வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைத் தீர்ப்பு ; பொறுப்புக்கூறலின் வலுவிழப்பை மீளுறுதி செய்கின்றது

Published By: Digital Desk 3

18 Mar, 2022 | 10:40 AM
image

அம்பிகா சற்குணநாதன்

நவம்பர் 2012 இல் கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 பேர் கொல்லப்பட்டனர். 

ஜனவரி 13, 2022 இது குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட மூன்று குற்றவாளிகளில் ஒருவரான மகசீன் தடுப்புக்காவல் சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகரான எமில் ரஞ்சன் லமாஹேவ என்பவர்   கொண்ட அமில என அழைக்கப்படும் தேவமுல்லகே மலித் பெரேராவின் கொலைக்கு பொறுப்பானவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல அரச அமைப்புகளைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையான அரச அதிகாரிகள் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்வதால் கொல்லப்பட்டோர் தொடர்பான உண்மை மற்றும் நீதியைத் தேடும் போராட்டத்தில் குறித்த தீர்ப்பு முக்கியமானதாக அமைந்துள்ளது. 

இப்படுகொலைகளை மேற்கொண்டதன் முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரத் தளங்களில் பொறுப்புக் கூறல் காணப்படுவதில்லை என்பதை இந்த தீர்ப்பு எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சட்டரீதியாக வழங்கப்பட்ட பணிப்பாணைகளுக்கு உரிய அதிகாரங்களுக்கு அப்பால் தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துள்ளமை இங்கு புலப்படுகின்றது. 

முன்னரே திட்டமிட்டு நீதிக்கு புறம்பான வகையில் அரச அதிகாரிகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களை கொன்று குவித்த நிலையிலும் பொதுமக்களின் எதிர்ப்புகள் பாரிய அளவில் வெளிப்படவில்லை. அத்துடன் அரசாங்கம் இது தொடர்பில் எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது ஆச்சரியமான விடயம் அல்ல. 

“அடையாளம் காணப்படாத / தெரியாத நபர்கள் : இலங்கைக்கு புதிய விடயம் அல்ல

சிறையிலடைக்கப்பட்டிருந்த நபர்கள் சிவிலியன் உடையணிந்த அல்லது அத்துடன் இராணுவத்தைச் சேர்ந்த நபர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அவர்கள் பின்னர் கொல்லப்பட்டமை தெரிய வந்தது என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இந்த நபர்களை கடத்திச் சென்றவர்கள் அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடனேயே அவ்வாறு செயற்பட்டுள்ளனர் என்பதை அனுமானிப்பதற்கு உறுதியான சான்றுகள் உள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்தது. 

சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர்கள் இலக்கு வைக்கப்பட்ட வகையில் கொல்லப்பட்டனரா என்பதில் காணப்படும் எந்தவொரு சந்தேகத்தையும் அகற்றும் வகையில், நீதிமன்றம் பின்வருமாறு கூறியது; “கொலை செய்யப்பட்ட நபர்களை மரணிக்கச் செய்யும் நோக்கில் அவர்களின் தலை, கழுத்து, மார்பு அத்துடன் உடனடியாக மரணத்தை ஏற்படுத்தும் இடங்களை இலக்கு வைத்தே துப்பாக்கிச்சூடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெறித்த இரத்தம் ஏற்படுத்திய வடிவங்கள் இந்த சிறைக்கைதிகளை கொலை செய்வதற்காக எழுந்தமானமான துப்பாக்கிச் சூடுகள் அன்றி கிட்டத்தில் இருந்தே இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்கின்றன. இதற்கேற்ப, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வகையிலேயே இறந்து போன 8 நபர்களின் மரணங்களும் ஏற்பட்டுள்ளதை பலமான சான்றுகள் உறுதி செய்கின்றன”. 

இறந்த உடலங்களின் புகைப்படங்கள் இரண்டு வேறுபட்ட நேரங்களில் எடுக்கப்பட்டுள்ளன என்று சட்டமா அதிபர் முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. முதலாவதாக காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இறந்தவர்களின் உடல்களுக்கு அண்மையில் துப்பாக்கிகள் எவையும் காணப்படவில்லை. எனினும் இரண்டாவது தடவையாக காலை 9.00 மணிக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இறந்த உடலங்களுக்கு அண்மையில் நான்கு வு-56 துப்பாக்கிகளை காணக் கூடியதாக உள்ளது. 

இக்கொலைகள் முன்னரே திட்டமிடப்பட்டு இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் கொலை செய்யப்பட்ட நபர்கள் ஆயுத தாரிகள் எனச் சித்தரிப்பதற்கான முயற்சிகளை இக்குற்றத்தினை இழைத்தோர் மேற்கொண்டுள்ளதையும் இதன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். 

