பிம்ஸ்டெக் அமைப்பின் 5 ஆவது அரசதலைவர்கள் மாநாட்டில் உறுப்புநாடுகளின் ஆதரவுடன் பிம்ஸ்டெக் சாசனம் நிறைவேற்றம்

Published By: Digital Desk 4

30 Mar, 2022 | 10:10 PM
image

(நா.தனுஜா)

பிம்ஸ்டெக் அமைப்பின் 5 ஆவது அரசதலைவர்கள் மாநாடு நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றதுடன், இதில் இலங்கை ஜனாதிபதி உட்பட 7 உறுப்புநாடுகளினதும் அரசதலைவர்கள் மெய்நிகர் முறைமையின் ஊடாகக் கலந்துகொண்டு உரையாற்றினர். அத்தோடு பரஸ்பர சட்ட உதவி, இராஜதந்திர பயிற்சிவழங்கல், தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் தொடர்புடைய 3 இருதரப்பு ஒப்பந்தங்களும் உறுப்புநாடுகளால் கைச்சாத்திடப்பட்டன.

'பிம்ஸ்டெக்' என்றழைக்கப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் 5 ஆவது மாநாடு கடந்த திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய 7 நாடுகள் அங்கம்வகிக்கும் இந்த பிம்ஸ்டெக் அமைப்பின் மாநாட்டின் முதலாம்நாள் மற்றும் இரண்டாம்நாளில் முறையே 22 ஆவது பிம்ஸ்டெக் உயரதிகாரிகள் கூட்டம், 18 ஆவது பிம்ஸ்டெக் அமைச்சுமட்டக்கூட்டம் ஆகிய கூட்டங்கள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று புதன்கிழமை 5 ஆவது பிம்ஸ்டெக் அரசதலைவர்கள் மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் காலை 9 மணியளவில் ஆரம்பமானது.

உறுப்புநாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த இரண்டு நாட்களும் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பிரதிநிதிகள் நேற்றைய தினமும் நேரடியாக வருகைதந்திருந்தனர்.

இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக பிம்ஸ்டெக் உறுப்புநாடுகளின் அரசதலைவர்கள் அனைவரும் மெய்நிகர்முறைமையின் ஊடாகவே பங்கேற்றிருந்தனர்.

அதன்படி மெய்நிகர்முறைமை ஊடாக மாநாட்டை ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி ராஜபக்ஷ, அதனைத்தொடர்ந்து இலங்கை சார்பில் உரையாற்றினார்.

அதன் பின்னர் 'பிம்ஸ்டெக் சாசனம்' அனைத்து உறுப்புநாடுகளினதும் பிரதிநிதிகளிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டிருப்பதாகவும், அச்சாசனம் தொடர்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றைக் கூறுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் உறுப்புநாடுகளால் எவ்வித ஆட்சேபனைகளும் முன்வைக்கப்படாத நிலையில்,  பிம்ஸ்டெக் சாசனத்தை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி அறிவித்தார். அத்தோடு அங்கத்துவ நாடுகளின் அரசதலைவர்கள் அதில் கையெழுத்திட்டனர்.

அதன் பின்னர் உறுப்புநாடுகளின் தலைவர்கள் மெய்நிகர்முறைமையின் ஊடாக மாநாட்டில் உரையாற்றினர். அதன்படி பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பூட்டான் பிரதமர் லொற்றே ஷெரிங், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா, தாய்லாந்து பிரதமர் ஜெனரல்(ஓய்வுபெற்ற) பிரயுத் சான்-ஓ-சா மற்றும் மியன்மார் வெளிவிவகார அமைச்சர் வுன்னா மவுங் ல்வின் என்ற ஒழுங்கில் உரைகள் இடம்பெற்றன.

அரசதலைவர்களின் உரைகளின் பின்னர் கடந்த பிம்ஸ்டெக் மாநாட்டின்போது நடைபெற்ற 17 ஆவது அமைச்சர்மட்டக்கூட்டம் தொடர்பான கூட்டறிக்கை மற்றும் இம்முறை நடைபெற்ற 18 ஆவது அமைச்சர்மட்டக்கூட்டம் தொடர்பான அறிக்கை ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதில் ஏதேனும் ஆட்சேபனைகள் உள்ளனவா? என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வினவினார். இருப்பினும் உறுப்புநாடுகள் ஆட்சேபனை தெரிவிக்காததால் அவ்விரு அறிக்கைகளும் ஏற்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து பிம்ஸ்டெக் அமைப்பின் செயலாளர் நாயகம் ரென்சின் லெக்ஃபெவின் உரை இடம்பெற்றது. பிம்ஸ்டெக் அமைப்பின் 4 ஆவது மாநாடு 2018 ஆம் ஆண்டில் நடைபெற்றிருந்த நிலையில், 5 ஆவது மாநாட்டை 2020 ஆம் ஆண்டில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காரணமாக அதனை நடத்துவதில் இருவருடங்கள் தாமதம் ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் கொரோனா வைரஸ் பரவல் அனைத்துத்தரப்பினருக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருப்பதாகவும், இருப்பினும் கொவிட் - 19 தடுப்பூசி வழங்கலில் பிம்ஸ்டெக் உறுப்புநாடுகள் ஒன்றுக்கொன்று உதவியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவரது உரையின் பின்னர் பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம்வகிக்கும் 7 நாடுகளின் பிரதிநிதிகளும் குற்றவியல் விவகாரங்களின்போது பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொடர்பான பிம்ஸ்டெக் பிரகடனம், பிம்ஸ்டெக் உறுப்புநாடுகளின் இராஜதந்திர பயிற்சிவழங்கல் நிறுவனங்களுக்கு இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் கொழும்பில் தொழில்நுட்ப பரிமாற்ற வசதியை ஸ்தாபித்தல் தொடர்பான நிலையத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய 3 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர். இலங்கை சார்பில் இவ்வொப்பந்தங்களில் முறையே நீதியமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் தீபா லியனகே ஆகியோர் கையெழுத்திட்டனர்.  

இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், அடுத்ததாக பிம்ஸ்டெக் அமைப்பிற்குத் தலைமைதாங்கும் நாடாக தாய்லாந்து தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருப்பின், அவற்றைத் தெரியப்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். எவ்வித ஆட்சேபனைகளும் முன்வைக்கப்படாத நிலையில், பிம்ஸ்டெக் அமைப்பிற்கான தலைமை நாடாக தாய்லாந்து தெரிவானதுடன், அந்நாட்டு பிரதமர் ஜெனரல்(ஓய்வுபெற்ற) பிரயுத் சான்-ஓ-சா ஏற்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து பிம்ஸ்டெக் அமைப்பிற்கு தலைமைதாங்கிய இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி கூறிய ஜனாதிபதி, 5 ஆவது பிம்ஸ்டெக் அரசதலைவர்கள் மாநாடு முடிவிற்குக்கொண்டுவரப்படுவதாக அறிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55