காத்தான்குடியில் இயங்கி வந்த தொலைத் தொடர்பு உபகரணங்கள் விற்பனை நிலையம் ஒன்று உடைத்து அங்கு பணமும் விற்பனைக்கிருந்த பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

காத்தான்குடி 06, பிரதான வீதியில் (மக்கள் வங்கிக்கு அருகாமையில்) உள்ள முஹம்மத் இப்றாஹிம் முஹம்மத் நப்ரிஸ் என்பவரின் தொலைத் தொடர்பு உபகரண விற்பனை நிலையமே இன்று அதிகாலை உடைத்து திருடப்பட்டுள்ளது.

கடைசியாக இவர் தனது விற்பனை நிலையத்தை நேற்று இரவு 9 மணியளவில் மூடிவிட்டு வந்ததாகவும் மீண்டும் இன்று காலை தனது நண்பர்கள் தனக்கு தொலைபேசி மூலம் கடை உடைக்கப்பட்டுள்ளது பற்றி அறிவித்தன் பிரகாரம் அங்கு சென்று பார்த்தபோது கடை உடைத்து பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்திருப்பதாகவும் அவர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

40 ஆயிரம் ரூபாய் பணமும், சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியுள்ள கிட் காட்டுகளும் கைப்பேசிகளும் திருடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-அப்துல் கையூம்