கொண்ட அமிலவின் கொலையினை லமாஹேவ இராணுவ மேஜர் ஒருவரின் துணையுடன் மேற்கொண்டுள்ளதை நீதிமன்றம் கண்டறிந்துள்ள போதும் இன்று வரை குறித்த மேஜரின் அடையாளம் வெளிப்படுத்தப்படவோ அல்லது இக்கொலையுடன் அவருக்குள்ள தொடர்பு பற்றி எந்தவொரு விசாரணையோ இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை.

அதேபோன்று குற்றப்பத்திரிகையில் பட்டியலிடப்பட்டுள்ள ஏனைய 7 பேரின் கொலைகளுக்கு பொறுப்பான நபர்களின் விபரங்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட ஏனைய 19 பேரின் கொலையாளிகள் பற்றிய விபரங்கள் இன்று வரை எமக்குத் தெரியமால் உள்ளது. உதாரணமாக, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை மூன்று நபர்கள் “ஏனையோருடன்” இணைந்து மேற்கொண்டுள்ளதாக தீர்ப்பு கூறுகின்ற அதே வேளை இந்த “ஏனையோரை” பற்றி தாம் அறியவில்லை என தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கூறுகின்றன. 

பொறுப்புக் கூறலில் இருந்து விடுவிப்பு: கட்டுப்படுத்த முடியாத அரக்கன்

சிறைச்சாலைகளில் உள்ளோர் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அதிகாரம் அற்ற பல நபர்கள் மற்றும் அரச அமைப்புகள் என்பன வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்களுடன் முக்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளமை வழங்கப்பட்ட தீர்ப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நபர்கள் தமக்கு சட்டரீதியாக இல்லாத அதிகாரங்களை பயன்படுத்தி சிறைச்சாலை அதிகாரிகளையும் மீறி இப்படுகொலைகளை மேற்கொண்டுள்ள அதே வேளை சிறைச்சாலை அதிகாரிகளால் இச்சம்பவத்தின் பார்வையாளர்களாக மாத்திரமே செயற்பட முடிந்தது. 

நல்லாட்சி அரசாங்கத்தில் கூட இக்கொலைகளுக்கு பொறுப்பான தனிநபர்கள் மீது மாத்திரமே கவனம் செலுத்தப்பட்டது. இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் போன்ற தரப்புகள் அதிகார துஷ்பிரயோகம் செய்து சட்டத்தை மீறிய வகையில் மேற்கொண்ட தீர்மானங்கள் தொடர்பிலும் எந்த வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 

அதிகாரத்தில் உள்ளோரின் பொறுப்பு மற்றும் அப்பொறுப்புகளை கண்காணிக்கும் பொறிமுறைகள் அற்ற நிலை காணப்படுவதை மக்கள் சாதாரண விடயமாக நோக்குதல் என்பன இவ்விடயம் தொடர்பான ஆழமான விசாரணைகள் மற்றும் காத்திரமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமைக்குரிய காரணங்களாக எம்மால் முன் வைக்க முடியும். 

இப்படுகொலைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய P.று. கொடிப்பிலி வழங்கிய சான்றுகளின் பிரகாரம் இந்த படுகொலைகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளின் ஆரம்பமாக விசேட அதிரடிப்படையின் தலைமையில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கை ஒன்றே அமைந்திருந்தது. 

இத்தேடுதலுக்கான தீர்மானம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்டது. சிறைச்சாலைகள் புலனாய்வுப் பிரிவின் அதிகார ஒருவர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதும் அவரின் பங்கேற்பு தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் முன்னதாக அறிந்திருக்கவில்லை. சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு அறிவிக்கப்படாமல் குறித்த அதிகாரி நேரடியாக இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. 

இவ்வழக்கில் முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் குறுக்கு விசாரணை செய்யப்பட்ட போது விசேட அதிரடிப்படையின் உதவியைக் கோருவதற்கான கடிதம் அமைச்சினாலேயே (சிறைச்சாலைக்கு பொறுப்பான அமைச்சாக இருக்கக் கூடும், அனைத்து இடங்களிலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது) தனது கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக அவர் கூறினார். 

பின்னர் அமைச்சரின் பணிப்புரைக்கு ஏற்ப, இக்கடிதம் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பப்பட்டது. எனவே, இங்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் ஒரு தீர்மானம் மேற்கொள்ளும் நபராகவன்றி பெயரளவிலேயே அப்பதவியை வகிக்கும் நபராகவே இவ்விடயத்தில் செயற்பட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது.  

