அனல், நீர்மின் நிலைய முகாமைத்துவ தவறினால் மார்ச் அல்லது ஏப்ரலில் மின் கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடையும் - சம்பிக்க ரணவக்க

Published By: Digital Desk 3

11 Mar, 2022 | 10:44 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நிலக்கரி மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் நீர்மின் நிலையங்களை இயக்குவதில் உள்ள  தவறான முகாமைத்துவம் காரணமாக மார்ச் மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நாடளாவிய ரீதியில் மின் கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடையும். 

இதனை சமாளிக்க 50 வீதத்தினால் மின்சார கட்டணத்தை உயர்த்தவும், எரிபொருள் விலையை அதிகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் இன்றைய நெருக்கடியை அரசாங்கம் ஆழமாக விளங்கிக்கொள்ளாது சூழ்ச்சிகள், குழப்பகார செயற்பாடுகள் என்ற விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி 4 ஆம் திகதி இலங்கையினால் ஆசிய கணக்குத்தீர்வு ஒன்றியத்திற்கு 500 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருந்தது. 

அதனை இம்மாதம் நான்காம் திகதிக்கு வழங்கும் வகையில் பிற்போடப்பட்டிருந்தது. இரண்டு மாதங்கள் பிற்போடப்பட்டதால் மேலும் வட்டி அதிகரிக்கப்பட்டு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களாக செலுத்த வேண்டிய தொகை அதிகரித்துள்ளது. அதனையும் செலுத்த மத்திய வங்கிக்கு திறன் இருக்கவில்லை. அதனை செலுத்தினால் நாடு வங்கரோத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். நாட்டின் சூழ்ச்சி இதுவேயாகும்.

 ஆகவே சூழ்ச்சி என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ராஜபக் ஷவினருக்கு கண்ணாடிக்கு முன்னாள் போய் நின்றால் தெரியும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 600 மெட்ரிக்தொன் டீசலே கைவசம் உள்ளது. நாளாந்த போக்குவரத்துக்கு மட்டுமே 5500 மெட்ரிக்தொன் டீசல் தேவைப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே நாடு இயங்கிக்கொண்டுள்ளது. தற்போது பெட்ரோல் கப்பல் ஒன்றும் இலங்கைக்கு வந்துள்ளது, 37 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசல் துறைமுகத்தில் உள்ளது. 

இவற்றை பெற்றுக்கொள்ள 35 மில்லியன் டொலர்களையே செலுத்த வேண்டும். ஆனால் இன்றுள்ள நிலையில் எம்மால் 52 மில்லியன் டொலர்களை செலுத்தியே பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இலகுவாக கூறுவதென்றால் ஒரு லீட்டர் டீசலுக்கு பொதுமக்கள் மேலதிகமாக 60 ரூபா செலுத்த வேண்டியுள்ளது. 

இதுவே அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவமாகும். நிதி முகாமைத்துவ தவறு காரணமாக ஒரு டீசல் கப்பலில் உள்ள டீசலை இறக்க 345 கோடி ரூபா மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் இல்லாத காரணத்தினால் தான் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றதே தவிர இது சூழ்ச்சி அல்ல. பிரதான மின் உற்பத்தி நிலையங்களை ஜூலை மாதம் வரையிலே இயக்க முடியும். இதனை தவிர்க்க வேண்டும் என்றால் உடனடியாக நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டும். 

ஒக்டோபர் மாதம் வரையில் மின்சார உற்பத்தி நிலையங்களை கொண்டு செல்ல ஒரு மில்லியன் மெட்ரிக்தொன் நிலக்கரி தேவைப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுக்கொள்ள டொலர் இல்லை. இலங்கைக்கு தேவையான நிலக்கரியை ரஷ்யாவில் இருந்து பெற்றுக்கொள்ளவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் ரஷ்யா -உக்ரேன் மோதல் காரணமாக எம்மால் அங்கிருத்து நிலக்கரியை பெற்றுக்கொள்ள முடியாது. ஜூலை மாதத்தில் இருந்து மின்சார உற்பத்தி நிலையங்கள் முடங்கினால் நாட்டின் நிலைமை மிக மோசமானதாக அமையும். அதேபோல் நீர்மின் உற்பத்தியில் மிக மோசமான முகாமைத்துவம் கையாளப்படுகின்றது.

 இப்போதே இதனை சரியாக முகாமைத்துவம் செய்யவில்லை என்றால் மார்ச் மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் முழுமையான மின் கட்டமைப்பு வீழ்ச்சியடையும்.  அதேபோல் இப்போது மின்சார துண்டிப்பினால் இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கும் சேமிப்பை போன்று பத்து மடங்கு நட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படுகின்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

இதனை சமாளிக்க 50 வீதத்தினால் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல் ஏற்பொருள் விலையை அதிகரிக்க மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.  இவ்வாறு தீர்மானம் எடுக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. வங்கிகள் இவ்வாறு தீர்மானம் எடுக்க முடியாது. இவை ஒரு சில மாதங்களில் தீர்வு காணும் பிரச்சினைகள் அல்ல.

இலங்கை பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு கடன்களில் 43 வீதமானவை சர்வதேச பிணைமுறிகளாகும். இப்போது அவற்றை நாம் நிறுத்தினாலும் கூட 2030 ஆம் ஆண்டு வரையில் அதற்கான வட்டி செலுத்தியாகவேண்டும். 

இன்றைய நிலையிலில் கடன் நெருக்கடி மேலும் பல காலத்திற்கு இழுத்தடிக்கப்படும். வெறுமனே டொலர் பிரச்சினைகள் பற்றி பேசுகின்றனர், ரூபாவில் பாரிய நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

ரூபாவின் தட்டுப்பாடு காரணமாக  பிரதான இரண்டு வங்கிகள் வீழ்ச்சியடையும் நிலையொன்று ஏற்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38