சுதந்திரக் கிண்ணத்தை சுவீகரித்து வடக்கு இரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய வட மாகாணம்

06 Mar, 2022 | 07:11 AM
image

(யாழ். துரையப்பா அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) நடைபெற்ற தென் மாகாணத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் மிக இலகுவாக 3 - 1 கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று வட மாகாணம் அங்குரார்ப்பண சுதந்திர கிண்ணத்தை சுவீகரித்தபோது சுமார் 7,000 வடக்கு இரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அரங்கை அதிரவைத்தனர்.

மேலும் இந்த சுற்றுப் போடடியில் வழங்கப்பட்ட வீசேட விருதுகள் நான்கில் இரண்டை வட மாகாணமும் மற்றைய இரண்டை கிழக்கு மாகாணமும் வென்றெடுத்தமை விடேச அம்சமாகும்.

அது மட்டுமல்லாமல் இலங்கையில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அணிக்கு  3 மாதங்களில்   கிடைத்த 3ஆவது வெற்றிக்கிண்ணம் இதுவாகும்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் 2021 டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியிலும் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தேசிய சுப்பர் லீக் 50 கிரிக்கெட் போட்டியிலும் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்திய ஜெவ்னா கிங்ஸ், ஜெவ்னா (யாழ்ப்பாணம்) ஆகிய அணிகள் சம்பியனாகியிருந்தன.

இப்போது கால்பந்தாட்டத்தில் வட மாகாணம் தோல்வி அடையாத அணியாக சாதித்துள்ளது.

இந்த வெற்றியை இலங்கை தேசிய வீரரும் தங்களது மாகாண வீரருமான மறைந்த யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸுக்கு சமர்ப்பணம் செய்வதாக வட மாகாண அணியின் தலைமைப் பயிற்றுநர் ரட்ணம் ஜஸ்மின் தெரிவித்தார்.

அதனை நிரூபிக்கும் வகையில் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றதும் டக்சன் பியூஸ்லஸின் உருவப்படத்தை ஏந்தியவாறு வட மாகாண அணியினர் தமது கௌரவஞ்சலியை செலுத்தினர்.

டக்சன் பியூஸ்லஸுக்கு ஒரு நிமிட அஞ்சலியுடன் ஆரம்பமான இறுதிப் போட்டி 10 நிமிடங்களின் பின்னரே சுடுபிடிக்கத் தொடங்கியது.

இரண்டு அணிகளும் அதன் பின்னர் கோல் போடுவதற்கு எடுத்த சில முயற்சிகள் கைகூடாமல் போயின.

எனினும் போட்டியின் 23ஆவது நிமிடத்தில் வட மாகாண பின்கள வீரர் ஜூட் சுபன் பரிமாறிய பந்தை இடதுபுறமாக பெற்றுக்கொண்ட விஜயகுமார் விக்னேஸ், கோலை நோக்கி உதைத்தார். அதனை தென் மாகாண பின்கள வீரர் என். ராஜபக்ச  தடுக்க   முயற்சித்போதிலும் அப் பந்து கோலினுள் செல்ல வட மாகாணம் 1 - 0 என்ற கோல் அடிப்டையில் முன்னிலை அடைந்தது.

இடைவேளை நெருங்கும்போது மத்திய களத்திலிருந்து வீ. கீதன் மிக நேர்த்தியாக பரிமாறிய பந்தை முன்நோக்கி நகர்த்திச் சென்ற கண்ணன் தெனுஷன், எதிரணி கோல்காப்பாளரை கடந்துசென்று மிகவும் அலாதியாக கோல் போட இடைவேளையின்போது வட மாகாணம் 2 - 0 என்ற கொல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் சுமார் 10 நிமிடங்கள் வரை ஆட்டம் மந்த கதியில் நடைபெற்றது. எனினும் 59ஆவது நிமிடத்தில் வட மாகாண அணித் தலைவர் மரியதாஸ் நிதர்சன் 2 தடவைகள் முயற்சித்து கோல் போட்டு, இந்த சுற்றுப் போட்டியில் தனது கோல் எண்ணிக்கையை 7ஆக உயர்த்தினார்.