சிறைச்சாலைகளின் எந்த விடுதிகளில் சோதனைகள் மேற்கொள்வது மற்றும் சோதனைகளை எவ்வாறு மேற்கொள்வது போன்ற விடயங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. எனினும் நவம்பர் 9 அன்று மதியம் 1.30 மணியளவில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு விசேட அதிரடிப்படை அணியொன்று வந்து சேர்ந்தது. தான் ஒரு கூட்டத்தில் இருந்த வேளை விசேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் சிறைச்சாலைக்கு வந்துள்ளனர் எனக்கு தனக்கு அறியத்தரப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 

சரியாக எந்த நேரத்தில் தேடுதல் நடவடிக்கை இடம்பெறவுள்ளது என்பதை ஆணையாளர் அறிந்திராத நிலையை இது எடுத்துக் காட்டுகின்றது. இவ்வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரும் அந்நேரத்தில் பதில் பிரதம சிறைச்சாலை அதிகாரியாக செயற்பட்டவருமான குடா பண்டாவும் அவ்விடத்துக்கு விசேட அதிரடிப்படை வரவுள்ளதையும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதையும் அறிந்திருக்கவில்லை. 

சான்றுகள் வெளிப்படுத்திய விடயங்களுக்கு ஏற்ப, வெளிநபர்கள் சிறைச்சாலைக்குள் வந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் விரும்பவில்லை எனவும் மரண தண்டனை மற்றும் நீண்ட கால சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்ட நபர்கள் இருந்த சப்பல் பிரிவில் (Chapel Ward) சோதனை நடத்தப்படுவதற்கு அவர் உடன்படவில்லை எனத் தெரிய வருவதாக நீதிமன்றம் தெரிவிக்கின்றது. 

மேலும், தேடுதல் நடத்தப்படுவதற்கு கடிதத்தில் முன்மொழியப்பட்டிருந்த இடங்களில் சப்பல் பிரிவு உள்ளடங்கியிருக்கவில்லை. சப்பல் பிரிவில் இருந்த நபர்கள் தனித்தனியாக அல்லது ஒன்றிரண்டு நபர்கள் இணைந்ததாகவே சிறையறைகளில் வைக்கப்பட்டிருந்தனர், எனவே சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பிரிவை சோதனையிடுவது மிகவும் இலகுவான விடயமாக அமைந்திருந்தது. இதன் காரணமாகவே சப்பல் பிரிவு தேடுதலில் இருந்து விலக்கப்பட்டிருந்தது. 

சிறையிலடைக்கப்பட்ட நபர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இடையே பதட்டம் அதிகரித்த வேளை, சிறைச்சாலை ஆணையாளர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இரண்டு மணி நேரங்கள் அவகாசம் கோரியிருந்தார். எனினும் அவரின் கோரிக்கை “இராணுவத்துக்கு பொறுப்பான நபர்களால்” நிராகரிக்கப்பட்டது. அவர்கள் இராணுவத்தை சிறைச்சாலைக்குள் அனுப்பியிருந்தனர். 

மேலும், நவம்பர் 10 அதிகாலை 5.30 மணியளவில் தான் சிறைச்சாலைக்குள் நுழைய முயன்ற வேளை தனக்கு இராணுவம் அனுமதி மறுத்தது என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தார். 

சிறைச்சாலைக்குள் தேடுதல் நடத்துவது பற்றிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட கூட்டத்துக்கு தலைமை வகித்தவரின் பணிப்பரப்புக்குள் சிறைச்சாலைகள் உள்ளடங்கவில்லை என்பதை தீர்ப்பு எமக்கு எடுத்துக் கூறுகின்றது. சிறைச்சாலை நிருவாகத்தின் அதி சிரேஷ்ட அதிகாரியான சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு தீர்மானங்களை மேற்கொள்வதற்கு சொற்ப அதிகாரம் காணப்பட்டமையும் எப்போது தேடுதல் இடம்பெறவுள்ளது என்பதைக் கூட அவர் அறிந்திருக்கவில்லை என்பதையும் எம்மால் இங்கு அவதானிக்க முடிகின்றது. 

சிறைச்சாலை முகாமைத்துவத்தின் முதன்மை பொறுப்புக் கொண்டவரும் சட்டரீதியாக பொறுப்பு கூற வேண்டியவருமான சிறைச்சாலை நாயகம் அதிகாரமற்றவராக ஆக்கப்பட்டுள்ளதுடன் சிறைச்சாலைக்குள் நுழைவதில் இருந்தும் இராணுவத்தினால் தடுக்கப்பட்டுள்ளார. அவ்வாறு தடுப்பதற்கு இராணுவத்துக்கு எந்த வித அதிகாரமும் இல்லை. 

