ஐரோப்பாவை சூழ்ந்துள்ள போர் மேகங்கள் உக்ரைன் ஊடான அமெரிக்க – ரஷ்ய போருக்கு வழிவகுக்குமா ?

Published By: Digital Desk 3

25 Feb, 2022 | 05:11 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

உக்ரைன்  மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து அனைத்துலக நாடுகளினதும் பார்வை உள்ளன. ஐரோப்பாவை சூழ்ந்துள்ள போர் மேகங்கள் உக்ரைன் ஊடாக அமெரிக்க – ரஷ்ய போருக்கு காரணமாகி விடுமா என்பது மற்றுமொரு பேரச்சமாகும். 

அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின் அது மூன்றாம் உலக யுத்தமாக அமைவதுடன் அதனுடன் சார்ந்த இழப்புகள் வரலாறு கண்டிராத வகையிலேயே காணப்படும். மறுப்புறம் ஐக்கிய நாடுகள் சபை கட்டமைப்பின் இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது என்பது மற்றுமொரு பிரதிப்பளிப்பாகியுள்ளது.

ரஷ்ய – உக்ரைன் புவிசார் விடயங்களை கவனத்தில் கொள்ளும் போது ஐரோப்பாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் உள்ள பெரும் நிலபரப்பை கொண்ட நாடாகவே உக்ரைன் அமைந்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க இரு முக்கிய காரணங்கள் உள்ளன. அதாவது உக்ரைனின் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்பட கூடிய எல்லை பிரச்சினைகள். இந்த இரு பிரதான விடயங்களை மையப்படுத்தியே ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.

கருங்கடலில் உக்ரைனுக்கு சொந்தமான கிறிமியா தீபகற்பத்தினை 2014 ஆம் ஆண்டில் ரஷ்யா கைப்பற்றியது. மறுப்புறம் கிழக்கு உக்ரைன் எல்லை பகுதியை அண்மித்துள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய இரு மாநிலங்களையும் மறைமுகமாக ரஷ்யா நிர்வகித்து வந்தது. 

இந்த இரு மாநிலங்களிலும் உள்ள உக்ரைனுக்கு எதிரான பிரவினைவாத செயற்பாடுகளை தனக்கு சாதகமாக்கிய நிலையிலேயே ரஷ்யா நிழல் ஆட்சியாளனாக இருந்தது. அதேபோன்று இந்த இரு மாநிலங்களையும் இணைத்து டொன்பாஸ் பிராந்தியமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

இந்த பிராந்தியத்தின் முழு கட்டுப்பாடும் உக்ரைன் வசம் இருந்ததே இல்லை. மாறாக ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளது. டொன்பாஸ் பிராந்தியம் மற்றும் கிறிமியா தீபகற்பத்தில் வாழ்கின்ற மக்கள் ரஷ்ய மொழி மற்றும் கலாசாரம் என்பவற்றை பின்பற்றுபவர்களாகவே பெரும்பாலும் உள்ளனர். எனவே உக்ரைனை விட ரஷ்யாவை சார்ந்தவர்களாகவே இந்த மக்கள் உள்ளனர். இதுவும் ரஷ்யாவுக்கு சாதகமாகியது.

உக்ரைன் நீண்டகாலமாக சோவியத் ஒன்றிய நாடாகவே இருந்ததுள்ளது. 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை அடுத்து உறுப்பபு நாடுகளாக இருந்த 15 நாடுகளும் பிரிந்து சென்றன. இதன் பின்னரே உக்ரைன் சுயாதீன நாடாக தன்னை அங்கிகரித்துக்கொண்டது. இருப்பினும் ரஷ்யாவுடனான பிணைப்பிலிருந்து வெளிவர உக்ரைனுக்கு நீண்ட காலம் சென்றது. 

ஆனால் உக்ரைன் மீதான பிடியை தளர்த்த ரஷ்யா ஒருபோதும் விரும்ப வில்லை. அந்த நிலைமையை மாற்றி உக்ரைன் மேற்குலகு சார்ந்து செயற்பட ஆரம்பித்த நிலையில் எல்லைகளில் செயற்பட்ட உக்ரைன் எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களை ரஷ்யா தனக்கு சாதகமாக பயன்படுத்தியது.

அவ்வாறானதொரு ரஷ்ய ஆதரவுடைய  உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாதிகளே உலகின் வலிமையான கிளர்ச்சியாளர்கள் எனவும் கூறப்படுகின்றது. இந்த பிராந்தியத்தில் இரு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இவற்றின் முழுமையான கட்டுப்பாடு டொன்பாஸ் கிளர்ச்சியாளர்களின் வசமே உள்ளன. 

