உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் : மைத்திரிபால சிறிசேனவுக்கு தண்டனை வழங்குவது பொருத்தமானது - அருட்தந்தை ஜுட் கிரிஷாந்த

Published By: Digital Desk 3

18 Feb, 2022 | 09:33 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலை தடுப்பதற்கான கட‍மையை செய்யத் தவறியதுடன்,  269 பேரின் உயிரைப் பறிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்ததன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தண்டனை வழங்குவது பொருத்தமானதாகும். 

உண்மையில், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் யாருக்கு பயனளித்தது? என கொழும்பு பேராயர் இல்லத்தின் பொது மக்கள் மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட் தந்தை ஜுட் கிரிஷாந்த கேள்வி எழுப்பினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவதைப் போன்று அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவரிடம் காணப்படுவதனாலேயா உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

2019  உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலை தடுக்காதிருந்தமை தொடர்பாக  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன நேரடி பொறுப்பை ஏற்க வேண்டும் என  சுற்றுலாத்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரான  பிரசன்ன ரணதுங்க கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தின்போது கூறியிருந்தார். 

இவ்வாறு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சரான பிரசன்ன ரணதுங்க உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் குறித்து தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் ஆராயுமாறு கோரி கொழும்பு மறை மாவட்ட அருட் தந்தையர்கள் குழுவொன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் எழுத்து மூல ஆவணமொன்றை சமர்ப்பிப்பித்திருந்தது.

இந்நிலையிலேயே, கொழும்பு கோட்டையிலுள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு நேற்றைய தினம் (17) அழைக்கப்பட்டிருந்த அருட் தந்தை ஜூட் கிரிஷாந்தவிடம் 3 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. 

இவ்விடயம் தொடர்பில் விசாரிப்பதற்காக  நேற்றைய தினம் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அருட் தந்தை  ஜூட் கிரிஷாந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"உயிர்த்த ஞாயிறு தின  குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு  முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தொடர்புடையவராவர் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சரான பிரசன்ன ரணதுங்க கடந்த  ஆண்டு நவம்பர் மாதத்தில் கூறியிருந்த கருத்து தொடர்பில் குற்றவியல் விசாரணையிடம் முறைப்பாடொன்று ‍பதிவு செய்திருந்தோம். இது தொடர்பில் விசாரிப்பதற்காக இன்றைய தினம் (நேற்று) அழைக்கப்பட்டிருந்தேன்.

அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சரான பிரசன்ன ரணதுங்க கூறிய விடயம் தொடர்பில் அவரிடம் வாக்கு மூலம் பெறுதாக சி.ஐ.டி.யினர்  தெரிவித்திருந்தனர்.  மேலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் உத்தியோகத்தர் நிலன்த்த ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?  தமது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தக்க வைப்பதற்காகவா முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? 

2019 உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலை தடுக்காதிருந்தமை தொடர்பாக  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன நேரடி பொறுப்பை ஏற்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பொறுப்புடன் கூறிக்கொள்வதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களம் விரைந்து செயற்படவேண்டும்.

பிரசன்ன ரணதுங்க என்பவர் அமைச்சரவை அந்தஸ்துடைய ஒருவர். அவரின் கருத்துக்களை எளிதாக விட்டு விட முடியாது. உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடி பொறுப்பை ஏற்க வேண்டும் என ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமையை இலகுவானதொரு விடயமாக பார்க்க முடியாது. அவரின் கருத்து தொடர்பில்  குற்றவியல் விசாரைணத் திணைக்களம் ஆராய வேண்டும். அவரிடம் ஏதேனும் ஆதாரங்களின்றி  அவ்வாறானதொரு கருத்தை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியிருக்க மாட்டார் என்பதை நாம் வலுவாக நம்புகிறோம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சி.ஐ.டி.க்கு அழைத்து விசாரிக்குமாறு அமைச்சர் பிரசன்ன கூறியிருந்த நிலைப்பாட்டில்தான் நாமும் உள்ளோம். அமைச்சர் தெரிவித்த கருத்து உண்மையாக இருக்கும் பட்சத்தில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினமன்று குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெறப் போவதாக அப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவுக்கு  புலனாய்வுத்துறையினர் தகவல் வழங்கியிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேவாலயங்களை இலக்கு வைத்து உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் இடம்பெறப்போவதான புலனாய்வுத் தகவல்கள்,  இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டிய அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவு  பிரதானிகள் மற்றும் உயர் அரசியல் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளபோதிலும், மேற்குறிப்பிட்ட தரப்பினர், தாக்குதலை தடுப்பதற்கான முறையான செயற்பாடுகளை செய்யாமை அல்லது தவறியமை அல்லது கடமையிலிருந்து தவறிய‍மை ஆகிய விடயங்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி விசாரணை ஆனைக்குழு அறிக்கையின் 295 ஆம், 296 ஆம் பக்கங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் உத்தியோகத்தர் நிலன்த்த ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிகை எடுக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. 

குண்டுத்தாக்குதல் நடைபெறப்போவதாக தெரிந்துகொண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டில் இருந்துள்ளமையானது, இந்த குண்டுத் தாக்குதல் சம்பவத்தை நடத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்மையே நடைபெற்றுள்ளது. இதுவொரு பாரதூரமான குற்றமாகும்.  

இவ்வாறான‍தொரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதனால், அவருக்கு அல்லது அவரின் அரசாங்கத்திற்கு அல்லது வேறொரு பிரிவினருக்கு பயனை பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த தாக்குதல் சம்பவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவத்தால், அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின்போது காணப்பட்ட அவரின் கட்சிக்கோ அல்லது அவருக்கோ (மைத்திரிபால சிறிசேன) பயனளித்தாக தோன்றவில்லை. உண்மையில் இந்த குண்டுத் தாக்குதல் சம்பவம் யாருக்கு பயனளித்தது. 

ஆகவே, மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி நாம்  கூறுவதற்கு அவருடன் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. மேலும், அவருக்கு தண்டணை பெற்றுக்கொடுப்பதற்காக மட்டுமல்ல.  உண்மைத் தன்மை வெளியே வரவேண்டும். அதற்காக அவரை சி.ஐ.டி.க்கு அழைத்து விசாரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலை தடுப்பதற்கான கட‍மையை செய்யத் தவறியதுடன்,  269 பேரின் உயிரைப் பறிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்ததன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு தண்டனை வழங்குவது பொருத்தமானதாகும்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59