இண்டியன் பிறீமியர் லீக் : இன்று சென்னையை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

26 Mar, 2022 | 10:34 AM
image

(என்.வீ.ஏ.)

நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் முன்னாள் சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் மும்பை வான்கடே விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியுடன் 15 ஆவது இண்டியன் பிறீமியர் லீக் (ஐபிஎல்) இருபது 20 கிரிக்கெட் அத்தியாயம் ஆரம்பமாகிறது.

குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்துள்ளதால் இம் முறை 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

நடந்து முடிந்துள்ள 14 அத்தியாயங்களில் 2011 ஐத் தவிர்ந்த மற்றைய எல்லா அத்தியாயங்களிலும் தலா 8 அணிகள் பங்குபற்றின. 

2011 இல் 10 அணிகள் பங்குபற்றின. இப்போது 2ஆவது தடவையாக ஐபிஎல்லில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன இதன் காரணமாக இம் முறை போட்டி முறைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தரவரிசைப்படி இரண்டு குழுக்களில் அணிகள்

முதலாவதாக அணிகளின் முன்னைய பெறுபெறுகள், அதாவாது அதிக தடவைகள் சம்பயினான அணிகள், அதிக தடவைகள் இறுதிச் சுற்றில் விளையாடிய அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் தரவரிசைப்படுத்தப்பட்டு இரண்டு குழுக்களாக வகுக்கப்பட்டுள்ளன.

ஐந்து தடவைகள் சம்பியனான மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ், டெல்ஹி கெப்பிட்டல்ஸ், அறிமுக அணிகளில் ஒன்றான லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகியன ஏ குழுவில் இடம்பெறுகின்றன.

நான்கு தடவைகள் சம்பியனானதும் நடப்பு சம்பியனுமான சென்னை சுப்பர் கிங்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், மற்றொரு அறிமுக அணி குஜராத் டைட்டன்ஸ் என்பன பி குழுவிலும் இடம்பெறுகின்றன.

இந்த இரண்டு குழுக்களிலும் இடம்பெறும் அணிகள் தத்தமது குழுக்களில் உள்ள மற்றைய அணிகளுடன் தலா 2 தடவைகளும் எதிர் குழுவில் உள்ள 5 அணிகளில் நான்குடன் ஒரு தடவையும் விளையாடவேண்டும். எதிர்குழுவில் தங்களுக்கு நிகராக உள்ள அணியுடன் மாத்திரம் 2 தடவைகள் மோதவேண்டும்.

இதற்கு அமைய ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாடும்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக மும்பையிலுள்ள 3 மைதானங்களில் 55 லீக் போட்டிகளும் புனேயில் 15 போட்டிகளும் நடத்தப்படும. இறுதிச் சுற்றுக்கான இடங்கள் பின்னர் தீர்மானிக்கப்படும்.  

லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிச் சுற்றில் விளையாட தகுதி பெறும்.

அணிகள் நிலையில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கான தகுதிகாண் ஆட்டத்தில் விளையாடும். இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்

அணிகள் நிலையில் 3ஆம், 4ஆம் இடங்களில் உள்ள அணிகள் நீக்கல் போட்டியில் விளையாடும். இதில் வெற்றிபெறும்  அணி முதலாவது தகுதிகாணில் தோல்வி அடையும்   அணியுடன் இரண்டாவது தகுதிகாண் ஆட்டத்தில் விளையாடும்.

இதில் வெற்றிபெறும் அணியும் முதலாவது தகுதிகாணில் வெற்றுபெறும் அணியும் சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டியில் விளையாடும்.

இஷான் கிஷான் 

ஐபிஎல் 15ஆவது அத்தியாயத்தில் புதிதாக 2 அணிகள் இணைந்ததால் மிகப் பெரிய அளவில் வீரர்களுக்கான ஏலம் நடத்தப்பட்டது. அதில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் இளம் வீரர் இஷான் கிஷான் அதிக விலையான இந்திய நாணயப்படி 15 கோடி ரூபாவுக்கு மும்பை இண்டியன்ஸ் முகாமைத்துவத்தினால் வாங்கப்பட்டார்.

கடந்த காலங்களில் ஒரே அணியில் இடம்பெற்றுவந்த பல வீரர்கள் இம்முறை வேறு அணிகளால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வீரர்கள் பிரிந்து சென்றுள்ளதால் இம்முறை எந்த அணி வெற்றிபெறும் என அனுமாணிக்க முடியாமல் இருக்கின்றது.

இது இவ்வாறிருக்க, சில நாடுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளதால் அந்த அணிகளில் உள்ள பல வீரர்கள், ஐபிஎல் ஆட்டங்கள் சிலவற்றை தவறவிடுவார்கள். இதன் காரணமாக பல அணிகள் முதல் பதினொருவரைத் தெரிவு செய்வதில் சிக்கலை எதிர்நோக்கவுள்ளன.

சென்னை எதிர் கொல்கத்தா

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ள முதலாவது ஐபிஎல் போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு இம்முறை புதிய அணித் தலைவராக ரவீந்த்ர ஜடேஜா விளையாடவுள்ளார். வழமையான அணித் தலைவர் மஹேந்த்ர சிங் (எம்.எஸ்.) தோனி இரண்டு தினங்களுக்கு முன்னர் அணித் தலைவர் பதவியை ஜடேஜாவிடம் ஒப்படைத்திருந்தார். எனினும் தோனி சாதாரண வீரரகாக அணியில் இடம்பெறுவது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைவது உறுதி.

மொயீல் அலி இன்றைய போட்டியில் விளையாடமாட்டார். அத்துடன் காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் தீப்பக் சஹார் பூரண குணம் அடையாததால் பல போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்ப்பட்டுள்ளது.

தோனி, ரவிந்த்ர ஜடேஜா, கடந்த அத்தியாயத்தல் அதிக ஓட்டங்களைக் குவித்த ருத்துராஜ் கயேக்வாட், டெவொன் கொன்வோ, டுவேன் ப்ராவோ, அம்பாட்டி ராயுடு, ரொபின் உத்தப்பா ஆகியோர் சென்னை அணியில் நம்பிக்கை நட்சத்திரங்களாக இடம்பெறுகின்றனர்.

கொல்கத்தா அணியில் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், அண்ட்ரே ரசல், நிட்டிஷ் ரானா, சகலதுறை வீரர் வெங்கடேஷ் ஐயர், சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி ஆகியோர் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் ஆரொன் பின்ச், பெட் கமின்ஸ் ஆகிய இருவரும் ஆரம்பப் போட்டிகள் சிலவற்றில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸும் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ள 25 போட்டிகளில் 17 - 8 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் சென்னை முன்னிலை வகிக்கின்றது. 2021 இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் சந்தித்தபோது 27 ஓட்டங்களால் வெற்றிபெற்று சென்னை சுப்பர் கிங்ஸ் சம்பியனாகியிருந்தது.

இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வெற்றிகொள்வதற்காக சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடவுள்ளதால் இந்த வருட ஐபிஎல் போட்டி பரபரப்புடன் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31