அதன் பின்னர் போட்டியில் அவ்வப்போது முரட்டுத்தனமாக இரண்டு அணி வீரர்களும் விளையாடியதால் வீரர்களுக்கு மத்தியஸ்தர் நிவொன் ரொபேஷ் ஆலோசனைகள் வழங்கி அவர்களை அமைதிப்படுத்த முயற்சித்தார்.

எனினும் போட்டியில் சூடுபிடிக்க மஞ்சள் அட்டைகளை இரண்டு அணி வீரர்களுக்கும் காட்டுவதைத் தவிர மத்தயஸ்தருக்கு வேறு வழி இருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து அபரா ஆற்றல்களை வெளிப்படுத்த முயற்சித்த தென் மாகாணம் 85ஆவது நிமிடத்தில் 19 வயதின்கீழ் வீரர் கேஷான் துமிது மூலம் ஆறுதல் கோல் ஒன்றைப் போட்டது.

அதன் பின்னர் மேலும் கோல் போடுவதற்கு தென் மாகாணம் எடுத்த முயற்சிகள் கைகூடாமல் போக வட மாகாணம் அங்குரார்ப்பண சுதந்திர கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் சம்பியனானது.

போட்டி முடிவில் வடக்கு மற்றும் தெற்கு வீரர்கள் கைலாகு கொடுத்து தங்களது மகிழ்ச்சிகயை பகிர்ந்தகொண்டமையும் இருபுறமாக அணிவகுத்து கரகோஷம் எழுப்பியமையும் இரு பிரதான சமூகத்தினருக்கு இடையிலான சகோதரத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

தங்கப் பாதணி விருது - வட மாகாண அணித் தலைவர் மரியதாஸ் நிதர்ஷன்

சம்பியன்  வட மாகாண   அணிக்கு சுதந்திரக் கிண்ணத்துடன் 19 இலட்சம் ரூபா பணப்பரிசும் வீரர்கள், அதிகாரிகளுக்கு தங்கப் பதக்கங்கங்ளும் வழங்கப்பட்டன. இரண்டாம் இடத்தைப் பெற்ற தென் மாகாண அணிக்கு கிண்ணத்துடன் 9 இலட்சத்து 50,000 ரூபா பணப்பரிசும் வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது.

அதி சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருது - வட மாகாண அணித் தலைவர் மரியதாஸ் நிதர்ஷன்

அத்துடன் சுற்றுப் போட்டியில் அதிக கோல்கள் (7) போட்டமைக்கான தங்கப் பாதணி விருதையும் அதி சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதையும் வட மாகாண அணித் தலைவர் மரியதாஸ் நிதர்ஷன் வென்றெடுத்தார்.

வளர்ந்துவரும் வீரருக்கான விருது - கிழக்கு மாகாண கோல்காப்பாளர் மொஹமத் முர்ஷிப்

கிழக்கு மாகாண கோல்காப்பாளர் மொஹமத் முர்ஷிப் சிறந்த கோல் காப்பாளருக்கான தங்கக் கையுறை விருதையும் அதே அணியைச் சேர்ந்த மொஹமத் முர்ஷித் வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் வென்றெடுத்தனர். இந்த நால்வருக்கும் தலா 10,000 ரூபா பரிசும் கிடைத்தது.

இதேவேளை, நேர்த்தியான விளையாட்டுக்கான பெயார் ப்ளே விருது கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட்டது.

இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டு பிரதான பரிசுகளை வழங்கியதுடன் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர், செயலாளர் நாயகம் ஓய்வுநிலை பிரதி பொலிஸ் மாஅதிபர் உப்பாலி ஹேவகே, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், யாழ். கால்பந்தாட்ட லீக் தலைவர் ஆர்னல்ட் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35