ஆசியாவின் “ஆச்சரியம் ” நம்பினால் நம்புங்கள்

Published By: Digital Desk 3

18 Mar, 2022 | 10:30 AM
image

இலங்கையின் வனப்பும், வளமும் இலங்கைத் திருநாட்டை எப்பொழுதும் ஆசியாவின் ஆச்சரியமாகவே பார்க்க வைத்துள்ளது. அந்தவகையில் இலங்கையின் இன்றைய நிலையும் உலகை ஆச்சரியமாகவல்ல, அதிர்ச்சியாவும் பார்க்க வைத்துள்ளது.

இலங்கையின் வரலாற்றில் முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் மக்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு குடும்பத்தில் 4 உறுப்பினர்கள் என்றால், ஒருவர் எரிவாயு வரிசையிலும் மற்றையர் எரிபொருள் வரிசையிலும், மூன்றாமவர் அரிசி, பால்மாவுக்கான வரிசையிலும் நான்காமவர் மருந்துப் பொருட்களுக்கான வரிசையிலும் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் நரக வாழ்வுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதய நோயாளி ஒருவர் பத்திரிகையைப் பார்த்த மறுகணமே உயிர் பறிபோய்விடும் நிலையில் பொருட்களின் விலைவாசிகள் விஷம் போல் ஏறிச்செல்கின்றன. மூன்று வேளை மருந்தை உட்கொள்ள வேண்டிய ஒருவர் இரண்டு வேளை மருந்தை உட்கொள்ள வேண்டியிருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.

நாடு யுத்தத்தை எதிர்நோக்கிய காலகட்டத்தில்கூட இவ்வாறான துயரத்தை எவரும் எதிர்நோக்கியது இல்லை என்று கண்ணீர் வடிக்கின்றனர்.

சரி, இன்றைய நிலைக்குக் காரணம் என்ன ? என்று பார்த்தால் ஒன்றன்பின் ஒன்றாக பல காரணங்களை அடுக்கிச் செல்லலாம். பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டதாக மார்தட்டிய அரசு இன்று சகலராலும் கடுமையாகவும், பகிரங்கமாகவும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு வீடும் பொருளாதார “ நெருப்பில் பொசுங்கி ” வருகிறது. இந்த நிலை எப்போது மாறும் என்று எதிர்வுகூற முடியாத நிலையில் மக்கள் தங்கள் இடுப்புப் பட்டியை இறுக கட்டிவருகின்றனர்.

எப்போது அரசு சர்வதேச நாணய நிதியத்தைத் தட்டிக் கழித்ததோ, சர்வதேசத்தின் கோரிக்கைகளை நிராகரித்ததோ, தன்னை பெரும்பான்மை மக்களுக்கான அரசு என்ற தோற்றத்தை உருவாக்கியதோ, அப்போதே அது அதலபாதாளத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.

இந்நிலையில் தான் கொவிட் நோய்த்தாக்கம் மற்றும் உலகப்பொருளாதார நெருக்கடிகள் இலங்கையிலும் தாக்கம் செலுத்த ஆரம்பித்தன. அதேவேளை ஊழல்களும், சுரண்டல்களும் வெளிப்படையற்ற தன்மையும், நாட்டின் பொருளாதாரத்தை படுபாதாளத்துக்கு இழுத்துச் சென்றன.

இந்நிலையில், ஆட்சியாளர்களின் குடும்பிச் சண்டைகளும், போட்டா போட்டிகளும் நாட்டை மேலும் நரகத்துக்கே கொண்டு சென்று விட்டன. இப்போது எதிர்பார்ப்புக்கள் யாவும் பொய்த்துப்போன நிலையில், அடுத்த கட்டம் என்ன , என்று தெரியாத நிலையில், இலங்கையை ஆப்கானிஸ்தானுடனும் சோமாலியாவுடனும் ஒப்பிடும் நிலை தோன்றியுள்ளது.

யுத்ததத்தால் சிதைந்துபோயுள்ள உக்ரேனுக்கும் பொருளாதார நெருக்கடியால் உருக்குலைந்து போயுள்ள இலங்கைக்கும் வேற்றுமை இல்லை என்று கூறும்மக்கள் தலைநகர் கொழும்பில் அலையாகத்திரண்டு தமது எதிர்ப்பைக்காட்டினர்.

இந்தப் போக்குகளுக்கு மத்தியில் ஜனாதிபதி வியாழனன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று கூறியதுடன் மக்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு காணப்பட்டது.

நிவாரணப் பட்டியல் வெளிவரும் என்று சிலர் நம்பினார்கள், எரிவாயு, எரிபொருள், மருந்துகள் யாவும் உடன் கிடைக்க வழிசெய்வேன் என்று ஜனாதிபதி கூறுவார் என்று நம்பினார்கள், அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் டொலர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று கூறுவார் என்று நம்பினார்கள். இறுதியில் அவரும் “ என்னை நம்புங்கள் ” என்று கூறி தனது உரையை முடித்துள்ளார். ம்..... நம்பினால் நம்புங்கள் என்று பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13