இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமரின் பதவிக்காலம் 2023 வரை நீடிப்பு 

01 Mar, 2022 | 12:44 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக கடந்த வருடம் தெரிவான ஜஸ்வர் உமரின் பதவிக் காலத்தை 2023 வரை நீடிப்பதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 53 லீக்குகள் ஏகமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளன.

2021 ஜூலை மாதம் நடைபெற்ற இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாக சபைத் தேர்தலில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் ஜஸ்வர் உமர் தலைவராகத் தெரிவானார்.

ஒரு வருடகால பதவிக்கான தேர்தலுக்கே சம்மேளன பொதுச் சபையும் விளையாட்டுத்துறை அமைச்சும் அப்போது ஒப்புதல் வழங்கியிருந்தது.

எனினும், 2013ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் விளையாட்டுத்துறை சங்கங்களின் நிருவாகிகளின் பதவிக் காலம் 2 வருடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதனை ஆதாராமாகக் கொண்டு ஜஸ்வர் உமரின் பதவி காலத்தை 2023வரை நீடிப்பதற்கு கால்பந்தாட்ட சம்மேளன  பொதுச் சபை கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தத் தகவல் உட்பட தனது பல்வேறு கால்பந்தாட்டத் திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து ஜஸ்வர் உமர் விரிவாக விளக்கினார்.

2021 ஜூலை மாதம் ஜஸ்வர் உமர் பதவிக்கு வந்த போதிலும் ஜூலை முதல் அக்டோபர் மாதம்வரை அமுலில் இருந்த கொவிட் - 19 சுகாதார நெறிமுறை கட்டுப்பாடுகள், லொக்டவுடன், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தடை ஆகிய காரணங்களினால் அவரது கால்பந்தாட்ட கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.

எவ்வாறாயினும் ஜஸ்வர் உமரின் அயரா முயற்சியின் பலனாக கொவிட் யுகத்தில் இலங்கையில் முதலாவது பன்னாட்டு விளையாட்டுப் போட்டி 'நான்கு நாடுகளுக்கு இடையிலான பிரதமர் கிண்ண அழைப்பு கால்பந்தாட்டம்' என்ற பெயரில் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஜஸ்வர் உமர் தலைமையிலான கால்பந்தாட்ட சம்மேளனம், இதனிடையே தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டியிலும் இலங்கையைப் பங்குபற்ற செய்திருந்தது.

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடியதன் பலனாக உலக தரவரிசையில் முன்னேற்றத்தை நோக்கி இலங்கை நகர ஆரம்பித்தது.

இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்த ஜஸ்வர் உமர், 23 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு கத்தாரில் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகளை செய்துகொடுத்திருந்தார். அதன் மூலம் 23 வயதுக்குட்பட்ட இலங்கை அணி ஆசிய கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றியது.

ஜஸ்வர் உமர் அத்துடன் நின்று விடாமல் கால்பந்தாட்டத்தில் பாலின சமத்துவத்தை பேணும் வகையில் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியைத் தேர்ந்தெடுத்து தெற்காசிய கால்பந்தாட்ட போட்டியிலும் பங்குபற்றச் செய்திருந்தார்.

இவை அனைத்தையும் 3 மாதங்களில் வெற்றிகரமாக நிறைவேற்றிய தனக்கு போதிய கால அவகாசம் வழங்கினால் இதனை விட அதிசயங்களை கால்பந்தாட்டத்தில் நிகழ்த்த முடியும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் நம்பிக்கை வெளியிட்டார்.

தனது மிகக் குறுகிய கால சாதனைகளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு மற்றும் பேரவைக் கூட்டங்களில் விளக்கிய ஜஸ்வர் உமர், தனக்கு 2 வருட பதவிக் கால உரிமை இருப்பதாகவும் அதற்கான அங்கீகாரத்தை வழங்குமாறும் கோரியிருந்தார்.

இதனை அடுத்து யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது ஜஸ்வர் உமரின் பதவிக் காலத்தை 2023வரை நீடிப்பதற்கு முந்தைய தலைவர் அநுர டி சில்வா உட்பட பொதுச் சபை உறுப்பினர்கள் அனைவரும்  ஏகமனதாகத் தீர்மானித்தனர்.

இதற்கு அமைய பேரவையில் அங்கம் வகிக்கும் உறப்பினர்களில் 81 வீதத்தினர் ஜஸ்வர் உமரின் பணிகளில் நம்பிக்கைக்கொண்டுள்ளனர் என்பது புலனாகியது.

எனவே அடுத்துவரும் மாதங்களில் புதிய பல முன்னெற்றகரமான திட்டங்களை ஜஸ்வர் உமர் அமுல்படுத்தி கால்பந்தாட்டத்தில் புதிய அத்தியாயத்தை உறுதிப்படுத்துவார் என கால்பந்தாட்ட சமூகத்தினர் நம்பிக்கை வெளியிட்டனர்.

இது இவ்வாறிருக்க, இலங்கையில் உள்ள 64 கால்பந்தாட்ட லீக்குகளுக்கும் போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக தலா 10 இலட்சம் ரூபாவை வழங்க தீர்மானித்துள்ளதாக ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

இதற்கு அமைய முதல்கட்டமாக 250,000 ரூபா வீதம் லீக்குகளுக்கு கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டதாகவும் மீதமுள்ள 750,000 ரூபாவை கட்டம் கட்டமாக வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35