உள்ளக அரங்கு கோலூன்றிப் பாய்தலில் 6.19 மீற்றர் உயரம் தாவி டுப்லான்டிஸ் உலக சாதனை

Published By: Digital Desk 3

08 Mar, 2022 | 12:31 PM
image

(என்.வீ.ஏ.)

பெல்கிரேட் உள்ளக அரங்கில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற உலக உள்ளக டுவர் சில்வர் போட்டியில் ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் 6.19 மீற்றர் உயரம் தாவிய மொண்டோ டுப்லான்டிஸ் தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார்.

பெல்கிரேட் 2022 உலக மெய்வல்லுநர் உள்ள சம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுவதற்கு சில தினங்களே இருக்கின்ற நிலையில் அதே அரங்கில் டுப்லான்டிஸ் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளமை விசேட அம்சமாகும்.

சுவீடன் நாட்டவரான 22 வயதுடைய டுப்லான்டிஸ், கடந்த இரண்டு வருடங்களாக இந்த உயரத்தை தாவ முயற்சித்ததுடன், நடப்பு உள்ளக மெய்வல்லுநர் பருவ காலத்தில் பல தடவைகள் இந்த உயரத்தை நெருங்கி வந்துள்ளார்.

கடந்த வருடம் இதே அரங்கில் 6.10 மீற்றர் உயரத்தைத் தாவிய டுப்லான்டிஸ், இம்முறை பங்குபற்றிய போது உலக சாதனையைப் புதுப்பித்துக் கொண்டார்.

பெல்கிரேடில், 5.61 மீற்றரிலிருந்து தனது முயற்சியை ஆரம்பித்த டுப்லான்டிஸ், அந்த உயரத்தை ஒரே தடவையில் தாவினார்.

அவரது எதிராளிகள் அனைவரும் பரபரப்புக்கு மத்தியில் பார்த்துக்கொண்டிருக்க, டுப்லான்டிஸ் 5.85 மீற்றர் உயரத்தையும் தொடர்ந்து 6.00 மீற்றரையும் ஒரே தடவையில் தாவி சகலரையும் பிரமிக்க வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கோலூன்றிப் பாய்தலுக்கான குறுக்குக் கம்பம் 6.19 மீற்றர் உயரத்தில் வைக்கப்பட்டது. அந்த உயரத்தை தாவுவதற்கு டுப்லான்டிஸ் எடுத்த முதல் இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

மூன்றாவதும் கடைசியுமான முயற்சியில் குறுக்குக் கம்பத்தை அவரது முழங்கால் உரசியது. ஆனால் குறுக்குக் கம்பம் லேசாக அசைந்ததே தவிர அது விழவில்லை. தொடர்ந்து கோலுடன் மேலெழுந்த டுப்லான்டிஸ், 6.19 மீற்றர் உயரத்தைத் தாவி கீழே உள்ள மெத்தையில் கால்களைப் பதித்தபோது பேரானந்தத்தில் துள்ளிக் குதித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், '50 தடவைகள் 6.19 மீற்றர் உயரத்தைத் தாவ முயற்சித்தேன்' என டுப்லான்டிஸ் கூறினார்.

'அதற்கு நீண்ட காலம் காத்திருந்தேன். இது போன்று வேறு எந்த உயரத்தையும் தாவியபோது எனக்கு சிரமம் ஏற்பட்டதில்லை. எனவே இது மகிழ்ச்சி தருகிறது. 

கடந்த இரண்டு வருடங்களாக இது மிகவும் கடினமானதாகவும் கடும் முயற்சியுடன் கூடியதாகவும் இருந்தது. இப்போது நான் உண்மையிலேயே சந்தோஷம் அடைகிறேன்' என டுப்லான்டிஸ் மேலும் தெரிவித்தார்.

டொருன் நகரில் 2020 பெப்ரவரி மாதம் 6.17 மீற்றர் உயரத்தையும் ஒரு வாரம் கழித்து க்ளாஸ்கொவில் 6.18 மீற்றர் உயரத்தையும் இப்போது பெல்கிரேடில் 6.19 மீற்றர் உயரத்தையும் தாவிய டுப்லான்டிஸ் கடந்த 2 வருடங்களில் 3 தடவைகள் உலக சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.

சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் இம் மாதம் 18ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக உள்ளக அரங்கு சம்பியன்ஷிப் போட்டியில் உலக சாதனையாளர் டுப்லான்டிஸ் மிகுந்த எதிர்பார்ப்புடன் பங்குபற்றவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21