பல பொலிஸ் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட இந்த படுகொலை தொடர்பான நம்பகத்தன்மை மிக்க விசாரணை ஒன்றை மேற்கொள்ள தவறியமை இவ்வழக்கின் தீர்ப்பினால் எடுத்துக்காபட்டப் படுகின்றது. பொரள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான மஹிந்த பாலசூரிய இது தொடர்பாக விளக்கமளிக்கையில், தனது பொலிஸ் நிலையம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த போதும் மரண விசாரணை மற்றும் நீதவானுக்கு அறிக்கையிடல் போன்றன மேற்கொள்ளப்படவில்லை எனவும் விசாரணைகள் நிறைவு செய்யப்படவில்லை எனவும் கூறியிருந்தார். மரண விசாரணை நடத்தப்படாமைக்கு காரணமொன்றை வழங்கத் தவறிய அவர் விசாரணை செய்யப்படாததை ஏற்றுக்கொண்டார். இன்னொரு சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரான அதிக்காரி விசாரணைகள் ஒழுங்காக இடம்பெறாததை ஏற்றுக்கொண்டார். 

இச்சம்பவத்துடன் சிறைச்சாலை அதிகாரிகள், இராணுவம், விசேட அதிரடிப்படை மற்றும் தொடர்புடைய அமைச்சின் அதிகாரிகள் தொடர்பு பட்டுள்ள நிலையில் இதற்கு பொறுப்பானவர்களை கண்டறிவதற்கான விசாரணைகள் நடத்தப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாறாக கண்துடைப்பான விசாரணை ஒன்றே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரண விசாரணைகள் நிறைவடைவதற்கு பல வருடங்கள் எடுத்தமை இதனை உறுதிப்படுத்துகின்றது என நீதிமன்றம் மேலும் தெரிவிக்கின்றது. இது தொடர்பான விசாரணைகள் முறையாக நடத்தப்படாத அதேவேளை இந்த சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சிகளும் இது தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தவில்லை எனவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிரேஷ்ட அதிகாரிகளால் தாம் பழிவாங்கப்படலாம் என்ற பயமே இதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் நீதிமன்றம் தெரிவிக்கின்றது. 

2015 ஆம் ஆண்டில் அரசாங்கம் மாறியதைத் தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகளுக்கு உத்வேகம் கிடைத்தது என பல சாட்சிகள் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர். 

விடைகளை விட கேள்விகளே அதிகமாகவுள்ளன

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் நிகழ்வதை இயலுமாக்கிய பிழையான மற்றும் செயலிழந்த குற்றவியல் பொறிமுறை மற்றும் ஆட்சி முறைமைகள் இன்றும் அவ்வாறே நிலைத்திருக்கின்றன. வெலிக்கடை படுகொலைகளைத் தொடர்ந்து சிறைச்சாலைகளில் இரண்டு பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

அனுராதபுரம் தடுப்புக்காவல் சிறைச்சாலையில் மார்ச் 2020 இல் இடம்பெற்ற வன்முறை மற்றும் மூடிய மஹர சிறைச்சாலைக்குள் நவம்பர் 2020 இல் இடம்பெற்ற வன்முறை சம்பவம் என்பனவே அவையாகும். சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய இந்த படுகொலைகள் மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு எவரும் இன்று வரை பொறுப்புக் கூற வைக்கப்படவில்லை. 

கடந்த ஆகஸ்ட் 2021 இல் சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் லொஹான் ரத்வத்தை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை அழைத்து அவர்களை துப்பாக்கி முனையில் கீழ்த்தரமாக நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் இன்னும் அமைச்சுப் பதவி ஒன்றை வகிப்பது மாத்திரம் அன்றி மேலதிக அமைச்சு ஒன்றும் அண்மையில் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த அனைத்து சம்பவங்களும் சிறை வைக்கப்பட்ட நபர்கள் கொண்டுள்ள பாதிப்புறும் ஏதுநிலையையும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளும் பொறுப்புக் கூறலில் இருந்து விலக்களிக்கப்பட்டு தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யும் நிலையையும் எடுத்துக் காட்டுகின்றன. 

மிகவும் முக்கியமாக, வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இந்த மூன்று நபர்களுக்கும் அப்பால் பொறுப்புக் கூற வேண்டிய ஒட்டு மொத்த நபர்களையும் கண்டறிந்து பொறுப்புக் கூற வைக்கப்பட வேண்டும் என்பதை இந்த நீதிமன்றத் தீர்ப்பு எடுத்துக் காட்டுகின்ற போதும், இங்குள்ள சூழமைவு மற்றும் ஆழ வேரூன்றிக் காணப்படும் பொறுப்புக் கூறல் விலக்கு என்பன அதற்கு எந்த வித சாத்தியமும் இல்லை என்பதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22