(லியோ நிரோஷ தர்ஷன்)

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் . தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா இலக்கும் நிலுவை சம்பளத்தையும் பெற்றுக் கொடுக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை. தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டே 730 ரூபாவிற்கு இணக்கம் தெரிவித்தோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான்  தெரிவித்தார். 

தோட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக வேலை செய்யக் கூடிய வகையிலான சரத்து கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கியுள்ளோம். ஆகவே இம் முறை தோட்ட தொழிலாளர்களுக்கு சார்பான பல விடயங்கள் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியுடன் செயற்பட்டது. குறிப்பிட்ட தொழிற்சங்கம் குழப்பியடிக்கா விடின் உரிய சம்பள இலக்கை அடைந்திருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவணில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பொது செயலாளர் ஆறுமுகம் தொண்டமான்  மேற்கண்டவாறு கூறினார்.