகவே அவுஸ்திரேலிய பொலிஸ், உள்ளக விவகாரத்திணைக்களம் மற்றும் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் ஆகிய கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட தவறான நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அவ்வமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. அதுமாத்திரமன்றி இத்தகைய முக்கிய தோல்விகளைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், அவுஸ்திரேலியாவில் விசேட விசாரணைப்பிரிவொன்று உருவாக்கப்படவேண்டியது அவசியமாகும்.

ஜகத் ஜயசூரிய சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு முரணானவகையில் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான மீறல்கள் மற்றும் குற்றங்களுக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கம் பொறுப்பானவராக இருக்கின்றார். அவர் சில இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான தூதுவராகப் பதவிவகித்த காலப்பகுதியில், சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் அவருக்கெதிராக பிரேஸில், சிலி மற்றும் கொலம்பியாவில் குற்றவியல் வழக்குகளைத் தாக்கல்செய்தது. அதன் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டில் ஜயத் ஜயசூரிய பிரேஸிலிருந்து இலங்கைக்குத் தப்பியோடிவிட்டார்.

அவுஸ்திரேலியாவின் மக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் ஜகத் ஜயசூரியவின் நேரடிக்குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் தடைவிதிக்குமாறு வலியுறுத்தப்பட்டிருந்த போதிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும் அங்கு கற்கைநெறியைத் தொடர்வதற்காக உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது.

இலங்கையில் சிவில் யுத்தம் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம் கடந்துள்ள போதிலும், போரின்போது நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும் எந்தவொரு குற்றவாளியும் பொறுப்புக்கூறச்செய்யப்படவில்லை. 

நீதியை நிலைநாட்டுவதற்காக சர்வதேச நாடுகளால் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தவிர்ந்த எந்தவொரு பொறுப்புக்கூறல் பொறிமுறையும் பாதிக்கப்பட்டவர்களின் வசமில்லை. 

எனவே குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதன் மூலம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் காணப்படும் இடைவெளியை நிரப்பமுடியும் என்பதுடன் ஜெனரல்களால் அனுபவிக்கப்படும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கையும் முடிவிற்குக்கொண்டுவரமுடியும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30