நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராத் கோஹ்லி அரை சதம் அடிக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 

டெஸ்டில் அசத்திய இந்திய அணி தொடரை 3-0 என முழுமையாக வென்றது. ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் நடந்தது. 

இது, ஒரு நாள் அரங்கில் இந்திய அணி பங்கேற்ற 900வது போட்டியாகும். நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் டோனி களத்தடுப்பை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹார்திக் பாண்ட்யா அறிமுக வாய்ப்பு பெற்றார். 

 பாண்ட்யா பந்தில் குப்டில் (12) ஆட்டமிழந்தார். உமேஷ் வேகப்பந்துவீச்சில் வில்லியம்சன் (3), ரோஸ் டெய்லர் (0) ஒற்றை இலக்கில் திரும்பினர். மீண்டும் வந்த பாண்ட்யா இம்முறை, கோரி ஹெண்டர்சன் (4), லூக் ரான்கியை (௦) வெளியேற்றினார். கேதர் ஜாதவ் 'சுழலில்' நீஷம் (10), சான்ட்னர் (0) சிக்கினர். பிரேஸ்வெல் 15 ஓட்டங்களை எடுத்தார். 

 பின் இணைந்த லதாம், சவுத்தீ ஜோடி பொறுப்புடன் செயல்பட்டது. லதாம் அரை சதம் கடந்தார். அதிரடியாக விளையாடிய சவுத்தீ அரை சதம் விளாசினார். மிஸ்ரா 'சுழலில்' சவுத்தீ (55) சிக்கினார். 

இஷ் சோதி ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். முடிவில், நியூசிலாந்து அணி 43.5 ஓவரில் 190 ஓட்டங்களுக்;கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

 லதாம் (79) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பாண்ட்யா, அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தினார். 

கோஹ்லி அரை சதம்:

இலகுவான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித், ரகானே ஜோடி ஆரம்பத்தை தந்தது. ரோகித் 14 ஓட்டங்கள் எடுத்தார். நீஷம் பந்தில் ரகானே (33) ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டே 17 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்

பின் இணைந்த கோஹ்லி,  டோனி ஜோடி எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. கோஹ்லி அரை சதம் விளாசினார். டோனி (21)  ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

கடைசியில் கோஹ்லி ஒரு சிக்சர் பறக்கவிட, இந்திய அணி 33.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (85), கேதர் ஜாதவ் (10) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.