உக்ரைன் அரச படைகளிடம் இல்லாத அதி நவீன ஏவுகணைகள் டொன்பாஸ் கிளர்ச்சியாளர்களிடம் உள்ளன. கிளர்ச்சியாளர்களுக்கு உக்ரைன் அரச படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் உக்ரைன் விமானங்களை தாக்கியளிக்க இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. 

இதன் பின்னரே பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர 2014 ஆம் ஆண்டில் டொன்பாஸ் கிளர்ச்சிக் குழுவுக்கும்  உக்ரைனுக்கும் இடையில் மின்ஸ்க் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஓரிரு நாட்களின் பின்னர் மீண்டும் இரு தரப்புகளுக்கும் இடையில் மோதல் ஏற்படுத்தப்பட்டது.

2015 ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரைன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் சமாதான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டன. இந்த ஒப்பந்தம் மின்ஸ்க் 2 என அழைக்கப்பட்டது. இருப்பினும் இந்த ஒப்பந்தமும் நீடிக்க வில்லை. டொன்பாஸ் பிராந்தியம் சுயாதீன நாடாக அங்கிகரிக்க வேண்டும் என்பதே ரஷ்யாவின் எதிர்பார்ப்பாக இருந்தது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  டொன்பாஸ் பிராந்தியம் மற்றும் கிறிமியா தீபகற்பத்தினை விட்டுக்கொடுத்து விட கூடாது என்பதில் ரஷ்யா உறுதியாக இருந்ததுடன் இன்றைய மோதல் வரையிலும்  அந்த கொள்கையிலிருந்து மாறவில்லை.

உக்ரைன் ஸ்தீரமான ஆட்சியதிகாரத்தை கொண்ட நாடாக மாறினால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள் என்பதை ரஷ்யா கணித்திருந்தது. இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அது ரஷ்ய நலன்களுக்கு பாதகமாகி விடும்.  

அதேபோன்று உக்ரைனில் மோதல்கள் இருக்கும் வரைக்கும் ஐரோப்பிய ஒன்றியமுடனான ஒத்துழைப்பபுகள் வெற்றியளிக்காது என்பதும் ரஷ்யாவுக்கு தெரியும். எனவே டொன்பாஸ் பிராந்திய விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உக்ரைனுக்கும் ஒரு நிலைப்பாட்டிற்கு வருவது கடினமாகும் என்பதையும் ரஷ்யா முன்கூட்டியே கணித்திருந்தது.

உக்ரைனின் தற்போதைய ஜனாதிபதியான வோலோடிமிர் செலென்ஸ்கி நடுநிலையாக சிந்தித்து செயற்பட கூடியவர். எனவே தான் டொன்பாஸ் பிராந்திய பிரச்சினையை தீர்ப்பதற்கு உக்ரைன் ஜனாதிபதி புதிய ஒப்பந்தம் ஒன்றுக்கு இணக்கப்பாட்டை தெரிவித்திருந்தார். அதாவது சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் டொன்பாஸ் பிராந்தியத்திற்கு சுயாட்சியை வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார். 

சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதனை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவரையில் டொன்பாஸ் பிராந்தியத்தில் முழுமையான போர் நிறுத்தம் காணப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் உக்ரைன் ஜனாதிபதி முன்வைத்தார். 

மறுப்புறம் அனைத்து ரஷ்ய படைகளும் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக சர்வஜன வாக்கெடுப்பிற்கு முன்னர் கிழக்கு எல்லை பகுதியை முழு அளவில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே உக்ரைன் ஜனாதிபதியின் நிபந்தனைகளின் முக்கிய இலக்காக அமைந்தது.

ஆனால் சுயாட்சியை உறுதிப்படுத்தி விட்டு ஏனைய விடயங்களை பின்னர் கருத்தில் கொள்ளலாம் என்பதே ரஷ்யாவின் வலியுறுத்தலாக உள்ளது. இதனை ஏற்க உக்ரைன் விரும்ப வில்லை. ஏனெனில் டொன்பாஸ் பிராந்தியத்திற்கு சுயாட்சி அதிகாரங்கள் கிடைத்தால் அங்கிருந்து உக்ரைன் முழுவதுமாக ஸ்தீரமற்ற தன்மையை உருவாக்கலாம் என்பது ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி ஐயமாகியது. அது மாத்திரமன்றி டொன்பாஸ் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து முழு ஐரோப்பாவிற்கும் சவால் விடும் ரஷ்யா, அந்த பிராந்தியத்திற்கு சுயாட்சி வழங்கி விட்டால் நிலைமை இதைவிட பாரதூரமானதாக இருக்கும் என்பது மற்றுமொரு தரப்பு வாதமாகவும் உள்ளது.

