(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் யாழ்.மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்னால் வேலுப்பிள்ளை பிரபாகரனது உருவம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து இதனை ஒட்டியது யார் என்பது தொடர்பாக விசாரனையை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இதனடிப்படையில் ஆஞ்சநேயர் ஆலய சூழலில் ஒட்டப்பட்டிருந்த கண்கானிப்பு கமராவின் மூலம் அதனை ஒட்டியது பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பெண் அடையாளம் காணப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரனையின் அடிப்படையில் ஜேர்மன் நாட்டில் இருந்து வந்திருந்த பெண்ணொருவரே இவ்வாறு ஒட்டியதாக தெரியவந்ததையடுத்து அவர் தங்கும் விடுதியொன்றில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை மேலதிக விசாரனைகளுக்கு உட்படுத்துவதற்காக அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்திருத்தார்.