இவ்வாறானதொரு நிலைமையிலேயே ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. இந்த போரிலிருந்து மீள்வதற்கு  உக்ரைன் நேட்டோ படைகளின் ஆதரவை எதிர்பார்த்துள்ளது. ஆனால் இதுவரையில் நேட்டோ படைகள் உக்ரைனுக்கு ஆதரவாக வரவில்லை. போலந்து , எஸ்தோனியா, லிதிவேனியா மற்றும் லாட்வியா போன்ற நாடுகளின் ஆதரவுக்கு  நேட்டோ படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

ஏனெனில் இவை அனைத்து நேட்டோ உறுப்பு நர்டுகளாகும். ஆனால் உக்ரைன் இன்னும் நேட்டோ அமைப்பின் ஒத்துழைப்பை பெறும் நாடே தவிர உறுப்பு நாடல்ல. எனவே ரஷ்யாவிற்கு எதிராக போருக்கு நேட்டோ படைகளின் ஒத்துழைப்பு உக்ரைனுக்கு இன்றியமையாததாகும். இந்தவொரு காரணத்தின் அடிப்படையில் தான் உலக நாடுகள் தம்மை தனித்து விட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ஏவ்வாறாயினும் டொன்பாஸ் பிராந்திய சுயாட்சி விவகாரத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இணக்கப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. மறுப்புறம் எந்தவொரு தரப்பும்  தற்போதைய நிலைமையிலிருந்து பின்வாங்குவதற்கு தயார் இல்லை. ரஷ்யா ஒருபோதும் பின்வாங்காது.

முன்னைய சோவியத் ஒன்றிய அதிகாரத்தை நோக்கியதான பிரதிப்பளிப்பாகவே விளாடிமிர் புடினின் உக்ரைன் மீதான படையெடுப்பு அமைந்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி பின்வாங்கினால் முன்னாள் உக்ரைன் ஜனாதிபதியான விக்டர் யானுகோவிச்சுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும். நெருக்கடியை தவிர்க்க ரஷ்ய ஆதரவை பின்பற்றினால் உக்ரைனில் பாரிய சிவில் எதிர்ப்பிற்கு முகம் கொடுக்கவும் நேரிடும். அதே போன்று யூரோமைடன் இயக்கத்தின் செயற்பாடுகளும் தலைத்தூக்கும்.

இது உக்ரைன் ஜனாதிபதிக்கு சாதகமான நிலைமையை உள்நாட்டில் தோற்றுவிக்காது. அதேபோன்று ரஷ்ய படையெடுப்புகளில் சீன ஒத்துழைப்புகள் தவிர்க்க முடியாத ஒன்றாகும். சீனாவின் இலக்கு 2030 இல் உலக பொருளாதாரத்தின் வல்லரசாகுவது. எனவே அமெரிக்காவுடனோ அல்லது வேறு எந்த உலக நாடுடனோ தற்போதைக்கு மோதல்களுக்கு செல்ல சீனா விரும்பாது. ஆனால் ரஷ்ய – அமெரிக்க போர் என்று வந்து விட்டால் அதனை சீனாவால் தவிர்க்கவும் முடியாது. எனவே இந்த அனைத்து காரணிகளையும் கவனத்தில் கொண்டு தான் உக்ரைன் மீது விளாடிமிர் புடின் படையெடுத்துள்ளார். மேற்குலக ஆதிக்கம் இருக்கும் வரையிலும் ரஷ்யா உக்ரைன் மீதான தனது பிடியை மேலும் வலுப்படுத்துமே தவிர ஒருபோதும் தளர்த்தாது.

கிழக்கு உக்ரைனின் அதிகாரம் விளாடிமிர் புடின் வசமே தற்போது உள்ளது. கடந்த 8 வருடங்களுக்கு  மேலாக கிறிமியா மற்றும் டொன்பாஸ்  பிராந்திய அதிகாரத்தின் பின்னணியில் புடினே இருந்துள்ளார். அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே புட்டின் குறித்த இரு பகுதிகளின் அதிகாரத்தை தன்வசப்படுத்திக்கொண்டுள்ளார். இங்கே இருப்பது பொருளாதார மூலோபாய சார்ந்த விடயங்கள். 

எனவே தான் போரை விட சமாதானம் எவ்வளவு சிறந்தது என பிரான்ஸ் ஜனாதிபதி எம்மேனுவேல் மெக்றோன் ரஷ்யா – உக்ரைன் மோதலை மையப்படுத்தி கூறியுள்ளார். இதனை விளாடிமிர் புடினும் அறியாமல் இல்லை என்பதே உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04